தமிழ் සිංහල English
Breaking News

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு – அமெரிக்க, ஐரோப்பிய இராஜதந்திரிகள் புறக்கணிப்பு

சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் நடக்கும் கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கை, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் புறக்கணித்துள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு- 2019 பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்றுக் காலை ஆரம்பமானது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா வரவேற்புரை நிகழ்த்த, சிறிலங்கா பாதுகாப்பு செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட சிறப்புரை நிகழ்த்தினார்.

இதையடுத்து, பல்வேறு நாடுகளில் இருந்து வந்த நிபுணர்களும், உள்நாட்டு வளவாளர்களும் உரையாற்றினர்.

இந்த பாதுகாப்புக் கருத்தரங்கில் 42 நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 800 பேர் பங்கேற்றுள்ளதாக சிறிலங்கா இராணுவம் கூறியுள்ளது.

எனினும், நேற்றைய தொடக்க நிகழ்வில் அமெரிக்கா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள், பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொள்ளவில்லை.

புதிய இராணுவத் தளபதியாக – போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன.

இந்த நிலையிலேயே புதிய இராணுவத் தளபதியின் தலைமையில் நடக்கும் இந்த பாதுகாப்புக் கருத்தரங்கில் மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளும், பாதுகாப்பு ஆலோசகர்களும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post:

Recent Posts