தமிழ் සිංහල English
Breaking News

“ஜனாதிபதித் தேர்தல் : கூட்டமைப்பின் நிலைப்பாடு? – – கருணாகரன்

“ஜனாதிபதித் தேர்தல் குறித்து யாருமே எதிர்பார்க்காத முடிவுகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன். கூட்டமைப்பின் பேச்சாளர் என்பதற்குமப்பால், அதற்காகத் தீர்மானமெடுக்கும் வல்லமையைக் கொண்டிருப்பவர் சுமந்திரன். எனவே சுமந்திரனின் வார்த்தைகள் எளிதில் புறக்கணித்து விடக்கூடியவை அல்ல.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலைக்குறித்து சுமந்திரன் பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு அபிப்பிராயங்களைச் சொல்லி வருகிறார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். “தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எழுத்து மூலமான உத்தரவை யார் தருகிறார்களோ, அவர்களைக் கூட்டமைப்பு ஆதரிக்கும்” என்ற அறிவிப்பையும் சுமந்திரன் விடுத்திருக்கிறார். (இந்த எழுத்துமூல உத்தரவாதம் என்பது ஒரு மாயாஜாலமே ஏனெனில் இதற்கு ஒருபோதும் எந்தவொரு சட்டவலுவும் கிடையாது. இது புகழ் மிக்க சட்டத்தரணியான சுமந்திரனுக்குத் தெரியாது என்றில்லை). மேலும்,

 “எல்லாத் தரப்பினரோடும் கூட்டமைப்புப் பேசும். யார் எமது கோரிக்கைகளுக்கு இணங்குகிறார்களோ, அவர்களுக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்கும்” என்றும் கூறியிருக்கிறார் அவர். “எதற்கும் நாம் அவசரப்பட மாட்டோம். பொருத்தமான நேரத்தில் எமது அறிவிப்பு வெளியாகும்” எனவும் சொல்லியிருக்கிறார் சுமந்திரன். “ஜனாதிபதித் தேர்தல் குறித்து சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயம் எப்படி இருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதற்கேற்றவிதமாக எமது தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும்” எனவும் கூறுகிறார். இப்படிப் பலவிதமாகப் பேசி வரும் சுமந்திரன், இனி வரும் நாட்களில் இன்னும் என்னவெல்லாம் சொல்லப்போகிறாரோ!?

இதை நீங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் மனிதர் சரியாகத்தானே சொல்லியிருக்கிறார், தமிழ் மக்களுடைய நலனின் அடிப்படையில் சிந்திக்கிறாரே என்று தோன்றும். கொஞ்சம் கவனமாக அவதானித்தால் இது ஏதோ ஒரு சினிமாக்களுக்கான விளம்பரப்படுத்தல்களை ஒத்த அரசியல் விளம்பரப்படுத்தல் போலப்படும். அதுதான் சரி. இது சுமந்திரனுடைய வணிக உத்தியே.

ஜனாதிபதித் தேர்தலைக் குறித்து கூட்டமைப்பு கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறது. தீவிர பரிசீலனையில் உள்ளது போன்ற மாதிரியான ஒரு தோற்றத்தை உண்டாக்கிக் கொண்டு, மறுவளத்தில் தமக்கான (மக்களுக்கானதல்ல) பேரத்தைக் கூட்டுவதற்கான உபாயங்களையே சுமந்திரன் செய்து கொண்டிருக்கிறார்.

இப்படிச் சொல்லிக் கொண்டு சுமந்திரன் சும்மா இருக்கவில்லை. அப்படி இருக்கும் ஆளும் அவரில்லை. மறுபக்கத்தில் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களோடும் அவர்களுடைய தரப்புகளோடும் வெளிப்படையான மற்றும் ரகசியமான உரையாடல்களிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த உரையாடல்களும் உறவாடல்களும் உண்மையில் தமிழ் மக்களுடைய அரசியல் ஈடேற்றத்துக்கும் இலங்கைத்தீவின் நன்மைகளுக்கும் ஏற்றதாக இருக்குமா? அல்லது கூட்டமைப்பினுடைய மேல்மட்டத்தின் நலன்களை மட்டுமே குறியாகக் கொண்டிருக்குமா என்பதே கேள்வி.

