தமிழ் සිංහල English
Breaking News

1500 ரூபா தருகின்றோமென பொய்யை கூறி வாக்குகளைப் பெற்றது யார்?

இலங்கை என்பது சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைவரினதும் நாடாகும். இந்நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டா பய ராஜபக்சவுடன் கைக்கோர்த்து பயணிப்பதற்கான சந்தர்ப்பமொன்று உள்ளது. ஆகவே, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்தார். அவர் வழங்கிய விசேட நேர்காணலின் போதே மேற்கண்டவாறு கூறினார். அவரது முழுமையான நேர்காணல்…

கேள்வி: ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றமானது நாட்டில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதென நினைக்கின்றீர்கள்?

பதில்: கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மக்களின் எதிர்ப்பார்ப்புகள் முற்றாக வீழ்ந்திருந்தன. ஜனநாயக ரீதியான ஆட்சியொன்றை விரும்பியே கடந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவளித்திருந்தனர். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டது மாத்திரமின்றி மக்களின் நம்பிக்கையும் முற்றாக வீழ்ச்சிகண்டது. நாட்டை அந்நிய நாடுகளுக்கு கூறுபோட்டனர். எமது தேசிய வளங்கள் நாசமாக்கப்பட்டன. மக்கள் வாழ்க்கைச் செலவு உயர்த்திருந்தது. அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றிருந்தன. இவை அனைத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாத சந்தர்ப்பத்திலேயே நாட்டையும் எமது தேசிய வளங்களையும் பாதுகாக்கும் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

கேள்வி: குறுகிய காலமே ஆகியுள்ள நிலையில் ஆட்சிமாற்றம் தொடர்பில் மக்களின் எண்ணம் எவ்வாறுள்ளது?

பதில்: வேலைவாய்ப்புகள் இல்லாது இளைஞர்கள் துன்பங்களை அனுபவித்து வந்தனர். பட்டதாரிகள் பாதையில் இறங்கிப் போராடினர். பாதைகள் அபிவிருத்தி செய்யப்படவில்லை. கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் விரிவுப்படுத்தப்படவில்லை.

இவை அனைத்துக்கும் தீர்வாக ஒருமாதகாலத்தில் பல தீர்மானங்களை நாம் எடுத்துள்ளோம். வெளிநாட்டு முதலீடுகள் நாட்டை நோக்கி வருகின்றன. வீழ்ச்சிகண்டிருந்த ரூபாயின் பெறுமதி உயர்வடைந்து வருகிறது. ஸ்திரமான அரசாங்கமொன்றை கட்டியெழுப்பக் கூடிய சூழல் உதயமாகியுள்ளது. வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. கிராமிய உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்வதற்கான நிதிகள் ஒதுக்கீடுகள் செய்யப்படுகிறன. தேசிய பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஏலக்காய், மிளகு உட்பட பல பொருட்களின் உள்நாட்டு சந்தையையும் உற்பத்தியையும் ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் மீள் ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வற் வரி முதல் குறைக்கப்பட்டுள்ள முக்கிய வரிகளால் தேசிய பொருளாதாரம் பலமடையும். கடும் துன்பங்களை எதிர்க்கொண்டும் தோட்ட மக்கள் உட்பட வடக்கு, கிழக்கு மக்களும் பல்வேறு காரணங்களுக்காக அன்னத்துக்கு வாக்களித்திருக்கலாம். என்றாலும், தற்போதைய நிலைமையை புரிந்துக்கொண்டு புதிய ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து பயணிக்க வேண்டும்.

கேள்வி: மலையகம், வடக்கு, கிழக்கு உட்பட சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசங்களில் 90 சதவீதமான வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கே அளிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பொதுத் தேர்தலில் அவர்களது வாக்குகளைப் பெற்றுக்கொள்ள எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளீர்கள்?

