தமிழ் සිංහල English
Breaking News

நாட்டு மக்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்;

தமக்கு கிடைத்த சில தகவல்களுக்கமைய மக்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு தாம் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளதாக கத்தோரிக்கப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

தாம் ஜனாதிபதிக்கு கடிதமூலம் அதனை அறிவித்துள்ளதாகவும், அது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை தொடர்பில் தாம் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் சில தரப்பினர் செயற்பட்டு வருவதாகவும் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்பதைக் குறிப்பிட்ட கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அதனை வைத்துக்கொண்டு சிலர் தமது பெயரை விமர்சித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் காலமென்பதால் அரசியல் நோக்கங்களுக்காக மக்களுக்கிடையில் பிளவுகளையேற்படுத்த சிலர் முயற்சிக்கலாம். அதேபோன்று இதன் பின்னணியில் சர்வதேச செயற்பாடுகளும் இருப்பதாக அறிய முடிகிறது. எவ்வாறெனினும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டியது அரசியல் தலைவர்களின் பொறுப்பாகும் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, நாட்டில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பரப்பப்படும் வதந்திகளில் எவ்வித உண்மையுமில்லை என புலனாய்வு பிரிவு தமக்கு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், எவ்வாறெனினும் இந்த வதந்தி தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கிணங்க இனம் காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this post:

Recent Posts