தமிழ் සිංහල English
Breaking News

இரண்டு தரப்புகளில் இருந்தும் கட்சி தாவல்கள் தீவிரம்.!

சிறிலங்கா அதிபர் தேர்தல் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசியல்வாதிகள் அணி மாறுவதும், கட்சி தாவுவதும், தீவிரமடைந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பிரதி அமைச்சரான டபிள்யூ.பி.ஏக்கநாயக்க நேற்று பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சில நாட்களுக்கு முன்னர் டபிள்யூ.பி.ஏக்கநாயக்க, முன்னாள் அமைச்சர் அதாவுட செனிவிரத்னவுடன் இணைந்து, ஐதேக வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தார்.

சஜித் பிரேமதாசவுடன் செய்தியாளர் சந்திப்பிலும் பங்கேற்ற அவர், நேற்று அனுராதபுரவில் நடந்த பிரப்புரை கூட்டத்தில், கோத்தாபய ராஜபக்சவுடன் அமர்ந்திருந்தார்.

இதனிடையே, அண்மைக்காலமாக மகிந்த ராஜபக்சலை கடுமையாக எதிர்த்து வந்த, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்கவும், கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான அணியில் இணைந்துள்ளார்.

நேற்று அவர் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்து ஆதரவை வெளிப்படுத்தியதுடன், அனுராதபுர பரப்புரைக் கூட்டத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு அருகில் அமர்ந்திருந்தார்.

அதேவேளை, ஐதேகவின் முன்னாள் உறுப்பினரும், பின்னர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்து வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்தவரும், மைத்திரிபால சிறிசேனவினால் கிழக்கு மாகாண ஆளுநராக சிறிது காலம் நியமிக்கப்பட்டிருந்தவருமான றோகித போகொல்லாகம நேற்று ஐதேகவின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதனிடையே சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பரப்புரை பேரணி இன்று காலிமுகத் திடலில் இடம்பெறவுள்ளது, இதில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் பங்கேற்கவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

அதிபர் தேர்தல் நெருங்க நெருங்க, ஆதரவு அலையைப் பொறுத்து, இரண்டு தரப்புகளில் இருந்தும் கட்சி தாவல்கள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post:

Recent Posts