தமிழ் සිංහල English
Breaking News

பொதுத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் த.மு.கூ ஆராய்வு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆராய்ந்து வருவதாக அந்தக் கூட்டணியின் பிரதித் தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல் நிலை உருவாகியுள்ளதால், அந்தக் கூட்டணியில் போட்டியிடுவது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே, தனித்து களமிறங்குவது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆராய்ந்துள்ளது. இது தொடர்பில் அடுத்தவாரம் இறுதி முடிவெடுக்கப்படும்.“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வே.இராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக்கட்சிக்குள் நிலவுகின்ற தலைமைத்துவப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. பொதுத்தேர்தலை அக்கட்சி உறுப்பினர்கள் ஓரணியில் எதிர்கொள்வார்களா அல்லது இரு அணிகளாக பிரிந்து நின்று போட்டியிடுவார்களா என்பது பற்றியும் முடிவு இல்லை.

உட்கட்சி மோதல் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியால் தனக்கான வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மறுபுறத்தில் இறுதி நேரம் வரை காத்திருக்காமல் தற்போதிருந்தே தேர்தல் வேலைகளை ஆரம்பிக்கவேண்டிய சூழ்நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்கவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணில் உள்ளவர்களும், மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களும் ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் பரீசிலிக்கப்பட்டு வருகின்றது.

கூட்டணியின் உயர்பீடம் அடுத்தவாரம் கூடும்போது உறுதியான முடிவை எடுக்கக்கூடியதாக இருக்கும். தனித்து களமிறங்கிவிட்டு தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து செயற்படுவதா அல்லது கூட்டாகவே தேர்தலை எதிர்கொள்வதா என்பது பற்றியும் இதன்போது ஆராயப்படும்.” என்றுள்ளார்.

Share this post:

Recent Posts