தமிழ் සිංහල English
Breaking News

கொரோனாவிற்குப் பின்னரான ஒரு தேர்தல்: தமிழ் வாக்காளர்களே சிந்திக்க வேண்டும்..!!

நியூஸிலாந்தில் வசிக்கும் ஒரு நண்பர், முன்பு கொழும்பில் ஊடகத்துறையில் வேலை செய்தவர். என்னிடம் கேட்டார், “ஜனாதிபதி தேர்தலின் போது நீங்களும் சேர்ந்து இயங்கிய சுயாதீனக் குழு போன்ற ஒன்றை இம்முறை நாடாளுமன்றத் தேர்தலின் போதும் உருவாக்கினால் என்ன? ” என்று.

அவரிடம் நான் சொன்னேன் “உருவாக்கலாம் தான் ஆனால் அவ்வாறு உருவாக்கி கட்சிகளுக்கு என்ன சொல்வது?” ஏனென்றால் கடந்த 11 ஆண்டுகளாக கூட்டமைப்பு நாங்கள் எழுதிய எதையும் பேசிய எதையும் காதில் எடுத்துக் கொள்ளவில்லை.

தமிழ் மக்கள் பேரவையின் ஜனாதிபதி தேர்தலுக்கான சுயாதீனக் குழு முதலில் சந்தித்தது சம்பந்தரை. இச்சந்திப்பின் போது அவரிடம் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தும்படி கேட்டது. அப்பொழுது அவர் கேட்டார் ‘ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தினால் அவர் தோற்று விடுவாரே? வெல்ல மாட்டாரே?’ என்று. பிறகு கேட்டார் ‘ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தினால் தெற்கில் இனவாதிகள் மேலும் ஒன்று திரள்வார்கள். இது இனவாதிகளை பலப்படுத்தி விடாதா?’ என்று.

ஒரு தமிழ் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் ஏன் நிறுத்த வேண்டும் என்று திருநாவுக்கரசு நிலாந்தன் உட்பட பலரும் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்கள். திருநாவுக்கரசு 2005 ஆம் ஆண்டு இதுகுறித்து பொங்கு தமிழ் இணையத்தளத்தில் தனபாலசிங்கம் என்ற புனைப் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதற்கு விஞ்ஞானபூர்வமாக விளக்கம் அளித்திருந்தார். அதை சம்பந்தர் வாசித்திருக்கவில்லை போலும்.

அதன்பின், அதே கட்டுரையை சில மாற்றங்களோடு 2015ஆம் ஆண்டு அதே பெயரில் திருநாவுக்கரசு அதே இணையதளத்தில் மறுபடியும் எழுதியிருந்தார். அப்பொழுது நோர்வேயில் வசிக்கும் அரசியற் செயற்பாட்டாளர் ஆகிய அவருடைய மாணவர் ஒருவர் அவரிடம் கேட்டிருக்கிறார் ‘ஒரே கட்டுரையை சில மாற்றங்களோடு ஒரே பெயரில் ஐந்து ஆண்டுகளின் பின் ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று. அப்பொழுது திருநாவுக்கரசு கூறியிருக்கிறார் ‘ஐந்து ஆண்டுகளில் நமது அரசியலில் எதுவுமே மாறவில்லை. எனவே அதே கட்டுரையை திரும்ப வேண்டி வந்தது’ என்று. அக்கட்டுரையையும் சம்பந்தரோ அல்லது ஏனைய கூட்டமைப்புப் பிரமுகர்களோ வாசித்ததாகத் தெரியவில்லை.

அதற்குப்பின்னர், 2020 தேர்தலுக்காக 2019 நாங்கள் சம்பந்தரை சந்திக்கப் போனோம். அப்பொழுதுதான் அவர் எங்களிடம் மேற்கண்டவாறு கேட்டார். அதாவது ஒரு தமிழ் பொது வேட்பாளர் குறித்து ஏற்கனவே பலரும் எழுதியிருக்கும் ஒரு பின்னணியில் அதுகுறித்த அடிப்படை விளக்கம் எதுவும் இன்றி ஒரு மூத்த தலைவர் கேள்வி கேட்கிறார். அப்படி என்றால் தமிழில் தன்னைப் பற்றியும் தனது கட்சியைப் பற்றியும் தமிழ் அரசியலைப் பற்றியும் எழுதப்படும் அநேகமானவற்றை அவர் வாசிப்பது இல்லையா?