பதில்: நாம் உண்மையை பேச வேண்டும். ஆரம்ப காலம்முதல் ஐக்கிய தேசியக் கட்சிக்கே தோட்டப்புற மக்கள் பெரும்பாலும் வாக்களிக்கின்றனர். 1994, 2000, 2005, 2010,2019 என அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேசிய ரீதியில் வெற்றிபெறும் தலைமைகளுக்கு எதிராகவே மலையகத்தில் மக்கள் வாக்களித்துள்ளனர். ஐ.தே.கவின் சிலர் சிறுபான்மை வாக்குகள் இன்றி ஜனாதிபதித் தேர்தலை வெற்றிக்கொள்ள முடியாதென இந்தத் தேர்தலில் தெரிவித்தனர். அதனால்தான் இம்முறை சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் மாத்திரம் ஜனாதிபதியொருவர் அவசியமென்ற கருத்துகள் வலுப்பெற்றன.

கேள்வி : புதிய அரசாங்கம் பௌத்த மதத்தை மையப்படுத்திய அரசொன்றை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளிலேயே ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறதே?

பதில் : பொய்யை மையப்படுத்தித்தான் கடந்த காலத்தில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர். நாம் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி அரசாட்சியை கட்டியெழுப்புகின்றோம் என்றால் சிங்கள பௌத்த விகாரையின் உள்ளே விஷ்னு, பிள்ளையார் உட்பட பல தெய்வங்களை வைத்து வழிப்படுகின்றனர். இதனை அநுராதபுரம், கதிர்காமம் உட்பட பல இடங்களுக்கு சென்று பார்க்கலாம். எமது அரசாங்கத்தில் உருவாக்கப்பட்டிருப்பது புத்த சாசன அமைச்சு அல்ல. அது மதங்கள் தொடர்பிலான அமைச்சாகும். இதில் பௌத்தம், இந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் என அனைத்து மதங்களும் அடங்கும். ஓர் அமைச்சின் கீழ் அனைத்து மதங்களுக்குமான பணிகளை செய்ய முடியும். ஆகவே, பொய்யை மையப்படுத்தி வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவே இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

கேள்வி: பௌத்த மதத்தை மையப்படுத்தி இந்த அரசாங்கம் ஆட்சியை கொண்டுசெல்கிறதென கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதான செய்தியை மக்களுக்கு எவ்வாறு தெரியப்படுத்துகின்றீர்கள்?

பதில்: அனைவர் இடத்திலும் சென்று இதனை நிரூபிக்க வேண்டியதில்லை. எமது செயற்பாடுகள்தான் உதாரணம்.

கேள்வி: குறிப்பாக ஐ.தே.கவின் சிலர் இவ்வாறான குற்றச்சாட்டுகளை சிறுபான்மை மக்களிடம் முன்வைக்கின்றனரே?

