தமிழ் සිංහල English
Breaking News

சி.ஐ.டி (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர பணி நிறுத்தம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சி.ஐ.டி) முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ( ஜனவரி 07) பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவரால் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல் மூலம் இலங்கை பொலிஸ் சேவைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு இரு வாரங்களுக்குள், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பாரிய குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அண்மையில் தென் மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபரின் உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

தனது இடமாற்றம் முறையற்ற வகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து அவர் கடந்த டிசம்பர் 21ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அண்மையில் கைதாகி விடுதலை செய்யப்பட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் ஷானி அபேசேகர உரையாடியதாக தெரிவிக்கப்படும் உரையாடலொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this post:

Recent Posts