தமிழ் සිංහල English
Breaking News

தோல்வியுற்றவர்களிடம் தேசத்தை ஒப்படைக்கப் போகிறீர்களா.!

முன்னைய ஆட்சியின் தலைவர்கள் புதிய பெயரிலும் புதிய வண்ணத்திலும் வந்தாலும், தமது  பழைய வழிகளை மாற்ற மாட்டார்கள் என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன நேற்று புதிய கூட்டணி மற்றும் அதிபர் வேட்பாளரை அறிவித்தது குறித்து- குருநாகலவில் நடந்த கூட்டம் ஒன்றில் கருத்து வெளியிட்ட போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க  இவ்வாறு கூறியுள்ளார்.

”சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒரு புதிய பெயருடன் வருவதாக நாங்கள் அறிந்தோம். அதன் மாநாட்டில் அதிபர் வேட்பாளரை அறிவித்துள்ளார்கள். அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

அதன் பெயரை மாற்றி புதிய வண்ணத்துடன் வந்தாலும் அது பழைய வழிகளை அவர்கள் மாற்றமாட்டார்கள்.

அவர்கள் நாட்டை ஆட்சி செய்த பத்து ஆண்டுகளில் அவர்கள் செய்யத் தவறியதைச் செய்ய, அவர்கள் திறமை வாய்ந்தவர்களா என்பதை பார்க்க வேண்டும்.

அவர்களால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை இலாபம் ஈட்டும் முயற்சியாக மாற்ற முடியவில்லை, இயற்கை பேரழிவுகள் காரணமாக பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முடியவில்லை.

அவர்கள் தமது காலத்தில் ஒரு வெள்ளை வான் கலாசாரத்தை அறிமுகப்படுத்தினர், அது தவறு என்று ஏற்றுக்கொண்டு ஆட்சிக்கு வந்தால், அதை நிறுத்துவார்களா?, அப்படி நிறுத்தமாட்டார்கள்.

நாங்கள் அதிகாரத்தை எடுத்துக் கொண்ட போது, திறைசேரி வெறுமையாக இருந்தது. எங்கள் அரசாங்கத்தின் முதல் ஆண்டில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

கடினமான பணியாக இருந்தாலும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தோம். நாங்கள் சவால்களைக் கண்டு ஓடவில்லை. ஏற்றுமதியை அதிகரிக்க முடிந்தது, கடந்த ஆட்சியின் போது இழந்த ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை மீட்டெடுத்தோம்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை இலாபம் ஈட்டும் முயற்சியாக மாற்ற முடிந்தது. இவை அனைத்தையும் நாங்கள் ஐந்து ஆண்டுகளில் செய்தோம்.

முன்னர் அவர்கள் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்திருந்தாலும் நாம் அடைந்ததை அவர்களால் அடைய முடியவில்லை.

எனவே, தோல்வியுற்றவர்களிடம் தேசத்தை ஒப்படைக்கப் போகிறீர்களா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும், ”என்றும் அவர் மேலும் கூறினார்.

Share this post:

Recent Posts