பதில்: கறுப்பு ஜுலையை உருவாக்கியது யார்?. 1500 ரூபா தருகின்றோமென பொய்யை கூறி வாக்குகளைப் பெற்றது யார்? தோட்டப்புறங்களிலும், கொழும்பிலும் அன்று கடைகளை எரித்தது யார்? நுவரெலியா, கந்தபளை என மலையகத்தின் நகரங்களில் வர்த்தகம் செய்தவர்கள் அதனை விட்டுவிட்டு ஏன் இந்தியாவுக்குச் சென்றனர்? ஆனாலும், அந்த மக்கள் யானைக்கும் அன்னத்துக்கும்தான் வாக்களித்தனர். இது நாம் செய்த பிழையா? அதற்காக ஏன் பொதுஜன பெரமுனவுக்கும், இடதுசாரி அரசியலுக்கும் எதிர்ப்பை வெளியிடுகின்றனர். இதனை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். அன்றுமுதல் எனது நிலைப்பாடும் இதுதான். தமிழ் மக்களை அடித்து, கடைகளை எரித்த சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் இருந்தவர்கள் யார்? இவை அனைத்தையும் மறந்துவிட்டனர். நாம்தான் தவறு செய்ததாக கூறுகின்றனர். நாம் செய்த தவறு என்ன? தோட்டங்களில் பாதைகளை அமைத்தது தவறா? பாடசாலைகளை அபிவிருத்தி செய்தது தவறா? வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்தது தவறா?. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தோட்டங்களில் சில வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாறாக வேறு என்ன அபிவிருத்தியை முன்னெடுத்துள்ளனர்?. இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியிருந்தார்களா?. எமது அரசாங்கத்தின் காலத்தில் ஒரு கட்டமைப்பின் கீழ் அனைத்து பிரதேசங்களிலும் அபிவிருத்தியை முன்னெடுத்தே வந்தோம். ஆகவே, பொய்யை சமூக மையப்படுத்தி வாக்குகளைப் பெற்றுக்கொள்கின்றனர். குறைந்தபட்சம் 50 ரூபாவையாவது கொடுத்தார்களா?.இல்லை.நாம் ஒரு மதத்தை மையப்படுத்தி ஆட்சியை கொண்டுசெல்கின்றோம் என்றால், கோயில்கள் அபிவிருத்தி செய்யபடவில்லையா?. கோயில்களை அபிவிருத்தி செய்ய நிதியை ஒதுக்கீடு செய்கின்றோம். கதிர்காமம், முன்னேஸ்வரம் கோயில்களுக்கும் செய்கின்றோம். இவற்றை தெரிந்துக்கொள்ள வேண்டும். புதிய ஜனாதிபதியுடன் இணைந்து அபிவிருத்திகளை முன்னெடுத்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

கேள்வி : சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம் சர்வதேச ரீதியில் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளதே?

பதில்: இது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. நீதிமன்றம் இதற்கான தீர்ப்பை வழங்கும். அரசாங்கம் உருவாக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே பிரச்சினைக்கு உள்ளாக்கும் வகையில் மூன்றாம்தர அரசியல் பிரஜைகளால்தான் இவ்வாறான விடயங்களை செய்ய முடியும்.

கேள்வி: இந்தச் சம்பவத்தின் பின்புலத்தில் யார் உள்ளனரென எண்ணுகின்றீர்கள்?

பதில்: அவரின் பெயரை கூற நான் விரும்பவில்லை. ஆனால், யாரென எனக்குத் தெரியும். ஒவ்வொரு காலகட்டத்தில் அங்கும் இங்கும் தாவுபவர். ஐ.தே.கவிலேயே இருந்தவர் அல்ல. ஐ.தே.கவுடன் புதிதாக இணைந்தவர்.

கேள்வி: எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா அமர்வு வரவுள்ள சூழலில் சர்வதேச ரீதியில் இந்த விவகாரம் இலங்கைக்கு சவாலான விடயமாக மாறியுள்ளதே?

பதில்: நீதி நிலைநாட்டப்பட்டால் சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் வராது. சர்வதேச ரீதியில் எமது அரசாங்கத்துக்கு அபகீர்த்திய ஏற்படுத்தும் நோக்கில்தான் இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். ஆகவே, இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கேள்வி: புதிய அரசாங்கத்தின் பட்ஜெட் எப்போது சமர்ப்பிக்கப்படும்?

பதில்: பொதுத் தேர்தலின் பின்னர்தான் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும். பொதுத் தேர்தலுக்கு முன்னர் இடைக்கால கணக்கறிக்கையொன்றை நாம் கொண்டுவருவோம். அதனை நிறைவேற்றி பின்னர்தான் தேர்தலுக்குச் செல்வோம். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்பட்டிருந்த இடைக்கால கணக்கறிக்கை ஏப்ரல் மாதம்வரையானதாகும். என்றாலும் தேர்தலை ஏப்ரல் மாதத்திற்குள் நடாத்தி முடிக்க முடியாது. ஆகவே, இடைக்கால கணக்கறிக்கையொன்றையே சமர்ப்பிக்க முடியும்.

