தமிழ் සිංහල English
Breaking News

கோட்டாவை எந்தக் காரணம் கொண்டும் ஆதரிக்க மாட்டேன்:

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாத போதும், நான் எந்தக் காரணம் கொண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க மாட்டேன்.” என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

சமல் ராஜபக்ஷ வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், தானும் வேட்புமனு தாக்கல் செய்யாதிருக்க இறுதி நேரத்தில் முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

குமார வெல்கம மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். சுதந்திரக் கட்சி கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்குவதால் குறுகிய கால இலாபமே கிடைக்கும்.

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. அதனால் இம்முறை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ராஜபக்ஷவினருக்கு மாத்திரம் போட்டியிட அனுமதி வழங்க முடியாது. தினேஷ் குணவர்தன போன்ற ஒருவரை நிறுத்தியிருந்தால் பிரச்சினை கிடையாது.” என்றுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக குமார வெல்கம சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பாளர் களமிறங்காவிட்டால் தான் போட்டியிடுவதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். எனினும் அவர் இறுதி நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

Share this post:

Recent Posts