தமிழ் සිංහල English
Breaking News

சாய்ந்தமருது விவகாரம் அரைக்கால் ரவுசர் கழன்று அம்மணமான கதையாகி விடக் கூடாது – ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டும் விட்டது. இந்நிலையில், சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சாய்ந்தமருதுவில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் பொதுத் தேர்தலில் தாம் யாரை ஆதரிப்பது, யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பில் ஏலவே முடிவெடுத்துள்ளனர்.

இதன்படி, தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கௌரவ ஏ.எல். எம். அதாவுல்லாஹ் அவர்களை ஆதரிப்பதற்கும் சாய்ந்தமருதுவிலிருந்து முன்னாள் சிரேஷ்ட அரச அதிகாரியான ஏ.எல்.எம். சலீம் அவர்களை களமிறக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நான் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காத நிலையில், வேறு சில விடயங்களை தொட்டுச் செல்லவே விரும்புகிறேன்.

சாய்ந்தமருது என்பது தனியாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்யக் கூடிய மக்கள் பலத்தைக் கொண்டிராதபோதும் ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யும் தீர்மானமிக்க சக்தி கொண்ட ஊர் என்பது உண்மை. ஆனால், அதனை அடைவதற்கு ஒட்டுமொத்த ஐக்கியமான செயற்பாடும் கடின உழைப்பும் தேவை.

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சாய்ந்தமருதுவில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதாவுல்லாஹ் அவர்களை ஆதரிப்பதற்கும் முன்னாள் சிரேஷ்ட அரச அதிகாரியான சலீமை களமிறக்குவதற்கும் தீர்மானித்து அதன் வெற்றியை அறுவடை செய்ய வேண்டுமானால் அந்த ஊர் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும். ஓரணியில் நிற்க வேண்டும் என்ற யாதார்த்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தவறும் பட்சத்தில் வாக்குகள் பிரிந்தால் ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க சக்தி என்ற ஸ்தானத்தையும் இழக்க நேரிடும். இதுதான் சகசப்பான உண்மை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவ்வாறானதொரு கரு மேகக் கூட்டம் நிறைந்த நிலைமையை சாய்ந்தமருது அரசியலில் ஓரளவு அவதானிகக் கூடியதாகவிருந்தது. அந்த நிலைமை நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடருமானால் அரைக்கால் ரவுசர் கழன்று அம்மணமான கதையாகி விடும்.

ஜனாதிபதி தேர்தல் என்பது எமது நாட்டுக்கு தலைவராக ஒருவரை மட்டும் தெரிவு செய்யும் தேர்தல். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் என்பது எமது மாவட்டத்தில் எமது சமூகம் சார்பில் பிரதிநிதிகளைத் தக்க வைக்கும் அல்லது அதிகரிக்கச் செய்யக் கூடியதான தேர்தல் எனபதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனை இல்லாமல் செய்வதும் இருப்பைக் காப்பதும் நாங்கள்தான்.

எவரை ஆதரிப்பதாயினும் சரி, அந்த இலக்கு வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு ஒட்டுமொத்த மக்கள் சக்தி, ஆதரவு தேவை என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.

அது மட்டுமல்ல, சாய்ந்தமருது தீர்மானம் எங்காவது சறுக்கினால் நாம் இழக்கப் போவது அம்பாறை மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரையே என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விடயத்தில் சாய்ந்தமருது மக்கள் ஒற்றுமைப்பட்டுச் செயற்படாவிட்டால் திகாமடுல்ல தொகுதியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு நாடாளுமன்ற ஆசனத்தை வழங்கியவர்கள் என்ற குற்றத்துக்கும் பழிச் சொல்லுக்கும் நாம் ஆளாகி விடுவோம்.

இது எமது சமூகத்துக்குப் பாரிய இழப்பை ஏற்படுத்தும். அதாவுல்லாஹ், சலீம் என்பது இங்கு விடயம் அல்ல. ஒற்றுமையிலும் சமூகப்பற்றிலுமே கரிசனை கொள்ள வேண்டும்.

