தமிழ் සිංහල English
Breaking News

தோட்ட தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணத்தில் சிக்கல் !

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக தேயிலை சபையினூடாக வழங்கப்பட இருந்த ஐயாயிரம் ரூபாவை வழங்குவது தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயலென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இதனால் தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக மேலதிகமாக ஐயாயிரம் ரூபாவை வழங்குவது தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயலாகுமென ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவிக்கிறார்.

தோட்ட தொழிலாளர்களுக்கு  தீபாவளி முற்பணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றமை வழமையான நடைமுறையாக இருந்து வருகின்றது.

தோட்ட தொழிலாளர்களுக்கு மேலதிகமாக தேயிலை சபையிடமிருந்து ஐயாயிரம் ரூபாவை பெற்றுக் கொடுப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை மலை நாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு ,வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனிதிகாம்பரம் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியிருந்த நிலையில் தீபாவளி முற்பணமாக ஐயாயிரம் ரூபாய் வழங்குவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

தேர்தல் தொடர்பான அறிவித்தல் தேசிய தேர்தல் ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட பின்னர் பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், நியமனங்கள், சலுகைகள் , நிவாரணங்கள் ஆகியன தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயல்கள் என தேசிய தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டுகிறது.

தேர்தல் தினம் அறிவிக்கப்பட் பின்னர் அமைச்சரவையின் அனுமதியின் பேரில் தீபாவளி முற்பணமாக ஐயாயிரம் ரூபாவை மேலதிகமாக வழங்குவதில் தேர்தல் சட்ட விதிகளை முற்றுமுழுதாக மீறும் செயலென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக மேலதிகமாக ஐயாயிரம் ரூபாய் வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை குறித்து விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக ஐயாயிரம் ரூபாவை மேலதிகமாக வழங்குவதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. இந்த ஐயாயிரம் ரூபாவை தேர்தலுக்கு பின்னர் அவர்களுக்கு பெற்றுக் கொடுப்போம் என்றார்.

Share this post:

Recent Posts