தமிழ் සිංහල English
Breaking News

ரணிலைச் சந்தித்த ரெலோ, புளொட் – 48 மணி நேரத்துக்குள் முடிவு.!

சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான, ரெலோவும், புளொட்டும் அடுத்த 48 மணிநேரத்துக்குள் முடிவை அறிவிக்கவுள்ளன.

கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது.

எனினும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் பொறுப்பை கூட்டமைப்பின் தலைமை இரா.சம்பந்தனிடம் ஒப்படைத்துள்ளது.

இந்த நிலையில், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக, புளொட் தலைவர் சித்தார்த்தனும், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், அலரி மாளிகையில் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையை விரிவாக ஆராய்ந்து விட்டு இரண்டு நாட்களில் முடிவை அறிவிப்பதாக அவர்கள், ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் தமிழ் அரசுக் கட்சியின் முடிவுடன், புளொட் இணங்கிச் செல்லும் நிலை காணப்படுவதாகவும் – எனினும் ரெலோவுக்குள் முரண்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும், தமிழ் அரசுக் கட்சியின் முடிவுக்கு இணங்க முடியாது என, ரெலோ செயலாளர் சிறிகாந்தா தெரிவித்திருந்தார்.

எனினும் அதற்குப் பின்னரே, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், அலரி மாளிகைக்கு சென்று ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

இதற்கிடையே, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இதன் பின்னரே கூட்டமைப்பின் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரியவருகிறது.

Share this post:

Recent Posts