தமிழ் සිංහල English
Breaking News

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்தப் பக்கம்?

வை.எல். எஸ். ஹமீட்
அடுத்த ஜனாதிபதியின் அதிகாரங்கள் என்ன?

பாகம்-1 இல் குறிப்பிட்டதுபோல் அடுத்த வரப்போகும் ஜனாதிபதியின் அதிகாரங்களைத் தெரிந்துகொண்டால் மாத்திரமே அதன் முக்கியத்துவம், அதனடிப்படையில் நமது தெரிவு போன்றவற்றைச் சரியாக தீர்மானிக்கலாம்.

நிறைவேற்றதிகாரம்
—————————
ஒரு அரசு என்பது மூன்று துறைகளை உள்ளடக்கியது. அவை: 1) சட்டவாக்கத்துறை 2) நிறைவேற்றுத்துறை 3) நீதித்துறை

இதில் நிறைவேற்று அதிகாரம் 1978ம் ஆண்டு யாப்பின் சரத்து 4(b) யின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது. இலங்கையின் பாதுகாப்புத்துறையையும் உள்ளடக்குவதாக குறிப்பிட்டிருந்தது. 19வது திருத்தத்தினூடாக இந்த சரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

1978ம் ஆண்டின் யாப்பின்கீழ் ஜனாதிபதியானவர் நாட்டின் தலைவராக, நிறைவேற்றுத்துறையின் தலைவராக, அரசாங்கத்தின் தலைவராக, முப்படைகளின் பிரதம தளபதியாக இருப்பார். இதிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ( சரத்து 30)

பிரதமரை நியமித்தல்
—————————
ஜனாதிபதி தனது அபிப்பிராயத்தில் பாராளுமன்றில் யாருக்கு பெரும்பான்மை இருப்பதாக கருதுகிறாரோ அந்த பாராளுமன்ற உறுப்பினரை பிரதமராக நியமிப்பார். இதிலும் எதுவித மாற்றமுமில்லை. [பழைய சரத்து 43(3), தற்போதைய சரத்து 42(4).]

அமைச்சர்களை நியமித்தல்
————————————-
தேவையென தான் கருதுமிடத்து பிரதமரைக் கலந்தாலோசித்து அமைச்சர்களை நியமிக்கலாம் [பழைய சரத்து 44(1)]
பிரதமரின் ஆலோசனையின் பேரில் அமைச்சர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். [ புதிய சரத்து 43(2)]

இங்கு கவனிக்கவேண்டியது 19 இற்கு முன் ஜனாதிபதி சுயமாக அமைச்சர்களை நியமிக்கலாம். பிரதமரின் ஆலோசனை தேவையில்லை. “தேவையெனக்கருதும்போது கலந்தாலோசித்து” என்ற பழைய சரத்தின் வசனத்தில் “ தேவையெனக்கருதும்போது” என்பதன் பொருள் ஜனாதிபதி ஒரு கட்சியிலிருந்தும் பிரதமர் ஒரு கட்சியிலிருந்தும் வரும்போதுள்ள சூழ்நிலையைக் குறிக்கிறது; என்பது சட்ட அறிஞர்களின் அபிப்பிராயமாகும்.

அதேநேரம் அவ்வாறு கலந்தாலோசித்தாலும் பிரதமர் சொல்பவர்களைத்தான் நியமிக்கவேண்டும்; என்ற கட்டாயம் இல்லை; ஏனெனில் இங்கு பாவித்திருக்கும் சொல் consultation என்பதாகும்.
எது எவ்வாறு இருந்தபோதிலும் தற்போது அந்த சரத்து இல்லை.

புதிய சரத்தில் ஆலோசனையின் பேரில் ( advice ) என்ற பதம் இடம்பெற்றிருப்பதால், அதில் ஜனாதிபதிக்கு வேறு தெரிவில்லை; என்பதை அது குறிக்கிறது. அவ்வாறு பிரதமர் ஆலோசனை வழங்காதபோது ஜனாதிபதிக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரமே வராது. இது அடுத்து வரப்போகும் ஜனாதிபதிக்கும் பொருந்தும்.

