தமிழ் සිංහල English
Breaking News

2019-ம் ஆண்டில் அதிக கவனம் பெறாத படங்கள்.!

ஒரு படம் வெளியான அன்று, முதல் நாள் முதல் காட்சியை சினிமா ரசிகர்கள் ஆர்வமாகக் கண்டு களிப்பார்கள். ஆனால் எல்லோரும் முதல் நாளில் வரிசையில் நிற்க மாட்டார்கள்.  வார இறுதியில் அல்லது அதற்குப் பிறகு அதைப் பார்க்க பலர் விரும்புகிறார்கள். பெரிய ஹீரோக்களின் படம் என்றால் நிச்சயம் முதல் இரண்டு நாட்கள் திரையரங்குப் பக்கமே போக மாட்டார்கள். கூட்ட நெரிசலும், கூச்சலையும் தவிர்த்து நிதானமாக இரண்டு நாட்கள் கழித்து அல்லது வார இறுதியில்தான் பார்ப்பார்கள். ஒரு படத்தை எப்போது பார்த்தால் என்ன, அதேவிதமான உணர்வைத்தான் அது தரப்போகிறது.

ஆனால் அவசரகதியில் இயங்கும் இந்த  உலகில், ஒரு படம் திரையரங்குகளில் நீண்ட காலம் இருப்பதில்லை. பாலிவுட் நடிகர் பூமி பெட்னேகர் ஒரு நேர்காணலில் கூறியது, “சோஞ்சிரியா விமரிசனரீதியாக பாராட்டப்பட்டாலும், அது ஐந்து நாட்களிலேயே திரையரங்கிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.” என்றார்.

திரையரங்கில் ஒரு படத்தை நீங்கள் தவறவிட்டாலும் கூட டிஜிட்டல் வருகைக்குப் பின், அந்தப் படத்தை சில வாரங்களில் இணையத்தில் பார்த்துவிடக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது. அவ்வகையில் திரையரங்குகளில் ரசிகர்களின் கவனத்தை முழுவதும் பெறாத படங்கள் இவை.

டுலெட்

தமிழ் பார்வையாளர்கள் பொதுவாக ‘விருது படங்களுக்கு’ செல்ல மாட்டார்கள் என்ற கணிப்பு இங்கு நிலவுகிறது. எளிமையாகச் சொல்வதானால், சராசரி திரைப்பட பார்வையாளருக்கு இதுபோன்ற படங்கள் புரியாது என்பது பொதுவான நம்பிக்கை. தேசிய விருது பெற்ற திரைப்படமான டுலெட் உலகம் முழுவதும் சர்வதேச விழாக்களில் பங்கேற்று பலதரப்பட்ட ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது, மேலும் இது பார்வையாளர்களை அந்நியப்படுத்தாத வகையில் கூறப்பட்ட ஒரு சமூகப் பார்வையுள்ள படமாகும். படத்தின் இயக்குநர் செழியன் கூறுகையில், “இதுபோன்ற படங்களை ரசிகர்கள் பார்த்துப் பழக்கப்பட்டால், அவர்கள் அதனை விரும்பத் தொடங்கிவிடுவார்கள்.  அதன்பின் விருதுப் படங்கள் என்றாலே பயப்படுவதை நிறுத்திவிடுவார்கள்.” உண்மைதானே?

நெடுநல்வாடை

பழைய நினைவுகளில் மூழ்குவது என்பது அழகான விஷயம். அதிலும் குறிப்பாக வாழ்க்கை எவ்வளவு எளிமையாக அப்போதெல்லாம் இருந்தது என்ற நினைவுகள் இனிக்கும். நெடுநல்வாடை படத்தின் கதையும் இதுதான். நிஜ வாழ்வின் பல சம்பவங்களை நினைவுகூரும் ஏராளமான காட்சிகள் இப்படத்தில் உண்டு. நெல்லை அருகிலுள்ள  கிராமத்துக் காதலும், தாத்தா பேரனுக்கு இடையேயான பாசப் போராட்டமும், குடும்பத்துக்காக பேரன் தன் காதலை தியாகம் செய்வதுமென பல மென்னுணர்வுகளைப் பதிவு செய்கிறது நெடுநல்வாடை  இந்தப் படம் நிச்சயம் ரசிகர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும். ஒரு சினிமா ஆர்வலருக்கு வேறென்ன வேண்டும்?

