தமிழ் සිංහල English
Breaking News

தேர்தல் வெற்றியை நோக்கிய நகர்வுகள் – கருணாகரன்

புதிய அரசாங்கம் பொறுப்புக்கு வந்த பிறகு இரண்டு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. ஒன்று, பொதுமக்களின் நன்மைகளைக் குறித்த விடயங்கள்.

உதாரணமாக பாண், உருளைக்கிழங்கு, சமையல் எரிவாயு போன்ற பொருட்களின் விலைக்குறைப்பு தொடக்கம் ஜனாதிபதி திடீர் திடீரென பொது மக்கள் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை அவதானிப்பது, நடவடிக்கை எடுப்பது வரையில் நடப்பது.

மேலும் பொதுநலத்திட்டங்கள் மற்றும் இலகு நடைமுறை தொடர்பான மாற்றங்களை நோக்கிய பல்வேறு அறிவிப்புகள். ஏறக்குறைய 25 க்கு மேற்பட்ட திட்டங்கள்  ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இளைய தலைமுறையினருடைய வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உயர் கல்வி தொடர்பாக புதிய கொள்கை ஒன்றைப்பற்றிச் சிந்திப்பதாகவும் தெரிகிறது.

அத்துடன் ஊடகங்களின் சுயாதீனத்தன்மையை மேம்படுத்துதல் என்ற அறிவிப்பும் ஊக்குவிப்பும். குறிப்பாக அரச ஊடகங்கள் கூட சுயாதீனத்தன்மையுடன் ஜனநாயக அடிப்படையில் எந்தக் கருத்தையும் வெளியிடலாம். ஆனால், தேசத்தின் பாதுகாப்பைக் கவனத்திற் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டமை. இந்தத் தேசியப் பாதுகாப்பு என்பதற்கான வரவிலக்கணம் என்ன என்பது குறித்து தெளிவூட்டப்படவில்லை என்பது கவனத்திற்குரியது.

இரண்டாவது, அரசியல் நடவடிக்கைகள். குறிப்பாக, எதிரணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்றோர் மீதான சட்ட நடவடிக்கைகள். இருவரையும் கைது செய்து நீதி விசாரணைக்குட்படுத்துவது. இதனை அரசியல் பழிவாங்கல் என்று எதிரணி விமர்சிக்கிறது. ஐ.தே.கவின் தலைமைக்காரியாலயமான சிறிகோத்தாவில் இதைப்பற்றி ஒரு பத்திரிகையாளர் மாநாட்டையே ஐதே.முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் நடத்தியுள்ளன.

ஆகவே இந்த இரண்டும் புதிய அரசாங்கத்தின் போக்கினை ஓரளவுக்கு அடையாளம் காட்டுகின்றன. அப்படியென்றால், இனி வரும் காலம் எப்படியிருக்கும்? இதுவே இன்று எல்லோரின் அடி மனதிலும் எழுந்துள்ள கேள்விகளாகும்.

ஒரு பக்கத்தில் மக்கள் நலத்திட்டங்களை உருவாக்குதலும் நடைமுறைப்படுத்துதலும். இதில் அபிவிருத்தியே இலக்கு. அரசாங்கத்தின் தாரகக் கோட்பாடும் அதுவே. இனப்பிரச்சினைக்கான தீர்வையும் புதிய ஆட்சியாளர்கள் அபிவிருத்தியின் வழியாகவே பார்க்கிறார்கள்.

இது இன்று வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் ஒரு சிறப்பு உத்தி. இதற்கு எளிய உதாரணத்தை இங்கே சொல்ல வேண்டும்.

2014 இல் ஏ 9 நெடுஞ்சாலையை அமைத்தமை தொடர்பாக ஒரு சிறப்பு நிகழ்வு கிளிநொச்சியில் நடந்தது. அப்பொழுது ஜனாதிபதியாக இருந்தவர் மகிந்த ராஜபக்ஸ. அவருடைய பொறுப்பின் கீழேயே இருந்தது நெடுஞ்சாலைகள் அமைச்சு.

