தமிழ் සිංහල English
Breaking News

‘சிங்கள அரசும் கூட்டமைப்பும் ஏமாற்றிவிட்டன’ .!

சிறிலங்கா அரசாங்கத்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலும் ஏமாற்றப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று (05) இடம்பெற்ற போராட்டத்தின்போது சுகாதாரத் தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரத் தொண்டர்கள் நியமனத்தை மீள் பரிசீலணை செய்யக்கோரி, நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட தொண்டர்கள் இன்று (05) சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வின் பிரதான மண்டபத்தை முற்றுகையிட்ட,  நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட தொண்டர்கள் தமக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சம்பவ இடத்திற்குச் சென்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சித் தலைவருமான மாவை.சேனாதிராஜா ஒருவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் உரையாடி போராட்டத்தை முடித்துவைப்பதற்கு முயன்றார்.

மாவை சேனாதிராஜாவின் வழமையான வாக்குறுதிகளை நம்ப முடியாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அப்போது தொண்;டர் ஒருவர் யாருமே எதிர்பார்க்காத வகையில் மண்ணெண்ணெயை தலையில் ஊற்றித் தீவைத்து தற்கொலைக்கு முயன்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிறிலங்கா அரசும் தங்களை ஏமாற்றிவிட்டது, இனியும் எம்.பிக்களின் வாக்குறுதிகளை நம்பிப் பயனில்லை, எமது குடும்பம் வறுமையில் வாடுகின்றது, நாம் சாவதைத் தவிர வேறு வழியில்லை எனக் கத்தியவாறே குறித்த சுகாதாரத் தொண்டர் மண்ணெண்ணெயை தலைக்கு ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றார்.

சுகாதாரத் தொண்டர்களின் போராட்டத்தில் தற்கொலைக்கு முயன்றவர் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டவர்... (களத்தில் இருந்து நேரடி அறிக்கை)

எனினும், அங்கிருந்த சக தொண்டர்களும் ஏனையவர்களும் பெரும் பிரயத்தனத்துடன் அவரைக் காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

யுத்தம் தீவிரமாக நடைபெற்ற காலத்தில் சுகாதாரத் திணைக்களத்தால் வேலைக்கு அமர்தப்பட்டு பெரும் பணிகளை ஆற்றப் பணித்த சுகாதாரத் தொண்டர்களை இன்று சுகாதாரத் திணைக்களமும் அரசியல்வாதிகளும் புறக்கணித்திருக்கின்றனர்.

நியமனம் வழங்கப்படும் போதெல்லாம் அரசியல்வாதிகள் போலியாகத் தயாரித்த ஆவணங்களைப் பயன்படுத்தி தமக்கு நெருக்கமானவர்களுக்கும் தமது உறவினர்களுக்கும் தமது ஆதரவாளர்களுக்கும் நியமனம் வழங்கி வருகின்றனர்.

ஒரு நாள் வைத்தியசாலையில் பணியாற்றாத பலருக்கு இவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனவும் இதனால் தாங்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் இன்று சாவகச்சேரியில் இடம்பெற்ற போராட்டத்தில் பங்குபற்றிய சுகாதாரத் தொண்டர் ஒருவர் தெரிவித்தார்.

இன்று தற்கொலைக்கு முயன்றவர் பல வருடங்களாக கடும் பணியாற்றியவர் எனவும் தற்போது அவர் உள்ளிட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டு அரசியல்வாதிகளின் சிபாரிசுகளின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படுவதால் அவர் விரக்தி அடைந்து தற்கொலைக்கு முயன்றார் எனவும் பெயர் குறிப்பிட விரும்பாத மேற்படி சுகாதாரத் தொண்டர் குறிப்பிட்டார்.

சுகாதாரத் தொண்டர்களின் போராட்டத்தில் தற்கொலைக்கு முயன்றவர் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டவர்... (களத்தில் இருந்து நேரடி அறிக்கை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கஜன் இராமநாதன் மற்றும் விஜயகலா போன்றோரும் இணைந்து தங்களை ஏமாற்றிவிட்டனர் எனவும் தமது ஆதரவாளர்களுக்கே நியமனம் வழங்கி வருகின்றனர் எனவும் அவர் குறைப்பட்டார்.

இதேவேளை, சுகாதாரத் தொண்டர்களாகிய தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் எனக் கூறியே யுத்த காலத்தில் தங்களைக் கொண்டு வேலை வாங்கினர் எனவும் இதில் முன்னாள் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரனுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது எனவும் சுகாதாரத் தொண்டர்கள் குற்றம் சாட்டினர்.

யுத்த காலத்தில் குடும்பநல சுகாதார மாதுக்களுக்கும் சுகாதாரத் துறையில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் பற்றாக்குறை நிலவிய காலத்தில் தாங்கள் ஓய்வின்றிக் கடும் பணி ஆற்றினர் எனவும் பின்னர் அரசியல் ரீதியாக தாங்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

நியமனம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை நம்பி தாங்கள் தொடர்ந்தும் தொண்டர்களாகப் பணியாற்றினர் எனவும் இப்போது 45 வயதைக் கடந்தவர்கள் கூட நியனம் இன்றி தொண்டர்களாகவே பணியாற்றுகின்றனர் எனவும் சுகாதாரத் தொண்டரான பெண் ஒருவர் கூறினார்.

அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அங்கஜன் மற்றும் அமைச்சர் விஜயகலா ஆகியோரும் தங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றினால் தாங்கள் அனைவரும் கூட்டாக இணைந்து பொது வெளியில் தற்கொலை செய்துகொள்வார்கள் எனவும் அவர் கூறினார்.

இன்று அதற்கான முன்னெச்சரிக்கையை தமது தொண்டர் வெளிப்படுத்தி காப்பாற்றப்பட்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.

நேரடி அறிக்கை –
களத்தில் இருந்து ஜெனி

Share this post:

Recent Posts