தமிழ் සිංහල English
Breaking News

வன்னியில் காணாமற்போனவர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வரலாம் என்கிறார் கோட்டபாய.!

காணாமல் போனோர் விவகாரத்தைச் சிலர் அரசியலுக்காகப் பொதுப் பிரச்சினையாக்க முயற்சிக்கிறார்கள் என கூறியுள்ள சிறிலங்கா ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அது தவறு எனவும் ஒரு சில பிரத்தியேகமான சம்பவங்களை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக ஒரு பொதுப் பிரச்சினையாக இதனைப் பார்க்கக்கூடாது எனவும் கூறியிருக்கின்றார்.

சிலவேளை, அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வரவும்கூடும். எனவே, இந்த விடயத்தை அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும் எனவும் கோட்டபாய கூறியிருக்கின்றார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் பகல் (05) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஜெனீவா பிரேரணையிலிருந்து இலங்கை விலகிக்கொண்டது ஏனென்பதை மேற்குலக நாடுகள் விளங்கிக்கொண்டுள்ளன. உள்ளகப் பொறிமுறையொன்றினூடாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்பதைச் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொருளாதார ஏற்றத்தாழ்வை அரசியலாக்கி கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் பொருளாதாரத்தில் சமவாய்ப்பு இல்லாமல், பாரபட்சம் நிலவியமைதான் எல்லாப் பிரச்சினைக்கும் அடிப்படை தென்னிலங்கையிலும் இந்த ஏற்றத்தாழ்வு இருந்தால்தான் கிளர்ச்சிகள் தோற்றம்பெற்றதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொருளாதாரத்தை மையமாக வைத்தே ஆரம்பத்தில் உமா மகேஸ்வரன் இயக்கம் தொடங்கியதாகவும் குறிப்பிட்டார்.

ஜெனீவா இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியதன் பின்னரான சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வீர்கள், உள்ளகப் பொறிமுறையைச் சிலர் நிராகரிக்கிறார்களே? என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த ஜனாதிபதி,

தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் சமவாய்ப்பு விடயத்தில் குறைபாடுகள் உள்ளன. இதனைச் சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சகலருக்கும் சமமான வாய்ப்பு இருந்தால், பிரச்சினை இருக்காது. சில அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக மக்கள் பகடைக்காய்களாக்கப்படுகிறார்கள். பிரச்சினைகளைத் தேடினால் தேடிக்கொண்டே போகலாம்.

காணாமல் போனோர் விவகாரத்தைச் சிலர் அரசியலுக்காகப் பொதுப் பிரச்சினையாக்க முயற்சிக்கிறார்கள். அது தவறு. ஒரு சில பிரத்தியேகமான சம்பவங்களை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக ஒரு பொதுப் பிரச்சினையாக இதனைப் பார்க்கக்கூடாது.

யுத்த காலத்தில் உயிரிழந்த படையினரைப்போல புலிகள் இயக்க உறுப்பினர்களின் சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

சரணடைந்தவர்களைக் காணவில்லை என்று சிலர் சொன்னாலும், யுனிசெப் நிறுவனம் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், எட்டுப்பேர் மட்டுமே படையினர் கொண்டுசென்றதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஏனைய சுமார் இரண்டாயிரம் சம்பவங்கள் புலிகள் இயக்கத்தில் செயற்பட்டுக் காணாமல்போனதாகத்தான் பதியப்பட்டுள்ளன. இதுதான் உண்மை. வேண்டுமானால், காணாமல் போனவர்களைச் சரியாக உறுதிப்படுத்திக்கொண்டு அவர்களுக்கு மரணச் சான்றிதழ் பெற்றுக்கொடுக்க முடியும்.

சிலவேளை, அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வரவும்கூடும். எனவே, இந்த விடயத்தை அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். – என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Share this post:

Recent Posts