தமிழ் සිංහල English
Breaking News

இதை மட்டும் செய்தால் போதும்… கொரோனா பற்றி அச்சப்படத் தேவையில்லை!

சீனாவில் பரவி வரும் கோரோனா வைரஸ் தொடர்பில் வடக்கு மக்கள் தேவையற்று அச்சமடையத் தேவையில்லை என்று மாகாண சமுதாய மருத்துவ பிரிவின் அதிகாரி மருத்துவர் எஸ்.சிவகணேசன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது; இலங்கையைப் பொறுத்த வரையில் சீனாவுடன் தொடர்புகள் காணப்படினும் கோரோனா வைரஸ் தொற்றுள்ள பிரதேசமாகக் காணப்படவில்லை. எனினும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இதுதொடர்பான தப்பான விடயங்கள் வெளியிடப்பட்டு மக்களிடையே தேவையற்ற பயமும் குழப்பங்களும் ஏற்படலாம் என்பதனால் இந்த தகவல்களை பொதுமக்களின் நன்மைகருதித் தெரிவிக்கின்றோம்.

தற்போது சீனாவில் குறிப்பிட்டதொரு மாகாணத்தில் சுமார் 3 ஆயிரம் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 80 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

எனினும் ஏனைய நாடுகளில் சீனா போன்று கோரோனா வைரஸ் நிரந்தரமான தொற்றுக் காணப்படவில்லை. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் சுகாதார ஊழியர்களிடம் கோரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்பட்டுள்ள போதும் சீனா போன்று ஆபத்துக்கள் இல்லை.

இலங்கையிலும் கோரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்கள் இனங்காணப்பட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகிய போதும் இதுவரை அந்த வைரஸ் தொற்றுக்குள்ளான எவருமே இனங்காணப்படவில்லை.

4 நோயாளர்களின் மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு ஏற்பட்டது கோரோனா வைரஸ் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்தவிடயத்தில் தேவையற்றுப் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

கோரோனா வைரஸ் தொற்று சாதாரணமாக தடிமன், காய்ச்சல் ஏற்படுவது போன்றத் தொற்றுத்தான். ஆனால் 2019ஆம் ஆண்டு பிற்பகுதியில் சீனாவில் புதிய வகை கோரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்மூலம்தான் தற்போது காணப்படுகின்ற நோய்நிலமை ஏற்படுகிறது.

இதுதொடர்பில் தற்போது ஆராய்ச்சிகளை சீன அரசும் உலக சுகாதார நிறுவனமும் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஊடாக மேலதிக தகவல்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கையில் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு உரிய தகவல்களை வழங்கும். எனினும் நாம் சில தற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியிருக்கும்.

கூடுதலாக சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களில் இதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் அவசியமாகும்.

சவற்காரமிட்டு கைகழுவுதல் மிகவும் முக்கியமானது. எத்தகைய தொற்று நோயாக இருந்தாலும் சவற்காரமிட்டு கைகளைக் கழுவுவதன் மூலம் 90 வீதமாக நோய் பரவாமல் தடுக்க முடியும்.

பொதுவாக வைரஸ் தொற்றுக்களைத் தடுக்கும் உணவு வகைகள் உள்ளன. மரக்கறிகள், பழங்கள்(புளிப்பான பழங்கள்) போன்றவற்றை உணவுடன் சேர்த்துக் கொள்வதன்மூலம் கோரோனா வைரஸ் தொற்றைக் குறைக்கக் கூடியதாக இருக்கும்.

அத்துடன், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவேண்டும். குறிப்பாக கட்டுநாயக்க விமான நிலையம், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்த்துக் கொள்வது உதவியாக இருக்கும்.

சுகாதார அமைச்சு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைரஸ் தொற்று நோயாளர்களை இனங்கண்டு கொள்வதற்கான நவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதால் நாம் தேவையற்ற வகையில் அச்சமடையத் தேவையில்லை- என்றார்.

Share this post:

Recent Posts