ஆகவே அந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி என்ற வகையிலும் துறைசார் அமைச்சர் என்ற அடிப்படையிலுமாக மகிந்த ராஜபக்ஸ கலந்து கொண்டார். கூடவே வீதியை நிர்மாணித்த மாகா என்ற சீன நிறுவனத்தின் பிரதிநிதிகளோடு சீன அரசுப் பிரதிநிதி ஒருவரும் கலந்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே அந்தச் சீன அரசுப் பிரதிநி சொன்னார், “அபிவிருத்திக்கு முக்கியமான ஒன்றாக இருப்பது தொடர்பாடல். அந்தத் தொடர்பாடலில் வீதிகள் முதன்மையானவை. இன்றைய உலகத்தில் தொடர்பாடலை நாம் எவ்வளவுக்கு விருத்தி செய்கிறோமோ அந்தளவுக்கு சமூகங்களுக்கிடையே நெருக்கமும் ஐக்கியமும் உருவாகிறது. இது பொருளாதாரம், வணிகம், கலை, பண்பாடு, கல்வி எனப் பல வழிகளில் பிறகு நிகழத் தொடங்கி விடும். ஹொங்கொங்கோடு சீனா ஏற்படுத்திக் கொண்ட வீதி வழித் தொடர்பு என்பது சீனாவோடு ஹொங்கொங்கை இரண்டறக் கலக்க வைத்துள்ளது. இந்த வீதி வழித் தொடர்பில் வணிகம் தொடக்கம் பொருளாதார உறவு, சமூக ஊடாட்ட உறவு எனப் பலவும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இன்று சீனாவும் ஹொங்கொங்கும் பிரிக்க முடியாத அளவுக்கு நெருக்கமடைந்துள்ளன. இதைப்போல இலங்கையிலும் பல முனைகளிலும் நீங்கள் தொடர்பாடலை உருவாக்குங்கள். அது உற்பத்தி, வணிகம் என்பதில் தொடங்கி சுற்றுலா, கலாச்சாரப் பரிவர்த்தனை எனப் பல முனைகளில் நிகழும். பிறகு நீங்கள் அதை நிறுத்த முயற்சித்தாலும் மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் பிறகு அவர்கள் அதிலேயே தங்களை மையப்படுத்தியிருப்பார்கள். அதில் தங்கியிருக்கும் நிலை வந்து விட்டதென்றால்  பிறகு அதை எப்படி அவர்களால் இழக்க முடியும்?” என்றார்.

ஆகவே இந்த ஆலோசனையின் வழியிலலேயே அரசாங்கம் சிந்திக்கிறது. இதில் அது நம்பிக்கையும் வைத்துள்ளதாகவே தெரிகிறது. இதன்படி ஆலோசனைக்கும் இந்த வழிமுறைக்கும் அடையாளம் அபிவிருத்தியே. அபிவிருத்தியின் மூலம் சமூகங்களுக்கிடையில் தொடர்பாடலை மேம்படுத்தலாம்.

அதேவேளை சனங்களின் தேவைகளை நிறைவேற்றி விட்டால் பிறகு அவர்களிடமிருந்து கோரிக்கைகளும் குரல்களும் எழாது. எதிர்ப்பும் உருவாகாது என்று சிந்திக்கப்படுகிறது.

இந்தச் சிந்தனையின் தடத்திலேயே காரியங்கள் திட்டமிடப்படுகின்றன. இலங்கையை ஒரு புதிய சூழலுக்குள் இட்டுச்செல்வதாக இந்தத்திட்டங்கள் காணப்படுகின்றன.

இவற்றின் நடைமுறைச் சாத்தியங்களைக் குறித்த கேள்விகள் உண்டு. ஆனாலும் தான் ஒரு வினைத்திறனுள்ள ஜனாதிபதி என்பதை கோத்தபாய ராஜபக்ஸ காண்பித்து வருகிறார். இதில் அவர் குறியாகவும் உள்ளார். தன்னுடைய திட்டங்களுக்கு ஏற்றமாதிரிச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தனக்கு அதிகாரங்கள் போதவில்லை என்று அவர் கூறுவதையும் நாம் இதனோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்.

