தமிழ் සිංහල English
Breaking News

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிய வேண்டும் என்பதில் த,தே,கூ பங்கு அதிகம்!

விடுதலைப் புலிகள் அழிய வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கும் இருந்தது என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (22) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டு யுத்தத்தை முன்னெடுத்த சென்ற சரத் பொன்சேகாவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தது. கொடிய யுத்தத்தை முன்னெடுத்து சென்ற சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாக மேடையில் ஏறி பேசினர்.

உண்மையில் அன்றையை சூழலிலும் நாம் இவ்வாறான பொது வேட்பாளர் ஒருவரை நியமித்திருக்க வேண்டும். அன்று அதை செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும், சம்பந்தன் அவர்களும் தவறியுள்ளனர்.

சாணக்கிய அரசியல்வாதி என கூறிக்கொள்ளும் சம்பந்தன், இந்த விடயத்தில் தவறு இழைத்துள்ளார். இறுதி யுத்தத்தில் பாரிய இன அழிப்பை மேற்கொண்டவருக்கு ஆதரவு தெரிவித்ததுடன் எமது உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தை இழந்துவிட்டோம்.

அது மாத்திரமன்றி விடுதலை புலிகளை அழித்தமைக்கான வாழ்த்துக்களை பாராளுமன்றில் இரா. சம்பந்தன் தெரிவித்திருந்தார். அது தோடர்பான வீடியோக்கள் இன்றும் காண முடிகின்றது. இறுதி நேரத்தில் விடுதலைப் புலிகள் அழிய வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்கும் இருந்தது.

அவர்கள் விடுதலை போராட்டம் அழியக்கூடாது என நினைத்திருந்தால் இறுதி நேரத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றார்கள் யுத்தத்தை நிறுத்துமாறு இதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரியிருக்கலாம்.

இந்த கோரிக்கை சர்வதேச சமூகத்திடமிருந்து வந்தபோது சம்பந்தன் அவர்கள் தொலைபேசியை அணைத்துவிட்டு இருந்துவிட்டார். இவர்கள் தனிப்பட சுயமாக சிந்திப்பவர்களாக இல்லை.

இவர்கள் ஏதோவொரு நாட்டின் அபிலாசைகளிற்கு அமைவாக நடந்து கொள்பவர்களாகவே இருக்கின்றனர். ஏதோவொரு நாட்டையோ அல்லது ஏதோ ஒருவரை சார்ந்து முடிவெடுப்பவர்களாகவே இருக்கின்றார்கள்.

2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு கொடுத்தமையானது எமது நீதிகோருகின்ற நிலையிலிருந்து நழுவ வைத்துள்ளதாகவும், 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் என ஒன்றை கொண்டு வந்து 51 நாள் குளப்பத்தின் போது நிபந்தனையற்ற முண்டு கொடுப்பினை ஆரம்பித்தனர்.

அந்த முண்டு கொடுத்தலின் போது வெறும் 89 அரசியல் கைதிகளாக இருந்தவர்களைக் கூட விடுதலை செய்ய முடியாமால் போனது அவர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கை அரசினது செயற்பாடும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடும் தமிழ் மக்களிற்கு குறிப்பாக யுத்த்தினால் பாதிக்கப்பட்ட எமக்கு விரோதமானதாகவே அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நிபந்தனையற்ற ஆதரவினை இறுதி நேரத்தில் வழங்குவர் எனவும் தெரிவித்தார்.

நிபந்தனைகளை ஏற்காவிட்டாலும் அவர்கள் வழங்கிய சில வாக்குறுதிகளிற்காக நிபந்தனையின்றி நாம் ஆதரவு வழங்கினோம் என அவர்கள் இறுதி நேரத்தில் தெரிவிப்பார்கள் இதுவே கடந்த காலங்களிலும் இடம்பெற்றது.

தாம் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதை ஏற்கனவே அவர்கள் தீர்மானித்துவிட்டார்கள். தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர் இந்திய அரசியல்வாதிகள், தூவர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படங்களை தாங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை நாம் அவதானித்திருந்தோம்.

எனவே அவர்கள் என்றோ தீர்மானித்துவிட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Share this post:

Recent Posts