அண்மையில் கபீர் ஹாஸிம், ஹலீம் ஆகியோர் பிரதமரின் ஆலோசனையின்றியே அமைச்சர்களாக நியமிக்கப்பட்டாதாக அக்கட்சியின் செயலாளரே தெரிவித்திருந்தார். அவ்வாறாயின் அவர்கள் உண்மையில் அமைச்சர்கள் அல்ல. இது ஒரு அப்பட்டமான அரசியலமைப்பு அத்துமீறலாகும். இதேபோன்ற அத்துமீறல்கள் வரப்போகும் ஜனாதிபதியைப் பொறுத்து அடுத்த அரசாங்கத்திலும் இடம்பெறலாம். இது தொடர்பாக பின்னர் பார்ப்போம்.

அமைச்சர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்
—————————————————————
19இற்கு முன் தேவையெனக்கருதும்போது பிரதமருடன் கலந்தாலோசித்து ஜனாதிபதி அமைச்சர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான அமைச்சு மற்றும் விடயதானங்களைத் தீர்மானிப்பார். [ பழைய சரத்து 44(1)]

19இலும் இதே நிலைதான். ஆனாலும் அதி உச்ச எண்ணிக்கை: அமைச்சர்கள் 30: ராஜாங்க, பிரதியமைச்சர்களின் மொத்த எண்ணிக்கையும் 30. அதேநேரம் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும்போது அமைச்சர்களின் எண்ணிக்கையை பாராளுமன்றமே தீர்மானிக்கும். புதிய சரத்துக்கள் 43(3), 46(1), 46(4).

அமைச்சுக்களை மாற்றுதல்
————————————
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட விடயதானங்களை ஜனாதிபதி அவ்வப்போது மாற்றலாம். ( இங்கு பிரதமரின் கருத்து அல்லது ஆலோசனை அவசியமில்லை) பழைய சரத்து 44(3). 19 இலும் இதே சரத்துத்தான்; மாற்றமில்லை. புதிய சரத்து 43(3)

இதே பழைய, புதிய சரத்துக்களின்படி அமைச்சரவைக் கட்டமைப்பையும் ஜனாதிபதி அவ்வப்போது மாற்றலாம். அதாவது அமைச்சர்களின் எண்ணிக்கையைக் கூட்டலாம், குறைக்கலாம் மேலே கூறிய விதிகளுக்கமைவாக.

அவ்வாறு கூட்டப்படும்போது புதிதாக நியமிக்கப்படும் அமைச்சர்களை பிரதமரே முன்மொழிய வேண்டும். அதேபோன்று நீக்கும்போதும் பிரதமரின் ஆலோசனை பெறப்படவேண்டும். அதாவது பிரதமர் சொல்பவர்களைத்தான் நீக்கமுடியும்.

இங்கு எழக்கூடிய சாத்தியமான ஒரு குழப்பநிலை:

30 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது ஜனாதிபதி அதனை 25 ஆகக்குறைக்க விரும்புகிறார். மேற்படி சரத்தின் பிரகாரம் அவருக்கு குறைப்பதற்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் பிரதமர் நீக்குவதற்கு எந்த அமைச்சரின் பெயரையும் முன்மொழியவில்லை. இப்பொழுது என்ன செய்வது?

ஜனாதிபதியால் ஒன்றும் செய்யமுடியாது. இங்கு ஜனாதிபதியின் அமைச்சர்களின் எண்ணிக்கையை கூட்டும் குறைக்கும் அதிகாரம் பிரதமரின் ஆலோசனை வழங்கும் அதிகாரத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றது.

பாராளுமன்றத்தைக் கலைத்தல்
——————————————
19 இற்கு முன் பாராளுமன்றத், தீர்மானத்தின்மூலம் ( சாதாரண பெரும்பான்மையால்) வேண்டுகோள் விடுத்தாலேயொழிய முதல் ஒரு வருடம் முடியும் வரை ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியாது. அது தற்போது 4 1/2 வருடமாக மாற்றப்பட்டிருப்பதோடு பாராளுமன்றத் தீர்மானம் 2/3 பங்கினால் நிறைவேற்றி கலைக்குமாறு கோரப்பட்டாலேயொழிய ஜனாதிபதி கலைக்கமுடியாது. பழைய, புதிய சரத்துக்கள் 70(1).

