தமிழ் සිංහල English
Breaking News

சிறுபான்மையின வாக்குகளின் சக்தி.!

எஸ்.றிபான் –
ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி நடத்த முடியுமென்று தேர்தல் ஆணைக் ஒரு முன் அறிவித்தலைச் செய்துள்ளது. இந்நிலையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் இரண்டிற்கு மேற்பட்ட பிரபல்யமான அரசியல்வாதிகள் போட்டியிட தயாராக இருக்கின்றார்கள். தேர்தலுக்குரிய பிரச்சாரங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆயினும், வழக்கம் போல ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் ஒருவரே வெற்றி பெறுவார்கள் என்றதொரு நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளினால் மாத்திரம் வெற்றி பெற முடியுமென்று நம்பிக்கை கொண்டு, அதற்குரிய முன் ஆயத்தங்களை பல வழிகளிலும் மேற்கொண்டவர்களும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இருக்கின்றார்கள். இவர்கள் கூட இப்போது சிறுபான்மையினரின் வாக்குகளின் அவசியத்தை உணர்ந்துள்ளார்கள். இதனால், சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்குரிய நகர்வுகளை மேற்கொண்டுள்ளார்கள்.
 
தேர்தல் முடிவுகள்
 
ஜனாதிபதித் தேர்தல்களின் போது சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளார்கள். 1988ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக ஆர்.பிரேமதாஸவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவும் போட்டியிட்டார்கள்; இத்தேர்தலில் ஆர்.பிரேமதாஸ 25 இலட்சத்து 69 ஆயிரத்து 199 வாக்குளைப் பெற்றுக் கொண்டார். ஸ்ரீமாவோ பண்டார நாயக்க 23 இலட்சத்து 89 ஆயிரத்து 960 வாக்குகளைப் பெற்றார். 2 இலட்சத்து 79 ஆயிரத்து 239 வாக்குகளினால் ஆர்.பிரேமதாஸ வெற்றி பெற்றார். இவரது இந்த வெற்றி முஸ்லிம் காங்கிரஸ் இறுதிக் கட்டத்தில் ஆர்.பிரேமதாஸவுக்கு வாக்களிக்குமாறு தமது ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டதன் மூலமாக கிடைத்தது. முஸ்லிம் காங்கிரஸ் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் 12 வீதமாவுள்ள வெட்டுப் புள்ளியை 05 வீதமாகக் குறைக்க வேண்டுமென்ற நிபந்தனையை முன் வைத்தே மர்ஹும் அஸ்ரப் ஆர்.பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கினார்.
1994ஆம் ஆண்டு தேர்தலில் சந்திரிகா பண்டார நாயக்கா 47 இலட்சத்து 09 ஆயிரத்து 205 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வஜிர சிறிமதி திஸாநாயக்கா (காமினி திஸாநாயக்கவின் மனைவி) 27 இலட்சத்து 15 ஆயிரத்து 285 வாக்குகளைப் பெற்றார். சந்திரிகா பண்டார நாயக்கா 19 இலட்சத்து 93 ஆயிரத்து 920 வாக்குகளினால் அநோக வெற்றி பெற்றார். இத்தேர்தலில் சந்திரிகா பண்டார நாயக்காவை தமிழ், முஸ்லிம் மக்கள் சமாதனத்தின் தேவையாகவே பார்த்தார்கள். அவரது தேர்தல் பிரச்சாரங்களுக்காக பயன்படுத்தப்பட்ட போஸ்டர்களில் வெண்புறா காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஜே.வி.பியின் போராட்டத்தை அடக்குவதற்காக இராணுவம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளினால் சுமார் 25 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். மேலும், நீண்ட காலமாக ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி செய்ததில் ஏற்பட்ட அலுப்பு, இதனால், ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பு போன்ற காரணிகள் சந்திரிகா பண்டார நாயக்கா அதிக வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாலும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வஜிர சிறிமதி திஸாநாயக்கா ஒரு வலுவான வேட்பாளராக இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும், வடக்கு, கிழக்கு மற்றும் மலைய பகுதியில் வாழும் சிறுபான்மை மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் சந்திரிகா பண்டார நாயக்காவுக்கே அளிக்கப்பட்டன. 1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மர்ஹும் அஸ்ரப் சந்திரிகா பண்டார நாயக்காவுடன் (சந்திரிகா – அஸ்ரப் உடன்படிக்கை) ஒன்றினை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலின் பின்னர் அமைக்கபட்ட அரசாங்கத்தில் மர்ஹும் அஸ்ரப் முக்கிய அமைச்சராக இருந்தார். அவர் செய்து கொண்ட சந்திரிகா – அஸ்ரப் உடன்படிக்கையின் பிரகாரம் பல பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டார். தென்கிழக்கு பல்கலைக் கழகம், ஒலுவில் துறைமுகம், தொழில் நுட்பக் கல்லூரிகள், குடிநீர் வசதி, இடம்பெயர்ந்த ஒரு தொகுதி முஸ்லிம்களை வட மாகாணத்திற்கு வெளியே அம்பாரையில் பாலமுனையிலும், புத்தளத்திலும் மீள்குடியேற்றம் செய்தார். பல ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில்களை வழங்கினார்.
1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா பண்டார நாயக்காவை எதிர்த்து ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டார். இத்தேர்தலில் சந்திரிகா பண்டார நாயக்கா 43 இலட்சத்து 12 ஆயிரத்து 157 வாக்குகளைப் பெற்றார். ரணில் விக்கரமசிங்க 36 இலட்சத்து 02 ஆயிரத்து 748 வாக்குகளைப் பெற்றார். சந்திரிகா பண்டார நாயக்கா 7 இலட்சத்து 09 ஆயிரத்து 409 வாக்குகளினால் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சந்திரிகா பண்டார நாயக்காவுக்கு ஆதரவு வழங்கியது.
2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மஹிந்தராஜபக்ஷ வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டார். ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டார். இத்தேர்தலில் மஹிந்தராஜபக்ஷ 48 இலட்சத்து 87 ஆயிரத்து 152 வாக்குகளைப் பெற்றார். ரணில் விக்கிரமசிங்க 47 இலட்சத்து 06 ஆயிரத்து 366 வாக்குகளைப் பெற்றார். மஹிந்தராஜபக்ஷ ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 786 வாக்குகளினால் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன மஹிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தன. இதே வேளை, இத்தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அளிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது. தமிழ் மக்களும் அத்தகையதொரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள். என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதனால் மஹிந்தராஜபக்ஷ மேற்படி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அன்று தமிழ் மக்களை வாக்களிப்பதில் இருந்து தடுக்காது இருந்தால் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றிருப்பார்.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தராஜபக்ஷவை எதிர்த்து பொது வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டார். இதில் மஹிந்தராஜபக்ஷ 60 இலட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளைப் பெற்றார். சரத்பொன்சேகா 41 இலட்சத்து 73 ஆயிரத்து 185 வாக்குகளைப் பெற்றார். மஹிந்தராஜபக்ஷ 18 இலட்சத்து 42 ஆயிரத்து 749 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இத்தேர்தலில் மஹிந்தராஜபக்ஷ பெரு வெற்றி பெறுவதற்குரிய காரணம் புலிகளை முற்றாகத் தோற்கடித்தைமயாகும். சிங்கள மக்கள் அவரை வெற்றி வீரனாகவே கணித்தார்கள். புலிகளை தோல்வியடைச் செய்தமைக்காக பெரும்பான்மையான முஸ்லிம்களும் மஹிந்தராஜபக்ஷவுக்கு வாக்களித்தார்கள். இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகியன மஹிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தன.
