தமிழ் සිංහල English
Breaking News

கனவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் ஆடும் கொடி – கருணாகரன்

கிளிநொச்சியில் எங்கள் தெருவில் மட்டும் இருபது வீடுகளுக்கு மேல் ஆட்களில்லாமல் உள்ளன. அவ்வளவும் வெளிநாடுகளிலுள்ளோரின் வீடுகள். பெரிய வீடுகள். சில வீடுகள் மாளிகை போன்றன. ஆடி, ஆவணி மாதங்களில் வரும் சமர்க்காலத்தில் மட்டும் இந்த வீடுகளில் வண்டி, வாகனங்கள், ஆளும் பேரும் எனப் பொலிவைக் காணலாம். மற்றும்படி பத்துப் பதினொரு மாதங்களுக்கு ஆட்களற்றுப் பூட்டப்பட்டிருக்கும். காவலுக்கு ஒரு முதியவர் இரவுகளில் தங்குவார். அல்லது வாரத்துக்கொரு தடவை வளவிலுள்ள பூஞ்செடிகளுக்கும் மரங்களுக்கும் நீர் விட்டு வீட்டைக் கூட்டித் துப்புரவு செய்வதற்கென யாராவது ஒருவர் வந்து போவார். இதை விட இந்த வீடுகளின் சொந்தக்காரர்களுக்கு ஏதாவது கொண்டாட்டங்கள், விசேசங்கள் என்றால் இடையில் அமர்க்களப்படும். இது கிளிநொச்சியில் மட்டும் என்றில்லை, புலம்பெயர்ந்திருப்போரைக் கொண்டிருக்கின்ற வடக்குக் கிழக்கில் உள்ள பல இடங்களிலும் உள்ள பொதுவான நிலைமை.

பூட்டப்பட்ட நிலையில் வீடுகள் இருப்பது பரவாயில்லை. அது குற்றமோ குறையோ இல்லை. அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளுக்கு துணையாகவோ அழகாகவோ இருக்கும். ஊருக்கும் ஒரு பொலிவைத் தரும். ஒவ்வொரு தெருவிலும் இரண்டோ நான்கோ என்று பெரிய பங்களாக்களிருந்தால் பார்க்கச் சந்தோசமாகத்தானே இருக்கும். ஒரு காலம் இந்த வீடுகளை ஊரிலுள்ள யாராவது வாங்கக் கூடும். அல்லது யாராவது பாவிக்க நேரலாம். எல்லாக் காலத்திலும் புலம்பெயர்ந்திருக்கும் உடமையாளர்கள் ஊருக்கு வந்து கொண்டாடிக் கொண்டிருக்க முடியுமா? முக்கியமாக ஆண்டு தோறும்?

இப்பொழுது ஊருக்கு வந்து போகக் கூடியவர்கள் முதுமை எய்தி மூப்படைந்து விட்டால் பிறகு யார்தான் வருசம் தவறாமல் வந்து போகப்போகிறார்கள்? பிள்ளைகளுக்கு அந்தளவுக்கு ஊர்ப்பிடிப்பும் கரிசனையும் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. விலக்காகச் சில பிள்ளைகள் தாய், தந்தையின் விருப்பத்துக்கு ஏற்றமாதிரி தொப்புள் கொடிக்கு நீர் விட்டுக் கொண்டிருக்கலாம். இது எல்லோருக்கும் சாத்தியமே இல்லை.

இந்தச் சூழலில் ஊரவர்களில் யாருக்கோதான் இந்த வீடுகள் பலன் கொடுக்கும். ஆகவே வீடுகளையிட்டு நாம் அதிகமாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், பல காணிகள் ஆட்களில்லாமல் செடியும் புதரும் காடுமாக உள்ளன. அந்தக் காணிகளில் – புதரில் – நரியும் எலியும் பாம்பும் காட்டுப் பூனையும் கீரியும் என்று எல்லாமே விளைந்து கிடக்கின்றன. அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு இதெல்லாம் பெருந்தொல்லை. ஆடு மாடு, கோழி என எதையும் வீட்டில் வளர்க்க முடியாது. பாம்பு, பூச்சி, நுளம்புத் தொல்லை வேறு. டெங்குப் பீதி வேறு. இதைப்பற்றி யாரிடம் முறையிடுவது?

“இப்படிக் காணிகளை ஏன் காடு பத்த விடுகிறீங்கள்? துப்புரவு செய்யலாமே!” என்றால், “ஓம் செய்கிறோம்” என்று சொல்லி ஒரு தடவையோ இரண்டு தடவையோ துப்புரவாக்குவார்கள். ஆனால், அடுத்த மழை பெய்ய மறுபடியும் புதரும் காடுமாகி விடும் வளவெல்லாம். தொடர்ந்து இதைத் துப்புரவாக்கிக் கொண்டிருப்பதற்குச் சாத்தியமில்லை. அப்படிச் செய்வதாக இருந்தால் ஆண்டுக்கு இரண்டு தடவையாவது செய்ய வேணும். இதற்குப் பெரிய செலவாகும். வருமானமில்லாத செலவு. இதை யாரும் தொடர்ந்து செய்து கொண்டிருக்க மாட்டார்கள். ஆகவே ஒன்றிரண்டு தடவைக்கு மேல் அவர்களும் செய்வதில்லை. இதை யாரும் வற்புறுத்துவதுமில்லை. ஆனால், ஊரில் அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் ஓயாமல் திட்டிக் கொண்டும் புறுபுறுத்துக் கொண்டுமிருப்பார்கள்.