இதுதான் நிலைமை. இப்படிப்பட்டதொரு துர்ப்பாக்கியமான அரசறிவியல் சூழலில் ஒரு சுயாதீனக் குழுவை உருவாக்கி அதற்கு காசையும் நேரத்தையும் செலவழித்து கட்சித் தலைவர்களைச் சந்தித்து என்னத்தைச் சொல்வது? ஜனாதிபதி தேர்தலின்போது ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தமிழ் பேரத்தின் குறியீடாக நிறுத்துவது என்று சுயாதீனக் குழு சிந்தித்தது. ஆனால் எந்த ஒரு கட்சித் தலைவரும் அது குறித்து முன்கூட்டியே சிந்தித்திருக்கவில்லை. ஒரு சுயாதீனக் குழு சிந்தித்தபோது அதற்குச் சம்மதிக்க பெரும்பாலான கட்சித் தலைவர்கள் தயாராக இருக்கவில்லை.

அப்படியொரு தீர்க்கதரிசனமான சிந்தனை எதுவும் எந்த ஒரு கட்சித் தலைமையிடமும் இருந்ததாகத் தெரியவில்லை. இதை மறுவளமாகச் சொன்னால் தமிழ் பேரத்தை எப்படி நிலை நாட்டலாம் என்பது குறித்து கட்சித் தலைவர்கள் யாரிடமும் தீர்க்கதரிசனம் மிக்க சிந்தனைகள் எதுவும் இருந்திருக்கவில்லை என்பதைத்தான் எல்லாக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின்போதும் சுயாதீனக் குழு உணர்ந்துகொண்டது.

இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் இம்முறையும் அவ்வாறு கட்சித் தலைவர்களை நோக்கி வேண்டுகோளை விடுப்பது பயன்தருமா, பொருத்தமானதா? ஜனாதிபதி தேர்தலின்போது ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துமாறு எந்த ஒரு கட்சித் தலைவரையும் சுயாதீனக் குழுவினால் சம்மதிக்கச் செய்ய முடியவில்லை. இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தின் பின்னணியில் இம்முறையும் அப்படிப்பட்டதொரு சுயாதீனக் குழுவைவொன்றை உருவாக்கி கட்சித் தலைவர்களிடம் எதைக் கேட்பது?

கடந்த 11 ஆண்டுகளாக கூட்டமைப்பு நான்கு தடவைகள் உடைந்திருக்கிறது. முதலில் கஜேந்திரகுமார், அடுத்த உடைவு விக்னேஸ்வரன், அதன்பின் சுரேஷ், முடிவில் டெலோவில் இருந்து ஒரு பகுதி உடைந்துபோனது. இப்படியாக நான்கு தடவைகள் உடைந்த பின்னரும் கூட்டமைப்பு ஒரு பலமான கட்சியாகவே காணப்படுகிறது. இப்பொழுதும் அக்கட்சிக்குள் உட்பூசல்கள் மிகுந்து வருகின்றன. எனினும் வீட்டுச் சின்னத்தின் கீழ் கேட்டால்தான் வெல்லலாம் என்று நம்பும் வாக்கு வேட்டை அரசியல்வாதிகள் கூட்டமைப்பை தொடர்ந்தும் பாதுகாப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் கூட்டமைப்பு யார் சொல்லியும் எதையும் கேட்கப் போவதில்லை.

கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் அரசியல் வந்தடைந்திருக்கும் தேக்க நிலைக்கு கூட்டமைப்பே முழுப் பொறுப்பு. கடந்த 11 ஆண்டுகளில் தமிழ் அரசியலானது தலைகீழ் மாற்றத்தை அடைந்துவிட்டது. 2009இற்கு முன்னர் அரசியலில் ஈடுபடுவது என்பது உயிர் ஆபத்தானதாக இருந்தது. அக்காலகட்டத்தில் தியாகம் செய்யத் தயாரானவர்கள் மட்டுமே அரசியலில் ஈடுபட்டார்கள். ஆனால் 2009இற்குப் பின்னர் தியாகம் செய்யத் தயாரற்றவர்களும் நடிப்புச் சுதேசிகளும் பாதுகாப்பான கடந்தகாலத்தை பெற்றவர்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஆகிவிட்டார்கள். இப்பொழுது அரசியல் என்பது சேமிப்பது, உழைப்பு, வங்கிக் கணக்கை பெருக்கிக் கொள்வது, வாக்கு வேட்டை, வாக்கு வேட்டைக்காக எந்தப் பொய்யும் செல்லலாம். எந்த தியாகத்தையும் விற்கலாம், எந்த முகமூடியும் அணியலாம்.

