தமிழ் සිංහල English
Breaking News

கோத்தாவா, சஜித்தா? – சனியன்று சுதந்திரக் கட்சி முடிவு

வரும் அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து, சனிக்கிழமை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணியை அமைப்பது குறித்த பேச்சுக்கள் வரும் 5ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்குமாறு ஐதேக பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம் விடுத்த அழைப்பை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கடந்த திங்கட்கிழமை கூடி, பரிசீலித்தது.

சனிக்கிழமை நடக்கவுள்ள கூட்டத்தில் பொதுஜன  பெரமுனவிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காவிடின், ஐதேகவிடம் இருந்து விடுக்கப்பட்டுள்ள அழைப்பை பரிசீலிப்பதை விட எமக்கு வேறு தெரிவு இல்லை.

சனிக்கிழமைக்கு முன்னர் சாதகமான பதில் கிடைக்கும் என்றும், பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கும் சாத்தியம் உள்ளது என்றும் நாங்கள் நம்புகிறோம்.

பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ஒரு தம்மால் பெரும்பான்மையை அல்லது, 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற  முடியும் என்று கற்பனையில் மிதக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் முக்கியமானதாக இருக்கும்” என்றும் அவர் கூறினார்.

Share this post:

Recent Posts