மெஹந்தி சர்க்கஸ்

இன்றைய காலகட்டத்தில் காதல் அகராதிச் சொல்லாகிவிட்டதா? மெஹந்தி சர்க்கஸில் காட்சிப்படுத்தப்பட்ட காதல் எல்லாம் இன்றைய டிஜிட்டல் உலகில் சாத்தியம்தானா என்று படம் பார்த்தவர்களை வியப்பில் ஆழ்த்திவிட்டது.  ‘அந்த ஒரு உண்மையான காதலுக்கான தேடல்’ என்பது இப்போது மறைந்து விட்டதா? இத்தகைய கேள்விகளை எழுப்பும் இதுபோன்ற படங்களைப் பொக்கிஷமாகக் கருத வேண்டும். “முன்பு ஒரு காலத்தில்” எனத் தொடங்கி “எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர், சுபம்” என்று முடிவடையும் கதைகளை நாம் அனைவரும் விரும்பவில்லையா என்ன? உண்மையான காதல் எந்த வயதிலும் மீண்டும் உயிர்ப்பிக்கும் என்பதை நயமாகச் சொன்ன கதை மெஹந்தி சர்க்கஸ். நம் திரைப்பட இயக்குநர்களுக்கு இத்தகைய கதைகளை ரசனையுடன் விவரிக்கும் நம்பிக்கை உருவாக வேண்டும். மெஹந்தி சர்க்கஸ் இயக்குநர் சரவண ராஜேந்திரன் அதைத் திறம்படச் செய்துள்ளார்.

சுட்டுப் பிடிக்க உத்தரவு

திரில்லர் படங்களைப் பார்ப்பதிலுள்ள ஆர்வம் என்னவென்றால், படத்தின் எதிர்பாராத சம்பவங்கள் மற்றும் இறுதிக் காட்சிதான். முடிவை யூகிக்க முடியாத அளவுக்கு இருந்தால்தான் ஒரு திரில்லர் படம் வெற்றியடையும். அவ்வகையில் சுட்டுப் பிடிக்க உத்தரவு பல திருப்பங்களையும் உடையது. பார்வையாளர்களின் கவனத்தை தக்க வைத்த நல்ல முயற்சி இத்திரைப்படம்.

கென்னடி க்ளப்

இயக்குநர் சுசீந்திரன் ஸ்போர்ட்ஸ் படங்கள் எடுப்பதில் வித்தகர்.  அவரது அறிமுகப் படமான வெண்ணிலா கபடி குழுவைப் போலல்லாமல், கென்னடி கிளப்பில் சவாலான கதையை எடுத்துள்ளார். இந்தப் படம் பெண்கள் கபடி அணியை மையமாக வைத்து அது சார்ந்த பிரச்னைகளை உரக்கப் பேசுகிறது. ஒருவகையில் இது பிரச்சாரம் போலத் தென்பட்டாலும், சமூகத்தில் நிலவும் இத்தகைய நிலையை கேள்விக்குள்ளாக்குகிறது.  படத்தில் சசிகுமார் மற்றும் பாரதிராஜாவின் பங்களிப்பு வலு சேர்த்துள்ளது. இந்த ஆண்டின் சிறந்த ஸ்போர்ட்ஸ் படம் இது என்றால் மிகையில்லை.

இந்தப் படங்களைத் தவிர பக்ரீத், கென்னடி க்ளப், கே 13, 7, ஜூலை காற்றில், சத்ரு உள்ளிட்ட படங்களை ரசிகர்கள்  நெட்ப்ளிக்ஸ், அமேஸான் உள்ளிட்ட இணையவெளியில் பார்க்கத் தவறவேண்டாம்.

(ஆங்கிலத்தில் : அவினாஷ் ரவிச்சந்திரன், தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்)

Share this post:

Recent Posts