ஏனிந்தக் கேள்வி என்றால், 2009 க்குப் பிந்திய கூட்டமைப்பின் முடிவுகள் அனைத்தும் இப்படித்தான் அமைந்திருக்கின்றன. மக்களுக்கான நலன்கள் கிட்டியதை விடவும் கூட்டமைப்பின் உயர்பீடத்தினர் பெற்றுக்கொண்ட நலன்களும் அனுகூலங்களும் அதிகமாக இருந்தது. ஆகவே அதிலிருந்து அது தன்னை மாற்றிக் கொள்ளாதவரையில் நாம் இவ்வாறே கூட்டமைப்பின் அறிவிப்புகள், முடிவுகள் பற்றியெல்லாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது, முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

இப்போது கூட சுமந்திரன் மட்டுமே தனியே நின்று கம்பைச் சுற்றிக் கொண்டிருக்கிறார். கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ரெலோ, புளொட் போன்றவற்றை இந்த விசயத்தில் அவர் இணைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. அவையும் இதில் இணைந்து கொண்டதாகவோ சுமந்திரனை இடையீடு செய்வதாகவோ இல்லை. ஜனாதிபதித் தேர்தலைக்குறித்து இவையெல்லாம் சேர்ந்து விவாதித்ததாகவும் தெரியவில்லை.

எல்லாவற்றையும் சம்மந்தன் ஐயா பார்த்துக் கொள்வார் என்று புளொட்டின் முக்கியஸ்தர் ஒருவர் மிகச் சாதாரணமாகச் சொன்னார். அப்படியென்றால் உங்களுடைய பாத்திரம் என்ன என்று கேட்டேன். அதை எங்களுடைய தலைவர் (சித்தார்த்தன்) பார்த்துக் கொள்வார் என்றார் சிம்பிளாக. ஆனால், சித்தார்த்தனின் குரலை எங்குமே கேட்கமுடியாதிருக்கிறது.

ஒரு காலம் மிதவாத அரசியல் தலைமைகளின் பொறுப்பின்மைகளையும் தவறுகளையும்  கண்டு கோபமுற்று, எல்லாவற்றையும் சீராக்கவெனக் களமிறங்கிய போராளிகள், இன்று இயலாவாளிகளாகி, இப்படித் தவறிழைக்கும் தலைமைகளின் காலடியில் தஞ்சமே என உறங்கிக் கிடப்பதென்பது நமது துயரமா? வரலாற்றின் துயரா?

ரெலோவின் நிலைமையும் ஏறக்குறைய இதுதான். ஏதோ நடக்கட்டும். எல்லாவற்றையும் சம்மந்தனும் சுமந்திரனும் பார்த்துக் கொள்வார்கள் என.

ஆனால், ஒரு கூட்டமைப்பு என்ற அடிப்படையில் தமிழ்ச்மூகத்தின் முன்னே வந்து நிற்கும் ஜனாதிபதித் தேர்தல் என்ற மிகச் சிக்கலான ஒரு விடயத்தை தனியாகத் தமிழரசுக்கட்சி மட்டும் தீர்மானம் எடுக்க அனுமதிப்பது சரியானதல்ல. ஆனாலும் தமிழரசுக்கட்சியே இதைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறது. இதை வடமாகாணசபையின் முன்னாள் அவைத் தலைவர் சிவஞானமும் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆகவே கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்குக் கட்டுப்படுவோராக ரெலோவினரும் புளொட்டுகளும் இருக்கிறார்கள் எனலாம்.

இதையெல்லாம் தமக்கான அங்கீகாரமாகவும் வாய்ப்பாகவும் எடுத்துக் கொண்ட சுமந்திரன் தனக்கேற்ற விதமாகக் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். இதற்கான வியூகத்தின்படி – சுமந்திரனின் ஏற்பாட்டின்படி – அவர் ஏற்கனவே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை சஜித்துக்கான ஆதவாளர்களாகக் களமிறக்கினார். அவர்கள் ஒரு மாதத்துக்கு முன்னரே சஜித்தை ஆதரித்துப் பேசத் தொடங்கி விட்டனர்.

இப்படிப் பகிரங்கமாக அவர்கள் சஜித்தை ஆதரிப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது என்ற தொனியில் சுமந்திரனும் தமிழரசுக் கட்சியும் பேசாதிருந்ததை நாம் கவனிக்கலாம். சஜித் ஆதரவு மக்களிடம் எதிர்ப்பாக மாறியிருந்தால் மேற்சொன்னவாறு அந்த எம்பிமாரின் தலையில் பழியைச் சுமத்தியிருப்பார்கள். கணக்குத் தீர்க்கப்பட்டிருக்கும்.

