தமிழ் සිංහල English
Breaking News

யார்தான் இந்தியக் குடிமக்கள்?

ந்நியன்’ திரைப்படத்தின் மையக் கதாபாத்திரம் மூன்று வெவ்வேறு ஆளுமைகளாக மாறிச் செயல்படும் தன்மைகொண்டது. தார்மீகக் கோபமும் கையாலாகாத புலம்பலுமாய் அம்பி, வாழ்க்கையை அனுபவிக்க விரும்பும் ரெமோ, தார்மீக ஆவேசத்துடன் சம்ஹாரம் செய்யும் அந்நியன். பன்முக ஆளுமைக் கோளாறாக அடையாளம் காணப்படும் மனநோயை மையமாகக்கொண்ட இக் கதைதான் பாஜகவின் அரசியல் ஆட்டங்களைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது.

அடுத்தடுத்த அதிரடிகளைப் பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. 2019 மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்ததிலிருந்தே அதன் விபரீத சாகசங்கள் தொடங்கிவிட்டன. அரசியல் சட்டப் பிரிவு 370ஐ நீக்கியதில் தொடங்கிய அதிரடி இப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் வடிவில் தொடர்கிறது. திரி பற்ற வைக்கப்பட்டுவிட்ட தேசியக் குடிநபர் பதிவேடு விவகாரமும் வெடிக்கக் காத்திருக்கிறது.

பிரிவு 370ஐ நீக்கியதற்கு எழுந்த எதிர்ப்பைக் காட்டிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் இயற்றப்பட்டதற்கான எதிர்ப்பு தீவிரமாகவும் பரவலாகவும் எழுந்துள்ளது. தில்லி, மேற்கு வங்கம், அசாம் முதலான மாநிலங்களில் மக்கள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இச்சட்டத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களிலும் போராட்டம் பரவலாக நடக்கிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு நாடு முழுவதும் பரவலாக எழும் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு அண்டை நாடுகளில் மூன்று நாடுகளிலிருந்து வந்த அகதிகளில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை வழங்க இந்தச் சட்டம் வழிசெய்கிறது. குடியுரிமை விஷயத்தை மத ரீதியாகப் பாகுபடுத்துவது ஏன், அதிலும் மூன்று நாடுகள் மட்டும் ஏன் என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்தியக் குடியுரிமையை மத அடிப்படையில், அதிலும் பக்கச் சார்புடன் அணுகுவது நாட்டைப் பிளவுபடுத்துவதற்குச் சமமானது.

இந்துக்களுக்கு மட்டும் என்று சொல்வதன் மூலம் குடியுரிமைக்கான அடிப்படையை மதரீதியானதாக மாற்ற முயல்கிறது என்னும் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அமித் ஷா, பாகிஸ்தானும் வங்கதேசமும் முஸ்லிம் நாடுகள். அங்கே முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட வாய்ப்பில்லை என்கிறார். இந்த நாடுகளில் அகமதியா பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களும் மியான்மரின் ரொஹங்கியா முஸ்லிம்களும் இலங்கை முஸ்லிம்களும் மதரீதியாகவும் இனரீதியாகவும் பாதிக்கப்படும் யதார்த்தத்தின் பின்னணியில் இந்த வாதம் அடிபட்டுப்போகிறது.  மேலும் எவரையும் – குடிமக்களை மட்டுமல்ல – மத அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது என்று கூறும் நமது அரசியலமைப்புக்குப் புறம்பாகவும் உள்ளது.

அண்டை நாடுகளில் மத ரீதியாகத் துன்புறுத்தப்படும் இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்குவதில் என்ன தவறு என்று அப்பாவியைப் போல அரசு கேட்கிறது. நாங்கள் யாருடைய குடியுரிமையையும் பறிக்கவில்லையே என்று ‘அம்பி’ வேஷம் போடுகிறது.

அசாமில் உள்ள நடைமுறையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டாலே இந்த அம்பி வேஷத்துக்குப் பின்னால் இருக்கும் ‘அந்நியன்’ முகம் தெரிந்துவிடும். வங்கதேசத்திலிருந்து அஸ்ஸாமில் குடியேறியவர்களைக் குறித்த பிரச்சினை அங்கே நீண்ட நெடுங்காலமாக இருந்துவருவது. அப்படி வந்தவர்களில் முஸ்லிம்கள், இந்துக்கள் ஆகிய இரு மதத்தவரும் அடங்குவர். இவர்களில் 2014க்கு முன்பு வந்த இந்துக்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்க இந்தச் சட்டம் வழி வகுக்கிறது. 2014க்கு முன்பு வந்த முஸ்லிம்களுக்குக் குடியுரிமையை மறுக்கிறது.