2010 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தராஜபக்ஷ பெற்ற பெரு வெற்றியால் (57.88 வீத வாக்குகள்) அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பதனை விடவும் ஒரு மன்னனைப் போலவே செயற்பட்டார். இதற்கு சிங்கள மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த வரவேற்பும் ஒரு காரணம் எனலாம். இதனால் தமது ஆட்சியை தமது குடும்பத்தை சூழவே அமைத்துக் கொண்டார். அமைச்சர்கள் என்போர் பெயரளவில் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்கள். மேலும், இக்காலப் பகுதியில் பௌத்த இனவாத அமைப்புக்களுக்கும் அவருக்கும் இடையே நெருக்கமான உறவுகள் இருந்தன. இத்தகைய காரணங்களினால் மஹிந்தராஜபக்ஷ தம்மை இனி யாராலும் வெற்றி கொள்ள முடியாதென்று செயற்பட்டார். இக்காலப் பகுதியில் பௌத்த இனவாதிகளின் நடவடிக்கைகள் சிறுபான்மையினரை அடிமைப்படுத்துவதாக இருந்தது. இதனால் சிறுபான்மையினர் மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியின் மீது வெறுப்படைந்திருந்தார்கள்.
இந்தப் பின்னணியில்தான் அரசியல் யாப்பின் பிரகாரம் ஒருவர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் மூன்றாவது தடைவ போட்டியிட முடியாது. இந்த ஏற்பாட்டை திருத்தி அமைத்து தாம் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்க வேண்டுமென்ற பதவியாசையால் அரசியல் அமைப்பில் 18வது திருத்தத்தைக் கொண்டு வந்தார். அதன் படி ஒருவர் எத்தனை தடவையும் ஜனாதிபதிப் பதவிக்கு தெரிவு செய்யப்படலாமென்று மாற்றியமைத்தார். இதற்கு முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும்  ஆதரவு அளித்தன. பின்னர் அதனைப் பெரும் தவறு என்றும் இக்கட்சிகள் தெரிவித்துக் கொண்டன. பின்னர் 2015இல் பாராளுமன்றத்தில் 18வது திருத்தத்தில் உள்ளவற்றை வறிதாக்குவதற்காக 19வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கும் முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளித்தன. இதன் மூலமாக முஸ்லிம் கட்சிகள் கொள்கைகளின்றி அழைப்பவரின் பின்னால் அலைக்கின்றன என்று தெளிவாகின்றது.
அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 18வது திருத்தத்தின் பிரகாரம் தமக்குரிய ஆட்சிக் காலம் இன்னும் சுமார் இரண்டு வருடங்கள் இருக்கின்ற நிலையில் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நடத்தினார். சிங்கள மக்களிடம் தமக்கு இருக்கின்ற வரவேற்பு, பௌத்த அமைப்புக்களின் ஆதரவு என்பவற்றுடன் புலிகளுடனான வெற்றியும் தமக்கு இன்னும் உதவும் என்றும் எதிர்பார்த்தார். ஆனால், இத்தேர்தலில் சிறுபான்மையினரின் மனங்களை வெல்லக் கூடிய காரியங்களை அவர் செய்யவில்லை. பௌத்த சிங்கள மக்களின் தனிப் பெரும் வாக்குகளினால் வெற்றி கொள்ள முடியுமென்றதொரு அதித நம்பிக்கையில் இருந்தார். இந்நிலையில் சிறுபான்மையின மக்கள் தங்கள் சார்புக் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்று ஆதரவாளர்களுக்கு அறிவிப்பதற்கு முன்னதாகவே சிறுபான்மை மக்களில் மிகக் கூடியவர்கள் மஹிந்தராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிக்கும் மனப் பதிவைக் கொண்டிருந்தார்கள். இதனால்தான் முஸ்லிம் கட்சிகளும் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தராஜபக்ஷவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியன.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன 62 இலட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்றார். மஹிந்தராஜபக்ஷ 57 இலட்சத்து 68 ஆயிரத்து 90 வாக்குகளைப் பெற்றார். மஹிந்தராஜபக்ஷ 4 இலட்சத்து 49 ஆயிரத்து 72 வாக்குகளினால் தோல்வி அடைந்தார். மைத்திபால சிறிசேனவின் இந்த வெற்றிக்கு பிரதான காரணகர்த்தாக்கள் சிறுபான்மையினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சிறுபான்மையினரின் வாக்குகள்
 