அதாவது பொழிவாகச் சொன்னால் இப்பொழுது அரசியல் எனப்படுவது ஒரு பிழைப்பு. தேசியம் எனப்படுவது திருடர்கள் எடுத்தணியும் ஒரு முகமூடி. இப்படிப்பட்ட இழிநிலைக்கு தமிழ் அரசியல் வரக் காரணம் பெருமளவிற்கு கூட்டமைப்புத்தான். எனவே கூட்டமைப்பிடம் போய் ஒரு சுயாதீனக் குழு என்ன செய்ய வேண்டும் என்று கேட்பது ?

அதேசமயம், கூட்டமைப்பு பிழை விடுகிறது என்று கூறும் மாற்றுத் தரப்புக்கள் கடந்த 11 ஆண்டுகளாக என்ன செய்து வந்திருக்கின்றன? குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் கூட்டமைப்பிலிருந்து உடைந்து வந்த ஏனைய தரப்புகளையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. குறிப்பாக விக்னேஸ்வரனையும் கஜேந்திரகுமாரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர முடியவில்லை.

ஒரு குடையின் கீழ் வராவிட்டாலும் பரவாயில்லை ஆளுக்காள் பகிரங்கமாக மோதிக் கொள்ளாமலாவது விடலாம். ஆனால் கஜேந்திரகுமார் அணி விக்னேஸ்வரனையம் அவருடைய கட்சியையும் குறிப்பாக அவருடைய கூட்டுக்குள் நிற்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் அணியையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதனால் மாற்று அணிகளுக்கிடையே ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியவில்லை.

கடந்த 11 ஆண்டுகளாக கூட்டமைப்பிலிருந்து உடைந்துபோன தரப்புக்கள் தங்களை கூட்டமைப்புக்கு நிகராக அல்லது மாற்றாக அல்லது குறைந்தபட்சம் அச்சுறுத்தும் சவாலாக வளர்த்துக்கொள்ளத் தவறிவிட்டன. இப்பொழுது கூட்டமைப்புக்குள் முன்னெப்போதையும் விட உட்புகைச்சல்கள் அதிகரித்துள்ளன. கூட்டமைப்பு பலவீனமாகக்கூடிய நிலைமைகள் அதிகரிக்கின்றன.

ஆனால், கூட்டமைப்பை உடைத்து ஒரு மாற்று அணியை ஒரு புதிய திரட்சியாக மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் பிரமாண்டமான ஐக்கிய முன்னணியாக கட்டியெழுப்ப மாற்று அணிக்குள் பெருந்தலைவர்கள் யாரும் இல்லை. இப்படியாக தனக்குள் ஐக்கியப்பட முடியாத மாற்று அணிகளிடம் ஒரு சுயாதீனக் குழு எதைக் கூறலாம்?

இதுதான் பிரச்சினை. தமிழ் கட்சிகளிடம் ஒரு சுயாதீனக் குழு இதைச் செய், இதைச் செய்யாதே என்று கூறும் ஒரு நிலைமை இன்னமும் முழு வளர்ச்சி பெறவில்லை. ஒரு சிவில் அமைப்பு தமிழ் அரசியலின் மீது தலையீடு செய்து பெரிய திருப்பகரமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலைமை இப்பொழுது கொரோனாவுக்கு பின்னரான தமிழ் அரசியல் சூழலில் இல்லவேயில்லை.

எனவே, சுயாதீனக் குழுவோ அல்லது சிவில் சமூகமோ ஒரு விடயத்தை மட்டும் செய்யலாம். தமிழ் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கலாம். தமிழ் வாக்காளர்களை வழி நடத்தலாம். அல்லது குறைந்தபட்சம் தமிழ் வாக்காளர்களை விமர்சன பூர்வமாக சிந்திக்க வைக்கலாம். ஆனால் தேர்தலுக்கு கிட்டத்தட்ட 40 நாட்களே உள்ளன. ஒரு மக்கள் கூட்டத்தின் கருத்துலகத்தின் மீது அல்லது வாக்களிப்பு விருப்பத்தின் மீது செல்வாக்குச் செலுத்த இக்காலகட்டம் போதுமா?

Share this post:

Recent Posts