தமிழ் සිංහල English
Breaking News

மலையக சமூகத்தினரிடையே பாரிய மாற்றங்களையும் பிளவுகளை ஏற்படுத்தும் அரசியல் தலைமைகள்.!

பெருந்தோட்டங்களில் தொழில் தொடர்பாகக் காணப்படும் பிரதான பிரச்சினைகள் அத்தொழில் பற்றிய சமூக அங்கீகாரத்தைப் பெறுவதாகும். பெருந்தோட்டங்களின்; வேலை நிலைமைகளும் மோசமான சுகாதார மற்றும் கல்வி வசதிகள் மற்றும் மிக இறுக்கமான மேலிருந்து கீழான முகாமைத்துவ முறைமையும் இத்தகைய மனப்போக்கிற்குக் காரணமாகும். பெரும்பான்மைச் சமூகத்தைப் பொறுத்துவரை பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தை இலங்கையின் முக்கியமானதோர் சமூகப் பிரிவாகவோ பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்யும் முக்கியமானதோர் பிரிவாகவோ ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கும் மனப்பக்குவம் இன்னும் ஏற்படவில்லை. மலையக சமூகத்தினரிடையே பாரிய மாற்றங்களையும் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் அரசியல் தலைமைகள் செயற்பட்டு வருகின்றனர்.

அவர்கள் இந்நாட்குரியவர்கள் என்பதில் ஏற்றுக்கொள்வதில் அரசியல்வாதிகள்கூட உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போக்கினையே காட்டுகின்றனர். சில வருடங்களுக்கு முன் அரசாங்கத்துடன் பெருந்தோட்ட சமூகத்தைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்கள்; நடத்திய கலந்துரையாடலின்போது அரசாங்கத்தின் அதிகாரமிக்க அமைச்சர் ஒருவர் மக்களை ஏளனமாக கூறியதையும் அதேபோல முன்னாள் பிரதி அமைச்சரொருவர் மலையக மக்கள் தொடர்பாக கூறிய கருத்துக்களையும் நினைவிற்கொள்ளுதல் பொருந்தும். இது பெரும்பான்மையின அரசியல்வாதிகளின் உள் மனக்கிடக்கையே புலப்படுத்துவதாக உள்ளது.
1980களில் மலையகக் கட்சிகள் அரசாங்கத்தை தெரிவு செய்யும் கட்சிகளாக இருந்ததாக உருத்தலுடன் நோக்கப்பட்டது. தொண்டமான் அவர்களின் தலைமைத்துவத்துடனான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பின்;னர் முஸ்லிம் காங்கிரஸ் இதில் முக்கியம் பெற்றன. ஜயவர்த்தன அறிமுகப்படுத்திய அரசியல் அமைப்பின் காரணமாக சிறுபான்மைக் கட்சிகளின் தேவை பின்வந்த காலப்பகுதியில் அரசமைக்கும் கட்சிகளுக்குத் தேவையானதாக இருந்தது.
இதனைப் பயன்படுத்திக் கொண்ட பிரதான மலையக கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மைகளை, குடியுரிமை, சம்பளம்,கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களை பெற்றுக்கொடுத்துள்ளதை எவரும் குறைத்து மதிப்பிடமுடியாது. எனினும் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி மலையக மக்களின் நிலைமைகளை மேம்படுத்த இதைவிடக்கூடுதலான பங்களிப்பினைச் செய்திருக்கலாம் என விமர்சிக்கப்படுகின்றது.
மலையகத் தலைமைகளின் பலவீனம் காரணமாக இளைஞர் சமூகம் நம்பிக்கை இழந்த நிலையில் காணப்படுகிறது. அண்மையில் கடந்த கால பொதுத்தேர்தலில் மலையகத்தைச் சாராத ஒரு வேட்பாளர் நுவரெலிய மாவட்டத்தில் வெற்றியீட்டி பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமையையும் இந்நம்பிக்கையீனத்தின் ஒரு வெளிப்பாடாகவே நோக்கப்படலாம்.
அதேவேளை அரசுடன் இணைந்து செயற்படும் மலையக் கட்சிகள் அம்மக்களின் முன்னோக்கிய சமூக அசைவுக்கு பங்களிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆயினும் கோரிக்கைகளை வலுவாக முன்வைக்கக்கூடிய சூழல் தற்போதில்லை. எனவே சிவில் சமூக அமைப்புக்கள் மலையக மக்களின் மேம்பாடு குறித்து கவனம் செலுத்த வேண்டிய கட்டாய தேவை உள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகள் கல்வி, சுகாதாரம், தொழிற்பயிற்சி, தொடர்பான தகவல்களைத் திரட்;டி திட்டங்களை வகுக்கவேண்டிய தேவையுள்ளது.
குறிப்பாக மலையக பெருந்தோட்டத் தொழிலாளர் தொடர்பான புள்ளிவிபரங்கள் ஓரளவுக்கு கிடைப்பினும் இற்றைப்படுத்தப்பட்ட புள்ளிவிபரத் தரவுகள் இல்லை.
மலையகப் பிரதேசங்களிலிருந்து உயர்கல்வி கற்றவர்கள் மற்றும் அரச சேவைகள், தனியார் துறை என்பவற்றில் பதவிநிலை தொழில்வாய்ப்புகளில் உள்ளவர்கள் குறித்த விபரங்கள் மற்றும் பெருந்தோட்;டப் பகுதிகளுக்கு வெளியில் தொழில் வாய்ப்பில் ஈடுபட்டுள்ளோர் பற்றிய விபரங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தரவுகளின் பற்றாக்குறை மலையகப் பெருந்தோட்டத்துறைச் சமூகம் பற்றிய ஆய்வுகளைச் செய்வதில் பெருந்தடையாக உள்ளது.