காடு மண்டினாலும் காணி இருக்கட்டும் என்பதற்குக் காரணம், பரம்பரைக் காணியை (குடும்பச் சொத்தை) எப்படிக் கைவிடுவது என்ற ஒரே ஆசைதான். பெற்றோரின் சொத்து. அல்லது விலை கொடுத்து வாங்கிய உடமை. இள வயதில் வளர்ந்தும் வாழ்ந்துமிருந்த வீடு. அல்லது செய்த தோட்டம் என்று ஏதாவது ஒரு சென்ரிமென்ற் இதில் உள்ளோடியிருக்கும். இதனால் என்ன விதப்பட்டும் காணியைக் கைவிடக் கூடாது என்ற உள்ளெண்ணம் ஆழத்தில் வலை பின்னிக் கிடக்கும். இந்த எண்ணத்தின் பின்னே இருப்பது ஒரு வகையான பெருமிதம். ஒரு வகையான இரத்த பந்தம். ஊருறவு. ஊரோடு பந்தத்தை வைத்துக் கொள்ள ஏதோ ஒன்று வேணுமல்லவா. இதிலே இன்னொரு வேடிக்கையான உண்மையும் உண்டு. ஒரு காலத்தில் வெளிநாடு செல்வதற்காக கையில் இருந்த நிலத்தை விற்று அல்லது வீட்டை ஈடு வைத்துக் கொண்டு புறப்பட்டவர்களுமிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்று அந்த நிலத்தை மீட்பது ஒரு கனவு. தாகம். இதனால் காடு பத்தினாலென்ன, கைவிடப்பட்ட நிலையில் இருந்தால் என்ன ஊரில் ஒரு சொத்திருக்கு என்று சொல்லிக் கொள்ள ஒரு பொருள் வேணும். அது எவ்வளவு பெரிய விசயம்!

இதனால் சில இடங்களில் அப்படியே காடு பத்திய காணிகளாகவே ஒரு தொடர் நீண்டிருப்பதைக் காணலாம். உதாரணம், ஊர்காவற்றுறையில் கரம்பன் கிராமம். இதில் 90 விழுக்காட்டினர் ஊருக்கு வந்ததாகவே இல்லை. அப்படி வந்து போனாலும் காணிகளைத் துப்புரவாக்கிச் சீர்ப்படுத்திய மாதிரி இல்லை. அவ்வளவு காணிகளும் காடு பத்திக் கிடக்கின்றன. சற்றுக் கூர்ந்து பார்த்தால், அரைப் பனை உயரத்துக்கு வளர்ந்துள்ள அந்தப் பற்றைகளுக்குள்ளே உடைந்த வீடுகளின் எச்சங்கள் தெரியும். ஒரு காலம் நிமிர்ந்திருந்த வீடுகள். இன்று உடைந்து சிதிலமாகி விட்டன. அந்தச் சிதிலங்களையும் காடு மூடி விட்டது. கரம்பனையோ ஊர்காவற்றுறையையோ முன்பின் அறியாதவர்கள் யாராவது வந்து பார்த்தால், இது ஏதோ பழைய புராதன குடியிருப்பு என்றுதான் எண்ணுவார்கள். அந்தளவுக்கு ஊர் ஒன்று அங்கே இருந்தது. அதுவும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊர், இலங்கையின் தலைநகரான கொழும்பின் வர்த்தகத்தைக் கட்டி ஆளக்கூடிய அளவுக்கு வல்லமையோடிருந்தது. பெரும் பெரும் பணக்காரர்களும் வர்த்தகர்களும் அங்கே இருந்தார்கள் என்றால் நம்பவே மாட்டார்கள்.

