தமிழ் සිංහල English
Breaking News

விமானம் விழுந்து நொறுங்கியதில் 63 கனடியர்கள் உட்பட 176 பேர் பலி.!

ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து நேற்று 176 பேருடன் உக்ரேனின் கியவ் நகரை நோக்கிப் புறப்பட்ட உக்ரேனிய விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.

உக்ரேன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த போயிங் 737 ரக விமானம் மேலே கிளம்பிய சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

இதன் காரணமாக டெஹ்ரான் விமான நிலையத்துக்கு அருகே அது கீழ் நோக்கிப் பாய்ந்து நொறுங்கியது.

சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினர் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர் என்று  ஈரானிய சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் பேச்சாளர் ரேஸா ஜஃபார்ஸாடே தெரிவித்தார்.

“விமானம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததால் பயணிகளில் சிலரை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் மீட்புப் பணி ஊழியர்களை  அவசரமாக அனுப்பி வைத்தோம்,” என்று ஈரானிய அவசரகால சேவைகளின் தலைவர் பிரோசைன் கோலிவந்த் கூறினார்.

ஆனால் நெருங்க முடியாத அளவுக்கு தீ கடுமையாக இருந்ததால் ஒருவர்கூட உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று பின்னர் அவர் சொன்னார்.

மீட்புப் பணியில் 22 ஆம்புலன்ஸ் வாகனங்களும் நான்கு பேருந்து ஆம்புலன்ஸ் வாகனங்களும் ஒரு ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டன.

விமானத்தில் பயணம் செய்த 176 பயணிகளில் 82 பேர் ஈரானியர்கள் என்றும் 63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள் என்றும் உக்ரேனிய அமைச்சர் ஒருவர் சொன்னார்.

ஈரானில் உள்ள உக்ரேனிய தூதரகம், விமான இயந்திரத்தில்  தீ மூண்டதால்  விபத்து நிகழ்ந்தது என்றும்  பயங்கரவாதத் தாக்குதலாக இருக்காது என்றும் வலியுறுத்தியது.

தொலைக்காட்சியில் காட்டிய படங்களில் விமானம் பல பாகங்களாக உடைந்து சிதறி எரிந்து கருகிக் கிடந்ததைக் காண முடிந்தது.

மற்றொரு பக்கம் முகக்கவசம் அணிந்த மீட்புப் படை ஊழியர்கள் விமானத்திலிருந்து சடலங்களை மீட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் விமானத்தின் தகவல்கள் பதிவாகியுள்ள இரண்டு கறுப்புப் பெட்டிகளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை ஆராய்ந்தால் விமானம் விபத்துக்குள்ளான காரணம் ெதரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே விமான விபத்து தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

Share this post:

Recent Posts