அதேபோன்று பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரத்திலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

குறித்த சில பதவிகளுக்கு அரசியலமைப்பு பேரவையின் அனுமதியின்றி ஜனாதிபதி யாரையும் நியமனம் செய்யமுடியாது; என்பதுவும் 19 வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு, ஜனாதிபதிக்கு இன்னும்பல உதிரி அதிகாரங்களும் இருக்கின்றன.

இவற்றில் எதிர்காலத்தில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக்கூடிய பிரதான அம்சங்கள்:
(1) பிரதமர் நியமனம், நீக்கம்.
(2) அமைச்சர்களின் எண்ணிக்கை.
(3) அமைச்சர்கள் நியமனம், நீக்கம்.
(4) அமைச்சர்களுக்கு அமைச்சுக்கள், மற்றும் விடயதானங்கள் வழங்குதல், மாற்றியமைத்தல்
(5) பாராளுமன்றத்தை நியாயமற்ற முறையில் ஒத்திவைத்தல் போன்றவையாகும்.

தற்போதைய ஜனாதிபதிக்கும் வரப்போகும் ஜனாதிபதிக்கும் உள்ள வித்தியாசம்
——————————————————-
ஒரேயொரு வித்தியாசம் மட்டும்தான். அதாவது தற்போது பதவியில் இருக்கும் ஜனாதிபதி பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களை, அதனோடிணைந்த விடயதானங்களை வைத்துக்கொள்ளலாம்; என இருக்கிறது. இது ஒரு இடைக்கால ஏற்பாட்டுக்கான சரத்தாகும்.

இதன்பொருள் அடுத்து வரப்போகும் ஜனாதிபதி இவைகளையும் வைத்திருக்க முடியாது. அதாவது ஜனாதிபதி எந்த அமைச்சையும் வைத்திருக்க முடியாது. பிரதமரே அமைச்சர்களை முன்மொழிவதால் அமைச்சர்களெல்லாம் பிரதமரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பார்கள். எனவே, ஜனாதிபதி வெறும் பொம்மையாகவே இருப்பார்; என்ற கருத்தை சிலர் முன்வைக்கின்றார்கள்.

இவ்வாறு நடந்தால் அவர்கள் கூறுவதில் ஓரளவு நியாயம் இருக்கும். ஆனால் தற்போதைய ஜனாதிபதி இம்மூன்று அமைச்சுக்களை வைத்திருக்கலாம்; என்பதன்மூலம் அடுத்த ஜனாதிபதிக்கு அவ்வாறு முடியாது; என்பது தெளிவானபோதிலும் அவ்வாறு ஜனாதிபதி அமைச்சுக்களை வைத்திருக்கக்கூடாது; என்ற வெளிப்படையான சரத்து எதுவுமில்லை. இந்நிலையில் வெளிப்படையான தடை எதுவுமில்லை என்று அடுத்த ஜனாதிபதி சில அமைச்சுகளைத் தன்னகத்தே வைத்துக்கொண்டால் என்ன செய்வது?

எதிர்வாதம்
—————
இல்லை. அவ்வாறு செய்யமுடியாது. ஏனெனில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைத்தான் அமைச்சராக நியமிக்க முடியும். புதிய சரத்து 43(2). பழைய சரத்து 44(1). ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. எனவே, அவர் அவ்வாறு செய்யமுடியாது.

19 இற்கு முன் ஜனாதிபதி தான் விரும்பிய எத்தனை அமைச்சுக்களையும் தன்வசம் வைத்திருக்க அரசியலமைப்பு அனுமதித்தது. [பழைய சரத்து 44(2) ]எனவே பாராளுமன்ற உறுப்பினரா ஜனாதிபதி என்ற கேள்வி எழவில்லை. ஆனால் 19 இல் அச்சரத்து நீக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் இந்த ஜனாதிபதிக்கு இடைக்கால ஏற்பாடாக இம்மூன்று அமைச்சுகளையும் வைத்திருக்க அனுமதியளிக்கப்பட்டது; என்று வாதிக்கலாம்.

முழுக்க முழுக்க நியாயமான, வலுவான வாதம். கலைக்கமுடியாத பாராளுமன்றத்தைக் கலைக்கின்ற, பிரதமரின் ஆலோசனை இல்லாமல் நியமிக்கமுடியாத அமைச்சர்களை நியமிக்கின்ற, நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட கணமே பதவியிழக்கின்ற அரசாங்கத்தைப் பதவியில் வைத்திருக்கின்ற ஜனாதிபதியைக் கண்டவர் நாம். வரப்போகும் ஜனாதிபதி எப்படிப்பட்டவராக இருப்பாரோ?

