தமிழ் සිංහල English
Breaking News

பொதுஜன பெரமுன- சு.க. கூட்டணி தொடர்பில் கோட்டா, மஹிந்த, மைத்திரி, பஷிலுக்கு இடையில் பேச்சு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புதிய கூட்டணி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இதனை, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

வெளியிலிருந்து யார் விமர்சித்தாலும் இரு தரப்பும் இணைந்த கூட்டணி உருவாகும் என்று கூறிய அவர், “இணைத்தலைமைத்துவம், கூட்டணியின் பெயர் என்பவற்றில் மாற்றம் செய்வது தொடர்பில் ஆட்சேபனை கிடையாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிடும்போதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இரு தரப்பும் இணைந்த ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன கூட்டணிக்கு நிர்வாகிகள் நியமிக்க வேண்டும்.

புதிய கூட்டணியில் தனக்கு பதவி வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் கோரவில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திட்ட போது அவர் ஜனாதிபதியாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். கோட்டாபய ராஜபக்ஷ வேட்பாளராக இருந்தார். இணைத்தலைமை தொடர்பான யோசனையை பொதுஜன பெரமுனவே முன்வைத்திருந்தது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நிலைமை மாறியுள்ளது. கூட்டணி பதவிகள் குறித்து பேசி முடிவு காண முடியும். மாற்றங்கள் செய்ய நாம் தயாராக இருக்கிறோம்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகள் எப்பொழுது ஆரம்பிப்பது என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஜனாதிபதியுடன் பேச நேரம் கோரியுள்ளோம். இது தவிர பிரதமர், பஷில் ராஜபக்ஷ ஆகியோருடனும் கூட்டணி பற்றி பேச இருக்கிறோம். இதன் போது கூட்டணியின் எதிர்கால செயற்பாடுகள் பற்றி முடிவு செய்யலாம்.

எமக்கு மொட்டு சின்னம் தொடர்பில் பிரச்சினை கிடையாது. அந்த சின்னத்தின் கீழ் போட்டியிடலாம். ஆனால் புதிய கூட்டணிக்கு புதிய சின்னமொன்று இல்லாமல் போய்விடும்.

ஜனாதிபதி தேர்தலில் உருவாக்கிய சக்தியை பிரிக்க எமக்கு இடமளிக்க முடியாது. பரந்த கூட்டணி மூலமே பெரும்பான்மையான அரசு உருவாகும். பிரிந்து செயற்பட்டால் 113 ஆசனங்களுக்கு மேல் பெற முடியாத நிலை ஏற்படும். பலமான பாராளுமன்றமொன்றை ஜனாதிபதிக்கு பெற்றுக் கொடுப்பதை தடுக்க எவருக்கும் இடமளிக்க முடியாது. தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் விரைவில் இருதரப்பு பேச்சு ஆரம்பமாகும்.

ஜனாதிபதித் தேர்தலின் போது எம்மை அன்பாக வரவேற்றனர். பொதுத் தேர்தல் நெருங்குகையில் சிலர் சுதந்திரக் கட்சியை விமர்சிப்பது கவலைக்குரியது. எமது கட்சி ஆதரவாளர்கள் தான் இரு தரப்பிலும் பிரிந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.” என்றுள்ளார்

Share this post:

Recent Posts