மறுபுறம் மலையக சமூகமானது சமூக அங்கீகாரம் தொடர்பில் ஓரங்கப்பட்ட சமூகமாகவும் அரசியல் மற்றும் இனரீதியான மோதல்களின் போது அடிவாங்கும் சமூகமாகவும் உள்ளது. பெரும்பான்மையாக தமிழ்பேசும் மக்களைக் கொண்டுள்ள பெருந்தோட்டத்துறையைக் கையாளும் அமைச்சு அப்பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் கைகளிலன்றி பெரும்பான்மையின அரசியல்வாதிகளின் கைகளில் உள்ளமை மலையக மக்களின் சமூக, பொருளாதார, அரசியல்,செல்நெறிகள் எத்திசையில் நகரும் என்பதைப் புரிந்து கொள்ளப்;போதுமானதாகும். இவ்வாறானதொரு பின்புலத்தில் மலையக அரசியல்வாதிகள், கல்விச் சமூகத்தினர்,சிவில் அமைப்புகள், இளைஞர் சமுதாயம் என்பன எவ்வாறு இயங்கப் போகின்றன, சமூக முன்னேற்றத்திற்கு எவ்வாறு பங்களிக்கப் போகின்றன என்பதே எமக்கு முன்னுள்ள வினாவாகும்.

கடந்த காலங்களைப் போலவே இனிமேலும் பெருந்தோட்ட தொழிலாளர்களினால் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் முரண்பாட்டு அரசியலை மேற்கொள்ள முடியாது. இன்றைய சூழலில் அது எவ்விதத்திலும்  சாத்தியமில்லை. என்பதுடன் அதனால் மலையக சமூகத்தினருக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை. அதேவேளை மலையக அரசியல்;வாதிகள் தமது சுயநல அரசியலைக் கைவிட்டு நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் மேம்பாட்டுக்காக கூடுதலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும். சாத்தியமான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கிடைக்கும் வாய்ப்புக்களை மலையக மக்களுக்கு நம்மை தரும் வகையில் பயன்படுத்த வேண்டும்.
சி. அருள்நேசன்

Share this post:

Recent Posts