மேலும் அதாவுல்லாஹ்வை ஆதரித்தல், சலீமை களமிறக்குதல் என்ற விடயங்களுடன் அனைத்தும் முடிந்த விட்டதாகத் தீர்மானித்து திருப்தி கொள்ள முடியாது. அதே சாய்ந்தமருதுவில் ஏனைய கட்சிகளின் முக்கியஸ்தர்களும் தங்களது கட்சி சார்பில் பொதுத் தேர்தலில் களமிறங்குவர். அவர்களை ஆதரிக்கவும் அவர்களின் கட்சி ஆதரவாளர்கள் அங்குள்ளனர். எனவே வாக்குகள் பிரிதல் என்பது தவிர்க்க முடியாத விடயம். ஆனால் தவிர்க்கப்பட்டே ஆக வேண்டும்.

எனவே, இந்த விடயத்தை சாய்ந்தமருதுவின் ஒட்டுமொத்த வாக்களார்களே சிந்தித்துத் தீர்மானிக்க வேண்டும். இன்றேல் கரணம் தப்பினால் மரணம் என்பது நிச்சயம்.

கடந்த ஞாயிற்றுக்கிமை (01) இரவு நான் தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கௌரவ ஏ.எல். எம். அதாவுல்லாஹ் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிபோதும் இந்த விடயத்தை அவரிடம் தெரிவித்தேன்.

அதேபோன்று, முன்னாள் ராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கௌரவ எச்.எம். எம் ஹாரிஸ் அவர்களுடன் கடந்த திங்கட்கிழமை (02) தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோதும் இதனையே கூறினேன்.

கௌரவ எச்.எம். எம் ஹாரிஸ் அவர்கள் என்னுடன் பல விடயங்கள் தொடர்பில் தனிப்பட்ட முறையில் உரையாடியிருந்தாலும் ஒரு விடயத்தை மட்டும் அவரது அனுமதியில் இங்கு பதிவிடுகிறேன்.’சித்தீக்… . சாய்ந்தமருது தீர்மானம் என்பது எனக்கு ஒரு சவாலாக அமையாது’ என அவர் தனக்குரிய நம்பிக்கையை என்னிடம் வெளியிட்டார்.

சில வேளைகளில் அவர், சாய்ந்தமருது மக்களின் பலம், பலவீனம் என்பனவற்றை நன்கு உராய்ந்து பார்த்தே இவ்வாறு கூறியிருக்கலாம். அல்லது அங்குள்ள தனது கட்சி முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்களைக் கருத்தில் கொண்டும் அவர் என்னிடம் இதனைக் கூறியிருக்கலாம். இதனை விட அவர் ஒரு சிரேஷ்ட அரசியல்வாதி, அரசியலின் நெளிவு, சுழிவுகளை நன்கறிந்தவர். கல்முனை அரசியல் நிலைவரத்தில் சக்கை போட்டவர். எனவே அவரது கருத்தையும் நாம் தட்டிக்கழிக்க முடியாது.

எனவே, இந்த விடயம் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சாய்ந்தமருதுவில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்களின் தீர்மானத்தால் மட்டும் சரியாகி விடாது. தீர்மானிக்கும் சக்தியாக மக்களே செயற்பட வேண்டும்.

இங்கு அதாவுல்லாஹ், சலீம் என்பது விடயமல்ல.. அது கெளரவ ரவூப் ஹக்கீம் அவர்களாகவும் இருக்கலாம். கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்களாகவும் இருக்கலாம். யாரை ஆதரிப்பதாகத் தீர்மானித்தாலும் வெற்றி பெறச் செய்வதற்கான தீர்மான சக்தியாக இருக்கப் போவது சாய்ந்தமருதுவின் ஒட்டுமொத்த வாக்காளர்களே!

மேலும், கோழி திருடிய கள்வர்களும் கூட உலாவுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. – ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Share this post:

Recent Posts