அதாவது தன்னுடைய கனவுகளை நிறைவேற்றுவதற்கு உரிய அதிகாரம் தனக்கில்லை என்பதை அவர் நாசூக்காக மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் இந்தத் திட்டங்கள் தோல்வி கண்டால் அதற்குக் காரணம் தான் அல்ல. தனக்குரிய அதிகாரம் போதாமலிருந்ததே என்பதாகி விடும்.

மறுவளத்தில் இவற்றைச் செய்வதற்கு அதிகாரம் தேவை என்று வலியுறுத்துவதன் மூலமாக ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் கூட்டி விடலாம். தற்போதுள்ள 19 ஆவது திருத்தத்தை நீக்கி, 20 ஆவதை நோக்கிப் பயணிப்பதற்கான சூழலை உருவாக்கி விடலாம் என்பது.

ஆகவே அவருக்கு இரண்டும் லாபமாகவே உள்ளது. இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது?

இப்போதைய சூழலில் 19 திருத்தத்தை நீக்க முடியாது. அப்படிச் செய்ய வேண்டுமானால் அது பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகே முயற்சிக்கப்பட வேண்டியது. அதுவும் அப்போது அமையவுள்ள அரசாங்கத்தின் பலத்தைப் பொறுத்தது. அப்படிப் பலமான அரசாங்கம் ஒன்று (பொதுஜன பெரமுனவின் தலைமையில்) அமைந்தாலும் அப்போது கூட 19 ஆவதை மாற்றியமைக்க முடியுமா? என்பது கேள்வியே.

ஏனென்றால், 19 ஆவதை மாற்றி ஜனாதிபதிக்கு அதிகாரங்களைக் கூட்டினால் பாராளுமன்றம் வெறும் கல்லறையாகி விடும். பிரதமர் பொம்மையாகி விடுவார். எனவே இதை மகிந்த ராஜபக்ஸ விரும்புவாரா என்ற கேள்வியும் உண்டு.

அதற்கிடையில் எந்த வழியிலும் 19 ஐ நீக்க முடியாது. அதற்கான சூழலும் இல்லை. ஆகவே இது மெல்ல மெல்ல இந்த மாதிரித்தான் அசைந்து நகர்ந்து கொண்டிருக்கும்.

அடுத்த பொதுத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒரு கொந்தளிப்பான அரசியல் சூழலை எதிர்பார்க்கலாம். அரசாங்கத்துக்குள்ளேயே ஒரு அதிகாரப் போட்டிக்கு இடமுண்டு.

மறுபக்கத்தில் நடந்து கொண்டிருக்கின்ற அரசியல் நடவடிக்கைகளில் முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர்களான ராஜிதவும் சம்பிக்கவும் குற்றஞ்சாட்டப்பட்டு குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இதில் சம்பிக்கவின் ஆதரவுத்தளம் முற்று முழுதாக சிங்களத்தீவிரத் தேசியவாதிகளுடையது. இதே தளம்தான் ஜனாதிபதியினுடயதும். ஆகவே சம்பிக்க மீதான நடவடிக்கைகள் சிங்கள பௌத்த அமைப்புகள், மக்கள், தலைவர்கள், மதகுருக்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கும் என்று பார்க்க வேணும்.