யாருடைய குடியுரிமையையும் பறிக்கவில்லை என்று மாய்மாலம் செய்கிறது பாஜக அரசு. ஆனால் ஒரே நாட்டிலிருந்து வந்து பல ஆண்டுகளாக இங்கே வசித்துவரும் இரு பிரிவினரில் ஒரு பிரிவினருக்குக் குடியுரிமையை மறுப்பதென்பது பறிப்பதற்கு இணையானதுதான் என்னும் உண்மையை  இந்த மாய்மாலத்தால் மறைக்க முடியாது.

பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் தீய நோக்கங்களுடன் ஊடுருவும் தீவிரவாதிகளைக் குறித்து அரசுக்கு இருக்க வேண்டிய எச்சரிக்கையே இந்நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களுக்குக் குடியுரிமை மறுக்கப்படுவதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. ஊடுருவலைத் தடுக்க வேண்டுமென்றால் எல்லைப்புறத்தில் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். அகதிகளாகவோ பிற காரணங்களுக்காகவோ யார் உள்ளே நுழைந்தாலும் நுழையும் இடங்களில் அவர்களை வடிகட்டும் முறை இருக்க வேண்டும். மாறாக, ஊடுருவலைக் காரணம் காட்டி ஒரு மதத்தினருக்கு மட்டும் குடியுரிமையை மறுப்பது பாகுபடுத்தும் அரசியலன்றி வேறல்ல.

பாஜக அரசு இயற்றியிருக்கும் இந்தச் சட்டம் இந்துக்களுக்கான இடமாக இந்தியாவை மாற்றும் முனைப்பை வெளிப்படுத்துகிறது. இந்தப் போக்கு இப்படியே நீடித்தால் இந்துக்களுக்கு மட்டுமேயான இடமாக இந்தியாவை முன்னிறுத்தும் நாள் அதிகத் தொலைவில் இருக்காது.மத அடிப்படையில் குடியுரிமையை வரையறுப்பது நமது அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானதென்பது ஒருபுறம் இருக்க, இதிலும் சீரான அணுகுமுறையின்றி இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலுள்ள இந்துக்களை விலக்கிவைக்கிறது பாஜக.

அண்டை நாடுகளில் மத ரீதியாகத் துன்புறுத்தப்படும் இந்துக்களுக்கு அடைக்கலம் தருவதுதான் நோக்கமென்றால் அந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை, பர்மா, மலேசியா போன்ற நாடுகளை ஏன் சேர்க்கவில்லை என்னும் கேள்விகளுக்கு மழுப்பல்களே பதில்களாகச் சொல்லப்படுகின்றன. எல்லைப்புற மாநிலங்களில் இருக்கும் இந்துக்களையும் சீக்கியர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் பாஜக அரசு, தமிழ் இந்துக்களுக்கு அந்த உரிமையை வழங்கத் தயாராக இல்லை. இலங்கைத் தமிழர்கள் இருக்கட்டும், இங்கிருந்து சென்ற மலையகத் தமிழர்களையும் கூலிகளாக உலகின் பல நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்ட தமிழர்களையும் அது இந்துக்களின் கணக்கில் சேர்த்துக்கொள்ளத் தயாராக இல்லை. எனில், இந்து என்னும் அடையாளமோ தேசம் என்னும் அடையாளமோ மாநில, மொழி வேற்றுமைகளைத் தாண்டியது அல்ல என பாஜக நினைக்கிறது என்றுதானே பொருள்?

அண்டை நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களுக்கான குடியுரிமையை வழங்குவதற்கு அடிப்படையாக இதுவரையில்லாத மத அடையாளத்தை பாஜக அரசு இப்போது அறிமுகப்படுத்துவதற்கு அதன் மதவாத அணுகுமுறையைத் தவிர உடனடிக் காரணம் ஒன்றும் உள்ளது. 2014இல் பாஜக அரசு அசாம் மாநிலத்தில் குடியுரிமைப் பதிவேடு தயாரிக்கும் திட்டத்தைத் தொடங்கியது. பின்னர் தேசிய அளவிலான குடியுரிமைப் பதிவேடு (National Register of Citizens) உருவாக்கப்படுமென்றும் அறிவித்தார்கள். 1971 மார்ச் 24-ஐ இறுதித் தேதியாக நிர்ணயித்து, அதற்கு முன்னதாக வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுமென அறிவித்தது. 1971க்குப் பின் வந்த நாற்பது லட்சம்பேர் இதனால் குடியுரிமையை இழந்தார்கள். அதில் வங்கதேச முஸ்லிம்கள் மட்டுமின்றி ஏராளமான இந்துக்களும் இருந்தார்கள். மேலும் கால நீட்டிப்புச் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இன்று அஸ்ஸாமில் பத்தொன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் குடியுரிமை அற்றவர்கள். இதிலும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்துக்கள்.

