தமிழ் සිංහල English
Breaking News

இரண்டு அதிகாரங்கள் கொண்ட இருவர் எப்படி நாட்டை ஆட்சி செய்ய முடியும்.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கை பிரகடனத்தை வெளியிட்ட பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் உத்தியோகபூர்வமாக பேசுவோம். தமிழ் மக்களுக்கு எதனையாவது பெற்றுக் கொடுக்கக் கூடிய தரப்புடன் கூட்டமைப்பு இணைய வேண்டும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடக ஆசிரியர்களுடன் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியல் பிரச்சினைகளுக்கு அப்பால் தெற்கில் உள்ள மக்களும் வடக்கில் உள்ள மக்களும் ஒரே பிரச்சினையையே எதிர்கொள்கின்றனர். ஒரே வகையான பொருளாதார பிரச்சினைகளே சகலருக்கும் உள்ளன. பொருளாதார பிரச்சினையினால் விவசாயிகள், பட்டதாரிகள், மீனவர்கள், வர்த்தகர்கள் உட்பட சகல சமூகத்தினரும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தமிழ் வர்த்தகர்கள் நான்கு பேர் தமது வர்த்தக பின்னடைவு காரணமாக அண்மையில் தற்கொலை செய்து கொண்டதாக அறிகிறேன்.

அரசியல் தீர்வு குறித்து நாங்கள் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுவோம். இது தொடர்பில் பல்வேறு தரப்பினருடன் நாங்கள் பேசிவருகிறோம். தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த சுமந்திரனுடன் கூட நான் பேசினேன்.

அது உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு என்றாலும் கட்சிக்கு அறிவுத்துவிட்டே சுமந்திரன் என்னை சந்தித்தார். நாங்கள் எங்களது கொள்கை பிரகடனத்தை வெளியிட்ட பின்னர் அவர்களுடன் உத்தியோகபூர்வமாக பேசுவோம். யாரையும் நாங்கள் திருட்டுத்தனமாக சந்திக்க மாட்டோம்.

கூட்டமைப்பினர் தமது மக்களுக்கு எதனையாவது பெற்றுக் கொடுக்கக் கூடிய தரப்புடன் இணைய வேண்டும். நான் அறிந்தவரை கூட்டமைப்பு சஜித்துடன் பேசியபோதும் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்வு தொடர்பான அறிவு சஜித்திற்கு இருப்பதாக கூட்டமைப்பினால் உணர முடியவில்லை. எதனை செய்வது என்பதில் அவர் தெளிவில்லாமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எங்களை சர்வாதிகாரிகள் என்று குற்றஞ்சாட்டினாலும் வடக்கு மாகாண சபைத் தேர்தல் உட்பட பல தேர்தல்களும் எமது ஆட்சியிலே நடந்தன. எந்த தேர்தலையும் நம் ஒத்தி வைக்கவில்லை. ஆனால் ரணில் தேர்தல்களை ஒத்தி வைத்தார். இது ஜனநாயகமா? அரசியலமைப்பின் 19வது திருத்தம் நாட்டுக்கு நல்லதல்ல. இரண்டு அதிகாரங்கள் கொண்ட இருவர் எப்படி நாட்டை ஆட்சி செய்ய முடியும். ஜனாதிபதி அல்லது பிரதமர் இருவரின் ஒருவரிடமே அதிகாரங்கள் இருக்க வேண்டும்.” என்றுள்ளார்.

Share this post:

Recent Posts