தமிழ் සිංහල English
Breaking News

யாழ்- சென்னை விமானக் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக ஆராய்வு!

யாழ்ப்பாணம் – சென்னைக்கு இடையிலான விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் பரிசீலித்து நியாயமான முடிவொன்றை மேற்கொள்வதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கமைய நேற்று வியாழக்கிழமை முன்தினம் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் விமானப் போக்குவரத்து அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே அதிகாரிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படுகின்ற சென்னை விமான நிலையத்திற்கான விமானப் போக்குவரத்திற்காக பயணிகளிடமிருந்து பெருந்தொகையான விமான நிலைய வரி அறவிடப்படுகின்றமை தொடர்பாக கடந்த ஜனவரி 02ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்தில், கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு பயணங்களை மேற்கொள்வோருக்கான விமான நிலைய வரி 6,000 ரூபாவாக இருக்கின்ற போது, யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் பயணிகளிடமிருந்து 12,000 ரூபா அறிவிடப்படுகின்றமையை யாழ். மக்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற ஓரவஞ்சனையாகவே நோக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this post:

Recent Posts