தமிழ் සිංහල English
Breaking News

19வது திருத்தம் மூன்று தலைவர்களை உருவாக்கி விட்டது;

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டுமென்றுதான் நான் கூறி வருகிறேன். எனினும், அரசியலமைப்பை உருவாக்குவதாக நாடாளுமன்றத்தில் நான்கு வருடமாக சொல்லிக்கொண்டிருப்பவர்கள் என்ன செய்தார்கள்?  அரசியலமைப்பை உருவாக்குவதாக கூறி, வடக்கு மக்களை ஏமாற்றியுள்ளனர் என தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, கைதடியில் வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியை திறந்து வைத்து உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தின் போது, படையினரின் பாவனைக்காக பெறப்பட்ட அரச. தனியார் காணிகளில் 95 வீதமானவற்றை விடுவித்து விட்டோம். கடந்த 2 நாட்களின் முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களுடன் கலந்துரையாடினோம். இதன்போது, விடுவிக்கப்படாமலுள்ள காணிகளை பற்றி அடுத்து ஒரு மாதத்தில் தீர்மானமெடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த அரசாங்கம் நான்கரை வருடங்களாக பதவியில் இருக்கிறது. இதில் 4 வருடங்களாக புதிய அரசியலமைப்பை உருவாக்க முயற்சிப்பதாக கூறினார்கள். அரசியலமைப்பை உருவாக்குவதாக கூறி வெளிநாட்டுக்கு சென்று கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டுள்ளார்கள். அரசியலமைப்பை உருவாக்குவதாக வடக்கு மக்களை ஏமாற்றியுள்ளனர்.

ஜனாதிபதி பதவியை ஏற்பதற்கு முன்னரும் பின்னரும் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்தை ஒழிக்க வேண்டுமென நான் கூறி வருகிறேன். எனினும், இதனை செய்ய வேண்டியது இந்த அரசியலமைப்பை உருவாக்குபவர்கள்தான். நான்கரை வருடமாக பாராளுமன்றத்தில் உள்ள பெரிய மனிதர்கள் என்ன செய்தார்கள். அரசியலமைப்பை உருவாக்கியதாக கூறியவர்கள் ஏன் நிறைவேற்றதிகாரத்தை ஒழிக்கவில்லை. நான் இந்த பாவச்செயலில் பங்கேற்கவில்லை.

19வது அரசியலமைப்பு திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும். இந்த திருத்தம் நாட்டில் மூன்று தலைவர்களை உருவாக்கியுள்ளது. ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரங்களில் ஒரு பகுதியை இல்லாமல் செய்து, பிரதமரிற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது. சபாநாயகரிற்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. சுயாதீனகுழுக்கள் உருவாக்கப்பட்டு, அதை பிரதமரும், சபாநாயகருமே நிர்வகிக்கிறார்கள்.

இப்பொழுது பிரச்சனை, 19வது திருத்தத்தை இல்லாமல் செய்யும் விருப்பமுள்ள பிரதமர் யார் என்பதே.

இப்பொழுது தேர்தலொன்று வருகிறது. 2020இல் புதிய அரசு அமைந்து விடும். இப்பொழுதுதான் ஐ.தே.க ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைப்பதை பற்றி இரகசியமாக பேசுகிறார்கள் என்றார்.

Share this post:

Recent Posts