தமிழ் සිංහල English
Breaking News

ஜனாதிபதி தேர்தல் – கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் – கருணாகரன்

தேர்தல் என்றால் எனக்கு எப்பொழுதும் நினைவுக்கு வருவது “மாடு சிரித்தது” என்ற அ.செ.மு.வின் சிறுகதையே. ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது அந்தக்கதை. ஆனால் அது காட்டுகின்ற காட்சிகளும் சொல்லுகின்ற சேதிகளும் இன்றைய சூழலுக்கும் அப்படியே அச்சொட்டாகப் பொருந்துகின்றன.

அந்தளவுக்கு எந்த மாற்றங்களுமேயில்லாமல் அன்று தொடக்கம் இன்று வரையில் மாடே சிரிக்கக் கூடியமாதிரித்தானுள்ளன நம்முடைய தேர்தல் திருவிழாக்காட்சிகளும் தலைவர்களின் கதைகளும் கட்சிகளின் அறிக்கைகளும். பொய்யும் புரட்டும் ஏமாற்றும் தந்திரமும் கண்ணியமற்ற தன்மையும் (இதை அயோக்கியத்தனம் என்றும் சொல்லலாம் அல்லவா!) கோமாளித்தனங்களுமாக அது விரிந்து கிடக்கிறது.

காலங்கள் மாறினாலும் இந்தக் காட்சிகள் மாறவில்லை. என்றால் எதுவும் மாறவில்லை என்றுதானே அர்த்தம்! எதுவும் மாறவில்லை என்றால் எதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதே பொருளாகும்.

இதனால்தான் இலங்கையில் இனப்பிரச்சினை உள்ளிட்ட எந்தப் பிரச்சினையும் தீர்க்க முடியாமலிருக்கின்றன. எளிய உண்மை என்னவென்றால், இலங்கையின் இனப்பிரச்சினை தொடக்கம் பொருளாதாரப் பிரச்சினை வரையில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் மேலும் வளர்ந்து முள்ளாகச் சடைத்துக் கொண்டேயிருக்கின்றன. இதைத் தீர்ப்பதற்கு ஆத்ம சுத்தமான முறையில் முயற்சிகளை எடுத்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது.

ஆனாலும் இந்தத் தலைவர்கள், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் திரும்பத்திரும்ப பொய் வாக்குறுதிகளோடு எங்களிடம் வருகிறார்கள். “இதைப் பற்றி மக்கள் என்ன சிந்திப்பார்களோ” என்று எந்தவிதமான அக்கறையோ கூச்சமோ இல்லாமல் மறுபடியும் மறுபடியும் அதே வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டு நமக்கு முன்னே வருகிறார்கள் என்றால், இப்படி வரக்கூடிய துணிச்சலை இவர்களுக்குக் கொடுத்தது வேறு யாருமல்ல. நாம்தானே!

இது எவ்வளவு மோசமான செயல்? எவ்வளவு பலவீனம்? எவ்வளவு முட்டாள்தனம்?

ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்போம். ஒரே கட்சி, ஒரே விசயத்தைப் பற்றிப் பல ஆண்டுகளாகப் பேசிக்கொண்டிருக்கிறது என்றால், ஆண்டுக்கணக்கில் திரும்பத்திரும்ப திரும்பத்திரும்ப வாக்குறுதிகளையே தந்து கொண்டிருக்கிறது என்றால் இதை என்னவென்று சொல்வது?

எளியதொரு உதாரணம், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்று எத்தனை தடவை சொல்லி விட்டன ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்? இப்படிச் சொன்னதற்கு அமைய, வாக்குறுதிகளை வழங்கியதற்கு ஏற்ப இவை விசுவாசமாகப் பின்னர் செயற்பட்டுள்ளனவா? அப்படிச் செயற்படவில்லை என்றால் இவற்றை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது? இவற்றை எப்படி மன்னிப்பது?

ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ஸ, சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன என்று இன்றுள்ள தலைவர்கள் கூட  எத்தனையோ தடவை இதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஏராளம் வாக்குறுதிகளை நமக்குத் தந்திருக்கிறார்கள். இவர்கள்தான் ஐம்பது ஆண்டுகளாக (அரை நூற்றாண்டுகாலமாக) மாறி மாறி அரசியல் அதிகாரத்திலிருக்கிறார்கள். தீர்மானிக்கும் நிலையிலிருக்கிறார்கள்.  இவர்களால் இந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியவில்லை என்றால் இதை நாம் எப்படிப் பார்ப்பது? எப்படிப் புரிந்து கொள்வது? இனியும் இதைப்பற்றி பேசுவதற்கான தகுதி இவர்களுக்கு உண்டா? இனியும் அரசியலில இவர்களை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? எப்படி அனுமதிப்பது?

நிச்சயமாக இந்த நிலை தொடரக்கூடாது என்றே சொல்வேன். அப்படித்தான் நாம் சொல்ல வேண்டும்.

ஏனெனில் தங்களுடைய கடந்த காலச் செயற்பாடுகளின் மூலமாக தங்களைத் தவறானவர்கள் என்று இவர்களே நிரூபித்திருக்கிறார்கள். தங்களின் பலவீனங்களையும் தகுதியின்மையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆகவே இந்த நாட்டிற்குத் தலைமை தாங்கக் கூடிய தகுதி இனிமேல் இவர்களுக்கில்லை. அப்படிச் சொல்லிக் கொண்டு வந்தாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

வேண்டுமானால், கடந்த காலத்தில் இவர்கள் இந்த நாட்டு மக்களாக எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை எடுத்துப் படித்துப் பாருங்கள். அவை உங்களைப் பார்த்துச் சிரிக்கும். இந்த இடத்தில் நாம் இவர்களை நோக்கிச் சிலவற்றைச் சொல்லலாம். “நீங்கள் எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஒரு தடவை எடுத்துப் படித்துப் பாருங்கள். அவை உங்களைப் பார்த்துச் சிரிக்கும். உங்களைப் பார்த்து அவை கேள்வி கேட்கும்? உங்களை அவை பரிகசிக்கும். உங்களை அவை குற்றவாளிக்கூண்டிலே நிறுத்தும். ஆனால், உங்களுக்குத்தான் மனச்சாட்சி இல்லையே. குற்றத்தை உணரக் கூடிய மனம் இல்லையே! தவறுகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய மாண்பு கிடையாதே. மக்களைப் பற்றிய, நாட்டைப்பற்றிய அக்கறை இல்லையே.

இதனால்தான் நீங்கள் மறுபடியும் மறுபடியும் அதே பொய்யான வாக்குறுதிகளோடு எங்களுக்கு முன்னே வருகிறீர்கள். கனவான்களைப்போன்ற வேடத்தோடு நடமாடுகிறீர்கள். இதிலே கொடுமையும் அவமானமும் என்னவென்றால், இவ்வளவுக்குப் பின்னாலும் உங்களை வரவேற்கவும் ஆராதிக்கவும் ஒரு பெருங்கூட்டமுண்டு. அதுவே உங்களுக்காக பரிந்துரைக்கிறது. உங்களைக் கொண்டாடுகிறது. உங்களைக் கொண்டாடுவதென்பது உங்களுடைய தவறுகளைக் கொண்டாடுவது என்றே அர்த்தமாகும். ஆனால், இதை அந்தக் கூட்டம் உணர்வதுமில்லை. ஏற்றுக்கொள்வதுமில்லை. ஒரு விதமான போதையில் இருப்பதைப்போல உங்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறது இந்தக் கூட்டம். உங்களைத் தொடர்ந்தும் அரசியலிலும் அதிகாரத்திலும் தக்க வைத்திருப்பதும் இந்தக் கூட்டம்தான். இதனால்தான் இந்த நாட்டின் மிகப் பெரிய ஏமாற்றுக்காரர்களாகவும் பொய்யர்களாகவும் அநீதியாளர்களாகவும் உங்களால் இருக்க முடிகிறது. இதுதான் மிகமிகக் கொடுமையானது.

எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணாமலே நம்மால் தொடர்ந்தும் அரசியலிலும் அதிகாரத்திலும் இருக்கலாம் என்ற நம்பிக்கையைத் தருவது இந்தக் கூட்டத்தின் முட்டாள்தனம்தான். இதுவே உங்களுக்குத் தவறு செய்யும் துணிச்சல் வரவரக் கூட்டுகிறது. ஏமாற்றலாம் என்ற துணிச்சல் குறையாமலிருப்பதற்கு இவர்களே காரணம்.

ஆனால் இந்த நிலை எப்போதும் தொடரும் என்றில்லை. காலமாற்றங்கள் என்பது சமூக வளர்ச்சியினாலேயே அடையாளப்படுத்தப்படும். சமூக வளர்ச்சி என்பது ஒரு தீப்பொறியைப்போன்றது. அது நிச்சயமாக ஒரு போது ஒளிகொண்டெழும். அதுவரையில் இந்த மாதிரியான சீரழிந்த நிலையே நீடிக்கும். அந்த நிலை இந்த மாதிரியான அரசியல்வாதிகளுக்கும் தவறான அரசியலுக்கும் வாய்ப்பாகும்.

இதை நாம் மேலும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நம்முடைய பிரச்சினைகள் எதுவும் தீராதிருப்பதற்குக் காரணம் நாமும்தான் என்ற புரிதல் (பிரக்ஞை) நமக்கு வேண்டும். தவறானவர்களை அதிகாரத்தில் வைத்துக் கொண்டு எப்படி மாற்றங்களை எதிர்பார்க்க முடியும்? சரியானவர்களைத் தெரிவு செய்யாத வரையில், சரியானவர்களில் நம்பிக்கை வராத வரையில் எப்படித் தீர்வும் முன்னேற்றமும் ஏற்படும்?

ஆனால், இதைப்பற்றி நாம் கவலைப்படுவதே கிடையாது.

மிக எளியதொரு உதாரணம் அல்லது கேள்வி. தேர்தல் என்றாலே பொய்யும் புரட்டும் தந்திரமும் கண்ணியமற்ற தன்மையும் ஏமாற்றும்தானே என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஏன் அரசியல்வாதிகள் என்றாலே இப்படித்தான் என்பதையும் சேர்த்துக் கொள்வீர்கள்.

அப்படியென்றால் எதற்காக இந்தத் தேர்தல்களில் நாம் அக்கறைப்பட வேண்டும்? இந்தத் தேர்தல்களில் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும்? இதையும் கடந்து நாம் தேர்தலில் முழுமையான ஈடுபாட்டோடு இருக்கிறோம் என்றால், தொடர்ந்தும்  இப்படியானவர்களைத்தான் நம்முடைய பிரதிநிதிகளாகவும் தலைவர்களாகவும் தெரிவு செய்து கொண்டிருக்கப்போகிறோம் என்றுதானே அர்த்தம்?

ஆனாலும் அவ்வப்போது இதையெல்லாம் கண்டு கோபப்படுகிறோம். சலித்துப் பேசுகிறோம். பிறகு வேறு வழியில்லை என்று சொல்லிக்கொண்டு இவர்களுக்கே வாக்களித்து விட்டு வருகிறோம். இது நம்முடைய இயலாமையின் வெளிப்பாடா? அல்லது அறியாமையின் விளைவா? இதிலே சிங்களத் தலைவர்கள்தான் ஏதோ தவறானவர்கள், வாக்குறுதிகளைச் செயற்படுத்தாதவர்கள் என்றில்லை. நம்முடைய தமிழ்த்தலைவர்களும் தமிழ்க்கட்சிகளும் இதிலே சேர்த்தி. ஆகவேதான் கள்வர்களின் கூடாரமாக இலங்கையின் அதிகார அரசியல் முகாமிருக்கிறது.

