தமிழ் සිංහල English
Breaking News

அஷ்ரப் பிரசவித்த பிள்ளை இன்று நோயாளியை போன்று மாறியிருப்பது வேதனை தருகிறது!

ஒலுவில் மீன்பிடித் துறைமுகமானது எமது பகுதி மீனவர்களின் தேவையறிந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் உதவியுடன் அஷ்ரப்பினால் பிரசவிக்கப்பட்ட பிள்ளையாகும். அதனை இல்லாமல் செய்வதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

ஒலுவில் துறைமுக பிரச்சினைகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வுக்கும் அம்பாறை மாவட்ட மீனவர் சங்கங்களுக்குமிடையில் கல்முனையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர், அந்த மீனவ துறைமுகத்தை உருவாக்குவதில் தலைவர் அஷ்ரப் கொண்டிருந்த உறுதிக்கு நாங்கள் பக்கபலமாக இருந்து அதனை உருவாக்கினோம். தலைவரினால் பிரசவித்த அந்தப் பிள்ளை இன்று நோயாளியை போன்று மாறியிருப்பது கடும் வேதனையாக இருக்கிறது. பிள்ளை நோய்வாய்ப்பட்டதால் அதை சாகடிக்க முடியாது. மருத்துவமே செய்ய வேண்டும்.

அந்தத் துறைமுகத்தை தலைவர் அஷ்ரப் தேவையில்லாமல் அமைத்ததாகவும் அது உடைத்தெறிய வேண்டியது என்றும் சிலர் கருத்து தெரிவிக்குமளவுக்கு மடைமையில் உள்ளனர்.

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட போது நாங்கள் நிவாரணங்களை வழங்கினோம். அது போதாது என்பதை அறிந்து நாங்கள் இன்னும் செய்ய ஆயத்தமாகவும் இருந்தோம். அரசியல் காரணங்களுக்காக நஷ்டஈடு கொடுக்கும் அந்த கூட்டத்தையே குழப்பி நிகழ்வுகளை திசைதிருப்பி அரச சொத்துக்களை சேதமாக்கி அந்த மக்களையும் மீனவ சமூகங்களையும் நடுவீதியில் அலைய வைத்தார்கள். ஆனால் நாங்கள் தைரியமாக எங்களுடைய பணிகளை செய்தோம்.

பின்னர் எமது வாக்குகளால் தெரிவாகி வந்த எமது மக்கள் பிரதிநிதிகள் எமது தலைவன் கனவு கண்ட குழந்தையான அந்த துறைமுகத்தை கடைக்கண் கொண்டும் பார்க்கவில்லை. அதற்காக நாங்கள் அந்த குழந்தையை கைவிட முடியாது என்றார்

Share this post:

Recent Posts