தமிழ் සිංහල English
Breaking News

கோலம் போட்ட பெண்கள் மீது வழக்கு.!

தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறதா? என்பது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்தார்.

புத்தாண்டையொட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோலம் போட்ட பெண்கள் மீது வழக்கு போடும் அலங்கோல ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது. மத்தியில் பெரும்பான்மை கிடைத்து விட்டதால் வேகமாக இந்துத்துவா கொள்கையை பா.ஜ.க. அரசு செயல்படுத்தி வருகிறது. சமஸ்கிருதம், இந்தி மொழியை எல்லா இடங்களிலும் திணிப்பதற்கான வேலைகள் நடக்கிறது.

ரெயில்வே தனியார்மயம் ஆக்கப்படாது என்று அந்த துறை மந்திரி பியூஸ் கோயல் அறிவித்து இருந்தார். ஆனால் 150 ரெயில்களுக்கு ஏல அறிவிப்பு விடப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு சொல்வதற்கும், செய்வதற்கும் எவ்வளவு வேறுபாடு?.

தமிழ்நாட்டில் விவசாயிகள் நிலைமை மிக பரிதாபமாக உள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். ஆனால் மத்திய அரசுக்கு கை கட்டி சேவகம் செய்வதால் தமிழக அரசுக்கு நிர்வாக திறமையில் முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் பணம் பெரும் அளவு கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. எத்தகைய முயற்சிகள் செய்திருந்தாலும் தி.மு.க. கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்டு லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் 38 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (சட்டசபை தேர்தல்) ஆட்சி மாற்றத்துக்கு, முன்னோட்டமாக இந்த ஆண்டு அமையும்.

தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்களை இலங்கையில் அவர்கள் வசித்த பகுதிகளுக்கே அனுப்ப வேண்டும் என்பது என்னுடைய கொள்கை ஆகும். அதே வேளையில் அவர்கள் இங்கேயே வாழ வேண்டும் என்று விரும்பினால் குடியுரிமை வழங்க வேண்டும்.

அமித் ஷா - மோடி

நரேந்திர மோடி, அமித்ஷா குறித்து நெல்லை கண்ணன் பேசிய கருத்து தவறு. அவர் அந்த வார்த்தையை பயன்படுத்தி இருக்க கூடாது. எனினும் அவர் அந்த நோக்கத்துடன் இந்த கருத்தை சொல்லி இருக்க மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வைகோவிடம், ‘கருணாநிதி- ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று கருதுகிறீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறும்போது, ‘காலங்கள் தலைவர்களை உருவாக்குகிறது. அந்த இலக்கணங்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்’ என்றார்.

பேட்டியின்போது ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வக்கீல் அணி செயலாளர் தேவதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Share this post:

Recent Posts