கேள்வி: பொதுத் தேர்தலில் உங்களது கூட்டணிக்குள் சின்னம் தொடர்பில் பிரச்சினையெழுந்துள்ளது. குறிப்பாக சு.க கதிரை சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளது. என்றாலும்; பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் மொட்டு சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளனரே?

பதில்: பொதுஜன பெரமுன என்பது ஒரு கட்சி. சுதந்திரக் கட்சி என்பதும் ஒரு கட்சி. எமது கூட்டணியில் 17 கட்சிகள் உள்ளன. ‘ஸ்ரீலங்கா பொதுஜன எக்ஸத் பெரமுன’ என்பதுதான் எமது கூட்டணி. அதில் நாம் எமது சின்னம் தொடர்பில் பேசுவோம். நாம் இணக்கப்பாட்டுடன்தான் பயணிப்போம். பல கருத்துகள் இருக்கலாம். என்றாலும், இறுதியில் ஒரு பொது இணக்கப்பாட்டின் பிரகாரம்தான் செயற்பட முடியும்.

கேள்வி: வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள்தான் இம்முறை கிடைக்கப்பெற்றன. அது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டுவதால் ஒன்றும் நடைபெற போவதில்லை. வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்தியது யார்? கிழக்கின் வசந்தத்தை ஏற்படுத்தியது யார்? வடக்கிற்கான ரயில் பாதையை உருவாக்கியது யார்? வவுனியாவுக்கு அப்பால் அன்று செல்ல முடிந்ததா?ஃ ஆகவே, இவ்வாறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

அவர்களது வேறு எதிர்பார்ப்புகளுக்காகச் செயற்படுகின்றனர். அதனை எம்மால் செய்ய முடியாது.வாக்களிக்கவில்லையென்பதால் பழிவாங்கவும் முடியாது. பாராளுமன்றத் தேர்தலில் நாட்டை அபிவிருத்தி செய்ய எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன். சிங்களம், தமிழ், முஸ்லிம் என இலங்கையர்களின் நாடே இது. நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணையுங்கள். நாடு நாசமாக வேண்டுமென்றால் மாற்றுத்தரப்புக்கு வாக்களியுங்கள். மீண்டும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாது போகும். நாட்டின் பாதுகாப்பு இல்லாது போகும் என்பதையே தெரிவிக்க விரும்புகின்றேன்.

கேள்வி : வரி குறைப்பின் பிரதிபலன்கள் மக்களுக்கு கிடைக்கிறதா?

பதில் : வரி குறைப்பால் பாரிய சலுகைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கட்டாயம் வரி குறைப்பின் சலுகைகள் மக்களுக்கு கிடைக்க வேண்டும். அதற்கான வேலைகளையே செய்து வருகின்றோம். பொருட்களின் விலை ஓரளவு குறைந்துள்ளது. அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை அமைத்து ஒருமாதம்தான் ஆகியுள்ளது. ஆகவே, மக்களுக்கு உரிய முறையில் சலுகைளை பெற்றுக்கொடுப்போம்.

கேள்வி: சிறுபான்மை மக்களுக்கு இறுதியாக எதனை தெரிவிக்க விரும்புகின்றீர்கள்?

பதில்: விசேடமாக நான் கூறுவதாவது, நான் தோட்டத் தொழிலாளர்களுடன் வாழ்பவன். அவர்களுடன் அன்றாடச் செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றேன். அவர்களது அபிவிருத்திக்கு நானும் தலைமை கொடுக்கின்றேன். ஆகவே, பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கைக்கோர்த்துக்கொள்ள சந்தர்ப்பமொன்று உள்ளது. அதில் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அப்போது கிராமத்தை அபிவிருத்தி செய்யவும், பாடசாலைகளையும், தோட்டப் பாதைகளையும், வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்ய முடியும்.

Share this post:

Recent Posts