தமிழ் සිංහල English
Breaking News

அமெரிக்கத் துருப்புகள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்.!

ஈராக்கிலுள்ள அமெரிக்க துருப்புகள் மீது ஏவுகணைகளால் தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை நடந்த அந்தத் தாக்குதல், ஆளில்லா வானூர்தியால் அமெரிக்கா ஈரானிய ராணுவ தளபதியைக் கொன்றதற்குப் பதிலடி என்று ஈரான் உறுதி செய்திருந்தது.

அமெரிக்காவின் தலைமையிலான கூட்டணிப் படைகள் தங்கியிருந்த குறைந்தது இரண்டு ஈராக்கிய ராணுவத் தளங்களின்மீது ஈரான் பன்னிரண்டுக்கும் அதிகமான ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக அமெரிக்கா தெரிவித்தது.

ஜெனரல் காசிம் சுலைமானி கடந்த வாரம்  கொல்லப்பட்டதற்குப் பழி தீர்க்கும் விதமாக இந்த ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக ஈரானிய   புரட்சிப் படை தனது அரசு தொலைக்காட்சி வழி தெரிவித்தது.

இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் மாண்டனர் என்ற விவரத்தை அமெரிக்க தற்காப்பு அமைச்சு வெளியிடவில்லை.

மேலும் அதிகமானோர் இறப்பதைத் தவிர்க்க மத்தியக் கிழக்கு வட்டாரத்திலிருந்து அமெரிக்கா வெளியேறவேண்டும் என்று ஈரான் எச்சரித்தது. ஈரானைத் தாக்குவதற்காக அமெரிக்கா பயன்படுத்தும் வட்டார நாடுகளும் தாக்கப்படும் என்றும் ஈரானிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

இந்த ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதில் தாக்குதலை அமெரிக்கா நடத்தினால், அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் இஸ்ரேல், துபாய், ஐக்கிய அரபு சிற்றரசுகள் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளிலும் தாங்கள் தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே  ஈரானிய வான்வெளியிலிருந்து தனது விமானங்களைத் திசைத்திருப்பியுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்தது. நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணிப்பதாகக் கூறிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தேவைக்கேற்ப விமானப் பயண பாதைகளை மாற்றியமைக்கும் எனக் கூறியது.

Share this post:

Recent Posts