தமிழ் සිංහල English
Breaking News

ட்ரம்பின் அடிவருடியாகும் மோடி.!

மெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் சமீபத்திய இந்திய விஜயம் இதர அமெரிக்க ஜனாதிபதிகளின் வருகையைப் போன்ற ஒன்றாக இருக்கவில்லை. இது ஓர் அரசு முறைப்பயணமாக இருந்தபோதிலும், அகமதாபாத்தில் மொடெரா அரங்கத்தில் நடைபெற்ற “நமஸ்தே ட்ரம்ப்” நிகழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சென்ற ஆண்டு அமெரிக்காவின் ஹௌஸ்டனில் நடைபெற்ற ‘ஹவுடி மோடி’ நிகழ்வின் இந்தியப் பதிப்பாகவே இது நடைபெற்றது. எனினும், இதனை ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியாக, தள்ளிவிடுவது என்பது சரியாக இருக்காது. ட்ரம்பின் அமெரிக்காவிற்கு, மோடியின் இந்தியா முற்றிலும் சரணாகதி அடைந்துவிட்டதை – அதாவது தத்துவார்த்தரீதியாகவும், அரசியல்ரீதியாகவும், யுத்ததந்திர ரீதியாகவும் மற்றும் ராணுவ ரீதியாகவும் – முற்றிலும் சரணாகதி  அடைந்துவிட்டதை உலகத்திற்குப் பிரகடனப் படுத்தி இருக்கிறது. இந்தோ-அமெரிக்க உறவுகளில் இவ்விரு தரப்பு வலதுசாரி அரசியலும் சித்தாந்தமும் இப்போது பசைபோல் ஒட்டிக் கொண்டிருப்பதைப்போல் இதற்கு முன் இருந்ததாகக் கூறுவதற்கில்லை. அமெரிக்காவில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது டிரம்புக்கு உதவும் விதத்தில் மோடி ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்.

அமெரிக்காவின் புவி அரசியல் போர்த்தந்திர உத்திக்கு, இந்தியாவின் நலன்களை முழுமையாக அடகு வைத்திடச் செய்வதே ட்ரம்ப் விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். இவரது வருகைக்குப் பின் இரு தரப்பினரும் வெளியிட்ட கூட்டறிக்கையில் இது போதுமான அளவிற்கு வெளிப்பட்டிருக்கிறது. ஒருங்கிணைந்த உலகளாவிய போர்த்தந்திரக் கூட்டு (The Comprehensive Global Strategic Partnership) என்கிற பிரகடனத்தின் பொருள். அமெரிக்காவின் போர்த்தந்திர, ராணுவ மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு இந்தியாவை முழுமையாக உட்படுத்துவது என்று பிரகடனம் செய்வதைத் தவிர வேறல்ல. இவ்வாறு இந்தியாவை, அமெரிக்காவின் ஒரு நம்பகமான போர்த்தந்திர மற்றும் ராணுவக் கூட்டாளியாக்கிடும் (strategic and military ally) குறிக்கோள் இந்தோ-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் போதே தெளிவாகிவிட்டது.

ஜனாதிபதி ட்ரம்ப் அகமதாபாத் பேரணிக் கூட்டத்தில் ஆற்றிய உரையின்போது, “அமெரிக்கா இந்தியாவின் பிரதான ராணுவக் கூட்டாளியாக இருந்திடும்” என்றும், “அந்த வழியில் அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது,” என்றும் பேசினார். இந்தியா ஏற்கனவே 15 பில்லியன் டாலர்களிலிருந்து 18 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களையும், ராணுவத் தளவாடங்களையும் அமெரிக்காவிடமிருந்து கடந்த பத்தாண்டுகளில் வாங்கியிருக்கிறது.

இந்தியா குறித்து ட்ரம்ப் இப்படியெல்லாம் பேசியுள்ளபோதிலும் இதற்குப் பின்னே வர்த்தகத்தில் இந்தியாவினை அது முரட்டுத்தனமாக நடத்திக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். அமெரிக்காவின் ஆயுத உற்பத்தியாளர்களிடமிருந்து மிகவும் விலை மதிப்புள்ள ராணுவத்தளவாடங்களை இந்தியா வாங்கிட வெண்டும் என்று தொடர்ந்து நிர்ப்பந்தம் அளித்து வருகிறது. இவரது வருகையின்போது, சுமார் 3 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள 24 எம்எச்-60ஆர் கப்பல்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆறு அபாசி ஹெலிகாப்டர்கள் (24 MH-60R naval helicopters & six Apache helicopters) வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Afbeeldingsresultaat voor trump and modi cartoons

அமெரிக்காவுடனான மூன்று முக்கியமான ராணுவ ஒப்பந்தங்களில் இரண்டு கையெழுத்தாகிவிட்டன. இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், மூன்றாவது ஒப்பந்தம் – அடிப்படைப் பரிவர்த்தனை ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Basic Exchange Cooperation Agreement) விரைவில் முடிவுறும் என்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வாறு மூன்று ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிவிட்டால் அதன்பின்னர் இந்தியாவின் ஆயுதப் படைகள் ஆசியாவில் இருக்கின்ற ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற அமெரிக்கக் கூட்டணி நாடுகளின் ஆயுதப்படைகள் போன்று மாறும். அவற்றுடன் இணைந்து, இயங்குதன்மை அடிப்படையில் (in terms of “interoperability”) தன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

கூட்டறிக்கையானது, அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் போர்த்தந்திரத்துடன் (Indo-Pacific strategy) மோடி அரசாங்கம் முழுமையாக ஒத்துப்போயிருப்பதையும் பிரதிபலிக்கிறது. அது, அமெரிக்கா-இந்தியா-ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளுக்கிடையே ஓர் அமைப்பை உருவாக்குவது குறித்தும் பேசுகிறது.

நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு முன்னணியிலும், அமெரிக்க ஹோம்லாண்ட் செக்யூரிடி துறை (US Department of Homeland Security)யுடன், ஒத்துழைப்பினை வளர்த்துக்கொள்ளும். இதன் காரணமாக நம் உள்நாட்டுப் பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்கப் பாதுகாப்பு ஏஜன்சிகளின் பங்களிப்பு அதிகரித்திடும் என நாம் எதிர்பார்த்திடலாம்.

இன்றையதினம் இந்திய-அமெரிக்க உறவுகளில் அமெரிக்கா அதிகம் சீண்டுவது வர்த்தக உறவுகளிலாகும். டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து எண்ணற்ற நடவடிக்கைகளை இந்தியாவிற்கு எதிராக எடுத்து வந்திருக்கிறது. இந்தியாவின் பொருள்களுக்கு வரி விதிப்பை அதிகரித்திருக்கிறது. இந்தியாவிற்கு அளித்து வந்த வர்த்தக முன்னுரிமைகளை (trade preferences) விலக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவையும் இதர வளர்முக நாடுகளையும் இனிவருங்காலங்களில் வளர்முக நாடுகள் என வகைப்படுத்திட வேண்டாம் என உலக வர்த்தக அமைப்பிற்கு கோரிக்கையை எடுத்துச் சென்றிருப்பதில் முன்னணியில் இருக்கிறது.

Afbeeldingsresultaat voor trump and modi cartoons

அமெரிக்கா, இந்தியாவை மிகவும் அநீதி விளைவித்திடக்கூடிய இ-வணிக ஒப்பந்தம் (e-commerce) ஒன்றில் கையெழுத்திட நிர்ப்பந்தம் அளித்துக்கொண்டிருக்கிறது. இதன்படி மருத்துவச் சேவைகளில் விலைக் கட்டுப்பாட்டை விதித்திடும் இந்தியாவின் கொள்கையை எதிர்க்கிறது. அமெரிக்காவின் நிபந்தனைகள் எதையும் இந்தியா ஏற்க முடியாத நிலையில் இருப்பதையே வெளியாகியிருக்கின்ற அறிக்கைகளிலிருந்து காண முடிகிறது. கூட்டறிக்கைகள், இரு நாடுகளுக்கு இடையேயும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக மட்டுமே பேசுகின்றன. வர்த்தகம், இ-வணிகம், தரவு உள்ளூர்மயமாக்கல் அல்லது கேந்திரமான எந்த விஷயமாக இருந்தாலும் அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக இந்தியா தன் நலன்களை முன்வைத்து பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு மோடி அரசாங்கத்திற்கு எவ்விதமான தைர்யமும் கிடையாது.

இந்தியாவின் போர்த்தந்திர சுயாட்சித்தன்மை மற்றும் ஒரு சுதந்திரமான அயல்துறைக் கொள்கையைப் பின்பற்றக்கூடிய வல்லமை கடுமையாகக் கட்டுப்படுத்தக்கூடிய விதத்தில் இந்தியா-அமெரிக்கா போர்த்தந்திர உறவுகளில் நிலைமைகள் சென்றடைந்திருக்கின்றன. சமீபத்தில், அமெரிக்கா, ஈரானின் உயர் அளவிலான ராணுவ அதிகாரி, ஜெனரல் சாலிமனி (Soleimani)யைப் படுகொலைசெய்தபோது அதனை இந்தியா கண்டிக்கவில்லை. முன்னதாக, ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரியபோது, மோடி  அரசாங்கம் உடனடியாக அதனை நிறைவேற்றியது. அதற்குப் பதிலாக இந்தியா இப்போது அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்றே இஸ்ரேல், பாலஸ்தீனத்திடமிருந்து ஆக்கிரமித்த பகுதிகள் அனைத்தையும் அநேகமாக தன்னுடன் இணைத்துக் கொள்ளும் விதத்தில் முன்மொழிந்துள்ள இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கு இடையேயான ஒருதலைப்பட்சமான அமைதி ஒப்பந்தத்தை இந்தியா விமர்சிக்கக்கூட முன்வரவில்லை. இதில் மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடிய அம்சம் என்னவெனில், ட்ரம்ப்பினுடைய அமைதி முன்மொழிவுத் திட்டத்தை இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பரிசீலித்திட வேண்டும் என்று இரு நாடுகளையும் இந்திய அயல்துறை விவகாரங்கள் அமைச்சகம் கேட்டுக்கொண்டிருப்பதாகும்.

இந்த அளவிற்கு இந்தியாவின் நிலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், இவ்வாறு இந்தியாவை சரணாகதியாக்கிடும் நடவடிக்கைகளை மோடி மேற்கொள்ளும் ஒவ்வொரு சமயத்திலும் அதனை என்னவோ மாபெரும் சாதனை போன்று ஆளும் தரப்பினரும் அதன் கார்ப்பரேட் ஊடகங்களும் பீற்றுவதுதான் மிகவும் வேடிக்கையாகும். ட்ரம்புக்கு அடிவருடியாக இருந்திடும் அணுகுமுறையை மோடி மேற்கொள்வதால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஏராளமாகும்.

Share this post:

Recent Posts