ஆகவே இந்த முன்னோட்டம் மக்கள் மத்தியில் எப்படியானதொரு அபிப்பிராயத்தை உருவாக்கக் கூடியது என்று கவனிப்பதே சுமந்திரனின் நோக்கம். இதை ஒரு முன்னோட்டத்தை மதிப்பீடாகச் செய்து கொண்டு (நாடிபிடித்துப் பார்த்துக் கொண்டு) ஜனாதிபதித் தேர்தலின் பொழுது தமது நிலைப்பாட்டை அறிவிக்கலாம் என்று சம்மந்தனும் சுமந்திரனும் கருதிக் கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது ஏறக்குறைய சஜித் ஆதரவு நிலைப்பாட்டுக்கு அண்மித்ததாகவே கூட்டமைப்பு உள்ளது. ஆனாலும் அதைப் பகிரங்கமாகச் சொல்வதற்கு மட்டும்  தயங்குகிறது அது. ஏனென்றால், தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைகள் தொடக்கம் வாழ்க்கைத் தேவைகள் வரையில் எதற்கும் சஜித் எத்தகைய உத்தரவாதங்களையும் கொடுக்காத நிலையில் இருக்கும்போது எப்படிப் பகிரங்கமாக சஜித்துக்கான ஆதரவைக் கொடுக்க முடியும்? என்பதே இந்தத் தயக்கத்துக்குக் காரணம். இந்தத் தயக்கத்தினால் ஆதரவை அளிக்கும் வரையில் இப்படி அப்படி என்று ஏய்ப்புக்காட்டும் வித்தையைச் செய்து கொண்டிருக்கிறார் சுமந்திரன்.

எனவேதான் இந்தப் பூச்சுற்றல்களெல்லாம்.

ஆனாலும் வழமையைப்போல தேர்தல் நெருங்கும் சந்தர்ப்பமான இறுதிக்கணத்தில் சம்மந்தனுடைய அறிவிப்பு வெளியாகக் கூடிய வாய்ப்புகளே அதிகமாக உள்ளது. அந்த அறிவிப்பு தேர்தலுக்கு இரண்டு மூன்று நாட்களின் முன்னதாகவே இருக்கும். அப்போதுதான் மற்றத் தரப்புகள் எதையும் செய்ய முடியாத சூழலை உருவாக்கலாம் என்று சம்மந்தனுக்குத் தெரியும்.

எனவே சம்மந்தன் – சுமந்திரன் ஆகியோரின் அறிவிப்புகள் அதை நோக்கிய வியூகமாக அமையப்போகின்றன. அது “சஜித்தை ஆதரியுங்கள். அன்னமே  எமது சின்னம். ஆகவே அன்னத்திற்கு வாக்களியுங்கள். சஜித்துக்கு நீங்கள் ஆதரவளிக்கவில்லை என்றால் அந்த இடத்தில் கோத்தபாய வந்து குந்தி  விடுவார். கோத்தபாய எப்படியான ஆள் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? அப்படியானவர் ஜனாதிபதியாகினால் நிலைமை என்னாகும்!” என்றெல்லாம் கதைகள் புனையப்படப்போகின்றன. அதாவது மக்களுக்கு அச்சத்தை ஊட்டி அதன்மூலம் அரசியல் அறுவடையைச் செய்யும் உத்தியைப் பயன்படுத்தப்போகின்றனர்.

ஆனால் கோத்தபாய அளவுக்கே சஜித்தும் கடும்போக்காளராக, தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள மறுப்போராக உள்ளார். இதில் எந்தப் பிசாசு நல்லது. எந்தப் பேயை ஏற்பது என்பதல்லப் பிரச்சினை. தமிழ்ச்சமூகத்துக்கு எந்த முடிவு பொருத்தமானதாக இருக்கும். அதற்கான திட்டமென்ன? அதைச் செயற்படுத்தும் பொறிமுறைகள் மற்றும் வியூகங்கள் எல்லாம் என்ன என்றே பார்க்க வேண்டும்.

அரசியலை அறிவியல் ரீதியானது என்ற அடிப்படையில் நோக்கும்போதே இதன் தாற்பரியம் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இல்லையென்றால், சும்மா மேலோட்டமாகக் கறுப்பு வெள்ளையாகப் பார்த்துத் தவறான முடிவுகளை நோக்கியே செல்ல வேண்டியிருக்கும். இதுவரையான அணுகுமுறைகளும் முடிவுகளும் அப்படியானவையாகவே உள்ளன.

இந்தப் போக்கில் இன்னொரு வேலையையும் கூட்டமைப்புச் செய்யக் கூடும். சிலவேளை ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைப்படியும் விருப்பத்தின்படியும் கூட்டமைப்பு தனியாக ஒரு வேட்பாளரைக் களமிறக்கலாம். அது சஜித்துக்கும் கோத்தாவுக்கும் சம நேரத்தில் நெருக்கடியைக் கொடுக்கக் கூடியதாக. மறுவளமாக விருப்பு வாக்கு என்ற அடிப்படையில் இரண்டாவது வாக்கினை சஜித்துக்கு வழங்கக் கூடிய வாய்ப்பை உருவாக்கும் விதமாக.

எல்லாவற்றுக்கும் இன்னும் பத்து நாட்கள் மட்டுமே உண்டு.

Share this post:

Recent Posts