தமிழ் සිංහල English
Breaking News

தொழிலதிபரை அச்சுறுத்திய விவகாரத்தில் மீராமிதுன் கைதாவாரா?

தொழில் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில், ‘பிக்பாஸ்’ நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் பொலிசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகர் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா மிதுன். இவருக்கு பேஸ்புக் மூலம் எழும்பூரை சேர்ந்த தொழில் அதிபர் ஜோமைக்கேலுடன் 2017ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது.

நண்பர்களாக பழகி வந்த இவர்களிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண பிரச்சினையால் மோதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் மாறி, மாறி பொலிசில் புகார் அளித்தனர். இந்த பிரச்சினைகளுக்கு இடையே ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்க மீரா மிதுன் சென்றார். ஜோமைக்கேல் அளித்த புகாரின் பேரில் எழும்பூர் பொலிசார் ‘பிக்பாஸ்’ வீட்டுக்கு நேரில் சென்று மீரா மிதுனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் ‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்தநிலையில் ஜோமைக்கேலுக்கு மீரா மிதுன் கொலைமிரட்டல் விடுத்து பேசியது போன்று செல்போன் உரையாடல் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதுதொடர்பாக ஜோமைக்கேல் அளித்த புகாரின் பேரில் எழும்பூர் பொலிசார் மீரா மிதுன் மீது ஆபாசமாக திட்டுதல், கொலைமிரட்டல் விடுத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சம்மன் அனுப்பி அவரிடம் பொலிசார் விசாரணை நடத்த உள்ளனர். விசாரணை முடிவில் மீரா மிதுன் கைது செய்யப்படுவாரா என்பது தெரிய வரும்.

நடிகை மீரா மிதுன் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவர் 2016ம் ஆண்டு ‘மிஸ் தமிழ்நாடு’ அழகி பட்டத்தை வயதை குறைத்து பெற்றதாக எழுந்த புகாரில், அந்த பட்டம் பறிக்கப்பட்டது. அவர் அழகிப்போட்டி நடத்துவதாக கூறி மொடல் பெண்களிடம் பணம் பறித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

Share this post:

Recent Posts