இந்தப் பின்னணியில்தான் 2014க்கு முன் வந்த இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் இந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இந்துக்களும் பெருமளவில் வெளியேறுவதைக் கண்ட பாஜக அரசு, முஸ்லிம்களை மட்டும் வெளியேற்றவே இந்தச் சட்ட ஆயுதத்தைக் கையில் ஏந்தியுள்ளது.

ஆனால் வெளியிலிருந்து வந்த இந்துக்கள், முஸ்லிம்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு இங்கே இடமில்லையென அஸ்ஸாம் மக்கள் குரல் எழுப்புகிறார்கள். தமிழர்கள் உள்ளிட்ட எந்தப் பிரிவினரின் உரிமைக் குரலையும் இதுவரை மதித்திராத அர்னாப் கோஸ்வாமியின் ‘தேசிய’ முகமூடியை மீறி அவருடைய அஸ்ஸாமியத் தசை ஆடுவதைப் பார்க்கும்போது இந்து  சட்டகத்திற்குள் மொழி அடையாளங்களைப் போட்டு மறைத்துவிட  முடியாது என்னும் யதார்த்தமும் உறுதிப்படுகிறது.

தேசிய அளவிலான குடியுரிமைப் பதிவேடு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகிய இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்படக்கூடியவை. யாருக்கும் குடியுரிமையை மறுக்கவில்லை என்னும் அப்பாவிக் குரலுக்குப் பின்னால் இருப்பது முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தும் திட்டம். ஒரு முஸ்லிம், தான் பயங்கரவாதி இல்லை என்று நிரூபித்தாக வேண்டும். இந்துவாக இருப்பவர் இந்துவாக இருப்பதே போதும் என்பதுதான் இந்த இரட்டைக் குழல் துப்பாக்கி தன் இலக்குக்கு வகுக்கும் இலக்கணம்.

நாடு முழுவதும் குடியுரிமைப் பதிவேட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்போது இந்தியக் குடிமக்கள் என்பதற்கான முறையான ஆவணங்களைத் தர இயலாத முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துவது எளிது. கல்வியறிவற்ற, ஏழை, எளிய மக்கள் பலரிடம் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட முறையான ஆவணங்கள் இருப்பதில்லை. அஸ்ஸாமில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டபோது உரிய சான்றிதழ்களைக் கொடுக்க இயலாமல் துன்புற்ற கல்வி அறிவற்ற, ஏழை, எளிய மக்கள் ஏராளம். வங்கதேச முஸ்லிம்கள் மட்டுமின்றி ஏராளமான இந்துக்களும் அதில் இருந்தார்கள். இப்போது இந்தக் கால நிர்ணயம் 2014ஆக மாற்றப்பட்டிருப்பதுடன், இந்துவாக இருப்பவர்கள் எந்த ஆவணமும் காட்ட வேண்டியதில்லையென்றும் ஆக்கப்பட்டிருக்கிறது.

நாளை தமிழகத்திலோ தெலங்கானாவிலோ குடியுரிமைப் பதிவேடு திட்டம் செயல்படுத்தப்படும்போது இதே அடிப்படையில் இந்துக்கள் எந்த ஆவணத்தையும் காட்ட வேண்டியிராது.  ஆனால், முஸ்லிம்களிடம் ஆவணங்களைக் கோரி, உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி அவர்களுடைய குடியுரிமையை மறுக்க இந்தச் சட்டமும் திட்டமும் வழிவகுக்கின்றன. அதாவது, காலம் காலமாக இங்கே வசித்துவரும் முஸ்லிம்கள் தங்கள் இந்திய அடையாளத்தை ஐயம் திரிபு அற நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படலாம். இங்குதான் அம்பி வேடம் முற்றாகக் கலைந்து அந்நியனின் கொலைவெறி அம்பலமாகிறது.

‘அந்நிய’னாக மாறித் ‘தீயவர்’களை அழிக்கும் நாயகன், உரிய மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு இயல்புநிலைக்குத் திரும்புகிறான். அதாவது, அப்படி மற்றவர்கள் நம்புகிறார்கள். அவனோ, அம்பி முகத்தை மாற்றாமலேயே ‘அந்நிய’ அவதாரம் எடுத்து துஷ்டர்களை சம்ஹரிக்கிறான். முன்பு பிறழ்வாக இருந்த அவனுடைய சம்ஹார வேகம் இப்போது இயல்பாக மாறிவிடுகிறது. பிறழ்வையே இயல்பாக மாற்ற முயல்கிறாரா ஷங்கர் எனக் காலச்சுவடில் முன்பு வெளியான தேவிபாரதியின் கட்டுரை முத்தாய்ப்பாகக் கேள்வி எழுப்பியிருந்தது. அதே கேள்வியை மோடி – ஷா கூட்டணியைப் பார்த்து எழுப்ப வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.

Share this post:

Recent Posts