தமிழ் සිංහල English
Breaking News

ஈரான் ராணுவ தளபதி இறுதி ஊர்வலத்தில் நெரிசல் : 35 பேர் பலி.!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஈரானின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்ட காசிம் சுலைமானியின் உடல் ஈராக்கில் இருந்து ஈரானுக்கு கொண்டுவரப்பட்டது.

சுலைமானியின் சொந்த ஊரான கெர்மான் நகரில் நேற்று இறுதி சடங்குகள் நடந்தன. சுலைமானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு லட்சக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் குவிந்தனர்.

அவர்கள் அனைவரும் கறுப்பு நிற உடையில் வந்திருந்தனர். இதனால் டெஹ்ரான் நகரமே கறுப்பு நிறமாக மாறியது போல காட்சியளித்தது. மக்கள் தங்கள் கைகளில் கறுப்பு மற்றும் ஈரான் நாட்டு கொடிகளை ஏந்தியபடி அமெரிக்காவுக்கு எதிராக கோ‌‌ஷங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர்.

இறுதி சடங்கு முடிவடைந்ததும், சுலைமானியின் உடல் பெரிய வாகனத்தில் வைக்கப்பட்டு, மக்கள் வெள்ளத்தில் மிதந்தவாறே கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த இறுதிச்சடங்கு மற்றும் இறுதி ஊர்வலத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் பல்வேறு இடங்களில் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்ததாகவும், 48 பேர் காயமடைந்திருப்பதாகவும் ஈரான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

Share this post:

Recent Posts