மேற்படி ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் படி சிறுபான்மையினரின் வாக்குகள்தான் வெற்றி பெறுகின்றவரை தீர்மனித்துள்ளன. இவ்வாறு சிறுபான்மையினரின் வாக்குகளினால் வெற்றி பெற்றவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராகவே செயற்பட்டு வந்துள்ளார்கள். சிறுபான்மையினரை தேர்தல் காலங்களில் மாத்திரம் அணுகி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றி வருகின்றார்கள். சிறுபான்மையினரின் வாக்குகளினால் வெற்றி பெற்றதன் பின்னர் பெரும்பாலும் ஜனாதிபதிகளை வழி நடத்தியவர்களாக பௌத்த இனவாதிகளும், இனவாத தேரர்களுமே இருந்து வந்துள்ளார்கள். அத்தகையதொரு சூழல்தான் இன்றும் காணப்படுகின்றன.
இப்போது சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக வேண்டுமென்று வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளவர்கள் திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றார்கள். சிறுபான்மையினரை கவரும் வார்த்தைகளை பிரயோகித்துக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய வார்த்தைகளினால் தெரிவிக்கப்பட்டதை தேர்தல் முடிந்ததும் மறந்து போய்விடுவார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க போட்டியிட இருக்கின்றார். அவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்குரிய நிகழ்தகவு குறைவாகவே இருக்கின்றன. ஆயினும், அரசியலில் எந்தவொரு திடீர் மாற்றங்களும் ஏற்படலாம். ஆயினும், ஜனாதிபதித் தேர்தல் மூலமாக தமது கட்சிக்கு பெரும் தொகை வாக்காளர்களை இணைத்துக் கொள்ளும் திட்;டத்தை ஜே.வி.பி வகுத்துள்ளது. இதனால்தான் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி ஜே.வி.பின் தலைவர் பேசிக் கொண்டிருக்கின்றார். அவர் முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதன் மூலமாக முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென்று நம்புகின்றார். இதே வேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பிக்கு வாக்களிக்க வேண்டுமென்று முஸ்லிம் பிரதேசங்களில் கருத்துக்கள் முன் வைப்பதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
இதே வேளை, ஏனைய பிரதான கட்சிகள் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றியும், தீர்வுகள் பற்றியும் பேசிக் கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது வழக்கமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளரையே ஆதரிக்க முடியுமென்று தெரிவித்துள்ளது. அத்தோடு பௌத்த சிங்களவர்களை கவர்வதற்காக பௌத்த விகாரைகளை புனரமைப்புச் செய்வோம், பௌத்த தர்மத்தைக் காப்போம், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்போம், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்றெல்லாம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதே வேளை வாக்காளர்கள் தாம் யாருக்கு வாக்களிக்க இருக்கின்றோம் என்று இப்போதே தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதித் தேர்தல்கள் பல வாக்குறுதிகளை சுமந்து கொண்டு வரப் போவது உண்மையாகும். இந்நிலையில் சிறுபான்மையினர் மீண்டும் ஒரு தடைவ ஏமாறுவதற்கு தயார் நிலையில் இருக்கின்றார்கள். இலங்கையில் எப்போதும் போலி வாக்குறுதிகளினால்தான் வாக்குகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. இலங்கை வாக்காளர்கள் இனம், மதம், மொழி ஆகியவற்றிக்குள் மூழ்கியுள்ளார்கள். இதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டுமென்று சிந்திப்பதில்லை. அதே வேளை, இனம், மதம், மொழி ஆகியவற்றிலிருந்து நாட்டு மக்களை விடுவிக்க வேண்டுமென்று அரசியல் கட்சிகளும் சிந்திப்பதில்லை. அரசியல் கட்சிகளுக்கு இத்தகைய வேறுபாடுகளும், அதனால் ஏற்படும் முரண்பாடுகளும், சண்டைகளும் தேவைப்பட்டவையாக இருக்கின்றன. தன்னிலையையும், சூழலையும் உணராதவர்கள் அதிகம் பேர் இலங்கையில் உள்ளார்கள். அதனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் பொய்களும், போலியான வாக்குறுதிகளும், இனவாதமும் சூறாவளியாக கிளம்பும் என்பதில் ஐயமில்லை.

Share this post:

Recent Posts