இதை நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால், புரிந்து கொண்டு மாற்றங்களை உண்டாக்கவில்லை என்றால், தொடர்ந்தும் பிரச்சினை. தொடர்ந்தும் பின்னடைவு. தொடர்ந்தும் அமைதியின்மை. தொடர்தும் துயரமே.

கடந்த காலத்தில்தான் தவறான தேர்வுகளைச் செய்து தவறிழைத்தோம் என்றால் இப்பொழுதும் அப்படி அந்தத் தவற்றைச் செய்ய வேணுமா?

2009 க்குப் பிறகு வருகின்ற எல்லாத் தேர்தல்களிலும் போர் வெற்றி அரசியல் முதலீடாக்கப்படுகிறது. இது ஒரு பக்கமென்றால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாயாக சம்பள உயர்வைத் தருகிறேன் என்கிறார் கோட்டபாய. அப்படியா, இதுதா நான் ஆயிரத்து நானூறாக அதை வழங்குவேன் என்கிறார் சஜித்.

விவசாயிகளின் கடன்களை ரத்துச் செய்வேன் என்கிறார் கோட்டா. விவசாயிகளுக்கு வேண்டியளவுக்கு மானியங்களை வழங்குவேன் என்கிறார் சஜித். போதாக்குறைக்குப் பாடசாலைகளில் மதிய உணவை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்வேன் என்கிறார். நாட்டின் பாதுகாப்புக் கவசமாக இருப்பேன் என்கிறார் கோட்டா. பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்க மாட்டேன் என்கிறார் சஜித். புதிய பொருளாதாரத்திட்டங்களை உருவாக்குவேன் என்கிறார் கோட்டா. சம்பளத்தையே வாங்க மாட்டேன் என்கிறார் சஜித்.

இப்படி ஆளாளுக்கு மாறி மாறி ஏராளம் வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது இந்த ஜனாபதிபதிப் பதவி என்பது ஏதோ கடவுளுக்கு நிகரானது. சர்வ வல்லமை பொருந்தியது. எல்லா நோய்களுக்கும் நிவாரமளிக்கக் கூடிய சர்வரோக நிவாரணி போலவே படுகிறது. ஆனால், யதார்த்தத்தில், உண்மையில் இதெல்லாம் நடக்கவே போவதில்லை.

இதை நடைமுறை அனுபவத்திற் கண்டவர்கள் நாம். ஆகவே இதொன்றும் புதிதல்ல. இதற்கு முன்பிருந்தவர்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்களில்லை இவர்களும் என்பதையே இவர்களுடைய கடந்த காலமும் எங்களுக்கு நிரூபித்திருக்கிறது.

வந்தாலும் வந்தது ஜனாதிபதித் தேர்தல். இந்தத் தேர்தலையொட்டித் தினமும் ஏராளம் ஏராளம் வேடிக்கைக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் இருபத்தைந்து நாட்கள் இருக்கின்றன. அதற்கிடையில் இன்னுமின்னும் ஏராளம் காட்சிகளைப் பார்க்கலாம். ஆனால், இந்தக் காட்சிகள் ஒன்றும் முன்னரைப்போல இலகுவாகக் கடந்து செல்லக் கூடியனவல்ல. அல்லது இலகுவில் மறந்து விடக்கூடியனவாகவும் இருக்காது.

எல்லாம் வல்ல கடவுள், எதையும் செய்யவல்ல ஆண்டவர் என்று தம்மைத்தாமே பிரகடனப்படுத்தும் ஒருவர் தலைவராகும் நவம்பர் 16 கிடையில் இலங்கையில் எத்தனை நாடகங்கள்? எத்தனை கோரிக்கைகள்? எத்தனை வாக்குறுதிகள்?

Share this post:

Recent Posts