இப்படித்தான் சின்ன ரோம் என்று அழைக்கப்படும் சில்லாலை – இளவாலைப் பக்கமும். அங்கேயிருந்தவர்களில் 95 விழுக்காட்டினர் இன்று உலகமெங்கும் பறந்து பரந்து வாழ்கிறார்கள். இப்பொழுதும் கண்டம் விட்டுக் கண்டத்துக்கு சொந்தங்களைத் தேடியும் சொத்துகளைத் தேடியும் பறந்து கொண்டிருக்கிறார்கள். இடையிடையே ஊருக்கு வந்து தலையைக் காட்டி விட்டுப்போகிறார்கள். ஊருக்கு வரும்போது அவர்கள் கொண்டாடும் முதற் சொந்தம் இந்தக் காணியும் வீடுமே. வருகின்றவர்கள் பாஸ்போட்டுடன் தவறாமல் காணி உறுதியையும் கையோடு கொண்டு வருகிறார்கள். இங்கே வந்து காணியைப் பார்த்து உறுதிப் படுத்திக் கொண்டு சட்டவாளரிடம் போய் அதை மீள் நிலைப்படுத்துகிறார்கள். புதிய பதிவைச் செய்கிறார்கள். அல்லது பெற்றோருடைய பெயரில் இருந்தால் அதை மாற்றித் தங்கள் பெயரில் பதிகிறார்கள். சொத்து, உரித்து என்பதெல்லாம் எம்மவர்களைப் பொறுத்தவரை சாதாரணமான ஒன்றல்ல. அது இரத்தத்தோடு ஊறிய ஒன்று. இதனால்தான் இவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் கோயில்களுக்குச் செல்வது, கண்டி, நுவரெலியாவுக்குப் போவது என்பதற்கு முதல் சட்டவாளர் கந்தோர், காணிக்கச்சேரி என்பதெல்லாம் முதல் வரிசையில் குந்துகின்றன.

என்னதான் வசதி, வாய்ப்புகளோடு வாழ்ந்தாலும் பிறந்து வளர்ந்த வீட்டையும் ஊரையும் லேசில் இழந்து விட முடியாது. இதைப்பற்றி ஏராளம் ஏராளமாகப் பலரும் எழுதித் தள்ளி விட்டனர். “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா…?” என்று இளையராஜாவே பாடியிருக்கிறார். ஆனால், அப்படிப் பாடிய இளையராஜா அந்தச் சொர்க்கபுரியான பண்ணைப்புரத்துக்குப் போகவில்லை. போய் அங்கே குடியிருக்கப்போவதுமில்லை. ஆனால், மனம் அங்கே, அந்தக் கிராமத்தைச் சுற்றியே இருக்கும். அதைப்போலத்தான் நம்முடைய புலம்பெயர் மக்களுடைய மனமும் உள்ளுணர்வும் ஊரில், நாட்டிலேயே கட்டுப்பட்டிருக்கிறது. முளை அடித்துக் கட்டிய மாட்டைப்போல அது சுற்றிச் சுற்றி ஊரில்தான் தவண்டையடிக்கிறது. இந்த Nostalgia சாதாரணமானதல்ல. நினைவோடும் கனவோடும் பின்னிப்பிணைந்தது. இதற்கு ஊரில் உள்ள இந்த உறவு அறாதிருப்பதே பெரிய துணை. பேராறுதல். ஏதோ ஒன்று நமக்கென, நமக்கென்று, எங்களுடையதாக இருக்கிறது என்ற நம்பிக்கையும் உணர்வும் இந்தச் சமனிலையை வழங்கிக் கொண்டிருக்கிறது. இதனால்தான் பலர் இன்னும் ஊரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உறவுகளோடு வாழ்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போக வேண்டும். அதுவே நம் முன்னால் உள்ள பணியாகும். புலம்பெயர் சமூகத்துக்கும் நாட்டுக்கும் அல்லது ஊருக்கும் உள்ள உறவென்பது தனியே காணி, வீடு என்பதோடு மட்டுப்பட்டிருந்தால் அதனுடைய காலம் நீளாது. அது ஒரு சில தலைமுறையோடு தவிர்க்க முடியாமல் மட்டுப்பட்டு விடும். இதைக் கடந்து அது நீடிக்க வேண்டுமாக இருந்தால் முதலீடுகள் அவசியம். வீடு ஒரு முதலீடுதானே என்று யாரும் சொல்லலாம். அது வருவாயை ஈட்டக்கூடிய முதலீடல்ல. அதுவும் கவர்ச்சிகரமான வருவாயை. ஆகவே அதற்கப்பால் பண்ணைகள், தொழில் மையங்கள் போன்ற முதலீடுகளை புலம்பெயர் சமூகம் செய்ய வேணும். அது பிள்ளைகளை அந்த முதலீடுகளின்பால் ஈடுபட வைக்கும். தொடர்ச்சியைப் பேணத் தூண்டும். அதற்கான அவசியத்தை உண்டாக்கும். இதற்கு ஏற்றமாதிரி மொழியையும் சமநேரத்தில் ஊட்டலாம். மொழி முக்கியமானது. ஊருறவைத் தொடர்வதற்கு தாய் மொழி அவசியம் என்பதை மெல்ல மெல்ல உணர்வதும் உணர்த்துவதுமாக நீளட்டும். இதைக்குறித்துப் பல கோணங்களில் சிந்திப்பது அவசியம். ஏனென்றால்  காணி நிலத்துக்கும் அப்பால் நீள வேண்டியது நிலத்தோடும் அந்த நிலம்வாழ் மனிதர்களோடுமான உறவு. இடையறாத உறவு. இதை எப்படி வளர்த்தெடுப்பது என்பதே நமது கனவும் நினைவுமாகட்டும்.

Share this post:

Recent Posts