கிடைக்கின்ற தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகளை தவறு என்று சொல்வோர் குறைவாக இருப்பதாகவே படுகிறது. பதிலாக இது அரசாங்கத்தின் சட்ட நடவடிக்கை என்று உணர்த்தப்படுகிறது. சட்ட  நடவடிக்கைக்கு முன்னே யாரும் குறுக்கே நிற்க முடியாது என்பது விதி என்பதால் இதை ஒரு வாய்ப்பாக அரசாங்கத்தரப்புக் கையாள்கிறது எனலாம். இதை ஒத்த நிலையே ராஜிதவினுடையதும்

ராஜித சேனாரத்தின ஓரளவுக்கு அனைத்துச் சமூகங்களினாலும் மதிக்கப்பட்டவர். ஜே.வி.பி தொடக்கம் தமிழ் இயக்கங்கள் வரையில் அவருக்கு நெருக்கமாக இருந்திருக்கின்றன. அல்லது அவருக்கு ஏதோ ஒரு வகையில் அவற்றோடு அவ்வப்போது தொடர்பிருந்திருக்கிறது. ஆனால், இதல்லாவற்றையும் கடந்து அவர் கடந்த பொதுத் தேர்தலின்போது வெள்ளைவான் கடத்தலைத் தெரிந்தவர்கள் என இரண்டு பேரைக் கொண்டு வந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாடு அவரைக் கேள்விகளற்ற முறையில் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளன.

ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு மிக்க அமைச்சர் மிகச் சீரியஸான ஒரு விடயத்தில் இப்படிப் பொறுப்பற்று நடக்கலாமா? என்று நானே பல தடவை யோசித்திருக்கிறேன். தேர்தல் பரப்புரை வேறு. குற்றங்களோடு தொடர்பு பட்டவர்களையும் கொலைக் குற்றங்களின் சாட்சியாளர்களையும் எப்படி பக்கத்தில் வைத்துக்  கொண்டிருப்பது? அவர்களை முதலில் காவல்துறையிடம் ஒப்படைத்து இருக்க வேண்டும்.

குற்றங்களைத் தெரிந்தவர்கள், குற்றவாளிகளை நன்றாக அறிந்தவர்கள், இன்னும் ரகசியங்கள் ஏராளமாக உள்ளதென சொல்கின்றவர்களை பொலிசிடம் சேர்ப்பிப்பது ஒரு அமைச்சர் என்ற வகையில் முக்கியமான ஒரு விசயம். ஆனால் ராஜித இதைச் செய்யவில்லை.

தேர்தல் முடிவுகள் வேறு விதமாக – ராஜிதவின் கணிப்பை மீறி நடந்தால் நிலமை மிகவும் சிக்கலானதாகி விட்டது. இப்பொழுது ராஜித மறைந்து திரிகிறார். அவர் இன்று தேடப்படும் ஒரு நபராகி விட்டார். இதெல்லாம் என்ன வகையான உணர்வைச் சிங்கள மக்களிடத்திலே ஏற்படுத்தவுள்ளது என்பது முக்கியமான கேள்வியாகும்.

ஆனால்,  இந்த அரசாங்கம் பெரும்பான்மைச் சிங்கள மக்களுடைய ஆதரவினால் உருவாகியது. ஆகவே சிங்கள மக்களின் அந்த ஆதரவை மிகக் கவனமாகக் கையாள வேண்டிய நிர்ப்பந்தம் இந்த அரசாங்கத்துக்குண்டு. அதேவேளை சிங்கள வரலாற்றில் ஒரு முதன்மைப் பாத்திரமாக உருவகிக்கப்படும் துட்ட கெமுனுவின் வரலாற்றில் இன்னொரு சிறப்புப் பெயராகக் கொள்ளப்படும் கோத்தபாயவை இன்றைய ஜனாதிபதியின் வருகையோடு சிங்கள மக்கள் பொருத்திப் பார்க்கிறார்கள். அப்படிப் பார்க்க வைக்கப்படுகிறார்கள்.

இதெல்லாம் கலந்த கலவையில்தான் இனி வரும் காலம் நகரப்போகிறது. குழப்பங்களும் அதற்குள் வழித்தடங்களை உருவாக்குதலுமாக அடுத்து வரும் காலம் இருக்கப்போகிறது.

எதற்கு அடுத்த தேர்தல் வரையில் பொறுத்திருக்க வேண்டும் என்பது இலங்கை மக்களின் விதியாகும்.

Share this post:

Recent Posts