தமிழ் සිංහල English
Breaking News

வடக்கில் உள்ள தமிழ்க் கட்சிகள் மலையகத்தில் போட்டியிட அனுமதிக்கமாட்டோம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில், வடக்கில் உள்ள தமிழ்க் கட்சிகள் மலையகத்திற்கு வந்து போட்டியிடுவதை தாம் அனுமதிக்க   மாட்டார்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள பரந்தபட்ட கூட்டணியிலேயே பொதுத்தேர்தலில் தமது தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும், அதை விடுத்து சிவாஜிலிங்கம் மற்றும் சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படத் தயாரில்லை எனவும் அவர் கூறினார்.

அக்கரப்பத்தனை பகுதியில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா என்பது கடந்த 5 ஆண்டுகளாக கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வந்தாலும் அத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை.

இன்று பொருட்கள், சேவைகளின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. இந்நிலையில் ஆயிரம் ரூபா வழங்கப்பட்டால் அது வரவேற்கபடக்கூடிய விடயமாகும்.

குறிப்பாக ஆயிரம் ரூபா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கி விட்டதாகவும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. இது வரவேற்கக்கூடிய விடயம். அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எந்தவித அரசியல், கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு வழங்குவோம்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும் சில பெருந்தோட்டங்கள் இருக்கின்றன. அவை எந்த நிலைமையில் உள்ளன? இந்நிலையில் தனியார் வசமுள்ள தோட்டங்களையும் கையகப்படுத்தினால் அவற்றை முறையாக நிர்வகிக்க முடியுமா என சிந்தித்தே இது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையில் அதாவது சஜித்தின் தலைமைத்துவத்தின் கீழ் உருவாகும் கூட்டணியில் போட்டியிடுவோம் என உறுதியளித்துள்ளோம். எனவே, சிவாஜிலிங்கம் அங்கம் வகிக்கும் கட்சியுடன் இணைந்து செயற்படமாட்டோம்.

மலையகத்தில் போட்டியிடமாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏனைய தமிழக்கட்சிகள் அங்கு வருவதை ஏற்கமாட்டோம். என்றார்.

Share this post:

Recent Posts