மறுபுறம் மேலே குறிப்பிட்டதுபோல் சரத்து 4(b) இன்படி பாதுகாப்பு ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் ஓர் அங்கமாகும். அந்தப் பாதுகாப்பு அமைச்சை வேறொருவருக்கு வழங்கமுடியுமா? அது 4(b) ஐ மீறுவதாகாதா? இது தொடர்பாக 2001-2004 கால ஐ தே க ஆட்சியின்போது பாதுகாப்பு அமைச்சை வேறொருவருக்கு கையளிக்க முடியாது; என்ற தீர்ப்பும் இருக்கிறது. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி தன்வசம் வைத்துக்கொண்டால் என்ன செய்வது.

சட்டம், ஒழுங்கு அமைச்சு பாதுகாப்பு அமைச்சிலிருந்து வேறுபடுத்தப்படவேண்டுமென்ற தீர்ப்பும் இருக்கத்தக்கதாகத்தான் தற்போது ஜனாதிபதி அதனை பாதுகாப்பு அமைச்சுடன் வைத்திருக்கிறார். பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு ஒருவரிடமும் அரசாங்கம் இன்னுமொருவரிடமும் இருக்கும்போது ஏற்படும் பிரச்சினைகளை அனுபவரீதியாக கண்டிருக்கின்றோம். இந்நிலையில் என்ன செய்வது?

நீதிமன்றத்தை நாடல்
——————————
அரசாங்கத்தைப் பொறுத்தவரை இங்கும் ஒரு பிரச்சினை இருக்கின்றது. அதாவது ஜனாதிபதி சட்டத்தை மீறும்போது அவருக்கெதிராக தொடுக்கப்படும் வழக்கில் சட்டமா அதிபரே பிரதிவாதியாக காட்டப்படுகிறார். அதேநேரம் ஜனாதிபதிக்கெதிராக அரசு சார்பில் வழக்குத்தொடுப்பதானால் அவ்வழக்கு சட்டமா அதிபராலேயே தொடுக்கப்பட வேண்டும். சட்டமா அதிபர் எவ்வாறு வாதியாகவும் பிரதிவாதியாகவும் ஒரு வழக்கில் இருக்கமுடியும்?

மறுபுறம் ஜனாதிபதிதான் அரசின் தலைவர். அரசின் தலைவருக்கு எதிராக அரசே வழக்குத் தொடுக்கமுடியுமா?

அதேநேரம் ஜனாதிபதிக்கெதிரான வழக்கு சரத்து 126 இன் கீழ்தான் தொடுக்கமுடியும். அதாவது அடிப்படை உரிமை மீறல் வழக்கு. அரசு ஜனாதிபதிக்கெதிராக வழக்குத் தொடுப்பதற்கு அரசின் அடிப்படை உரிமை மீறப்பட்டதா? அரசுக்கு அடிப்படை உரிமை இருக்கின்றதா?

எனவே, ஜனாதிபதி அரசியலமைப்பை மீறும்போது அரசாங்கமே வழக்குத் தொடுப்பதில் பிரச்சினைகள் இருக்கின்றன. இந்நிலையில் யாராவது தனிநபர்கள் அல்லது அமைப்புகள் அல்லது கட்சிகள்தான் வழக்குத் தொடுக்கவேண்டும்.

இவ்வாறு அடுத்த ஆட்சியிலும் பல குழப்பங்கள் வருவதற்கு வாய்ப்பிருக்கின்றது. இது வரப்போகும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் என்பவற்றைப் பொறுத்து மாறுபடலாம். இது சிறுபான்மைகள்மீது எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும்?

இவைகளையெல்லாம் தெளிவாக ஆராய்ந்த பின்புதான் நாம் யாருக்கு வாக்களிப்பதென்று தீர்மானிக்க வேண்டுமே தவிர, வெறுமனே கட்சிகள் சொல்கின்றன; என்பதற்காக வாக்களிக்க முடியாது.

இவைகள் தொடர்பாக அடுத்தடுத்த பாகங்களில் ஆராய்வோம், இன்ஷா அல்லாஹ் .

( தொடரும்)

Share this post:

Recent Posts