தமிழ் සිංහල English
Breaking News

மைத்திரியும் தமிழ் மக்களை ஏமாற்றியதைத் தவிர எதையும் செய்யவில்லை..!

காலத்திற்கு காலம் ஈழத் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டமை போல மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்
களை ஏமாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறீலங்காவின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சியாளரைத் தீர்மானிப்பதற்கான தேர்தல் இவ்வருடம் (2019) இறுதிப் பகுதியில் நடைபெறவுள்ளது.

தென்னிலங்கை தற்போது அதற்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட்டு வருகின்றது.

111

ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்கள் தீர்க்கமான முடிவு எடுக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களை காலத்திற்குக் காலம் மேய்ச்சல் மாடுகள் போல நடத்தும் எஜனமானர்களான தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு ஆகும். கடந்த பல தேர்தல்களில் இந்தச் செயற்பாடே இடம்பெற்றது. இதனாலேயே தமிழ் மக்கள் இன்றுவரை பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ சிங்களவர் ஒருவருக்கே வாக்களிக்கவேண்டிய கட்டாய நிலை காணப்படுகின்றது. ஏனெனில், சிறீலங்காவின் அரசமைப்பு அதற்கேற்றாற்போலவே எழுதப்பட்டிருக்கின்றது.

தமிழர் ஒருவர் தேர்தலில் நிற்க முடியாது என்பது கருத்தல்ல. தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்தல் களத்தில் நின்றாலும் அவரால் வெற்றிபெற முடியாது. காரணம், இலங்கைத் தீவில் சிங்கள இனமே பெரும்பான்மையாக இருக்கின்றமையால் இதை சாத்தியப்படுத்துவது கடினம்.

ஜனாதிபதித் தேர்தல்களின்போது தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களை மூளைச் சலவை செய்வது வழக்கம். அதேபோலத்தான் இந்தத் தடவை, ரணில் விக்கிரமசிங்க யாரை ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கின்றாரோ அவருக்கு வாக்களிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களை மூளைச் சலவை செய்யும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஏனெனில், தற்போதைய ஆட்சியைத் தக்கவைப்பதற்கு அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முண்டுகொடுத்துக் கொண்டிருக்கின்றது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், யுத்தத்தின்போது படைகளுக்கு தலைமைதாங்கிய படைத்தளபதி சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளராகக் களமிறக்கியது.

எதிர்த்தரப்பில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில், மகிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாக ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டார். தமிழ் மக்கள் பொன்சேகாவுக்கு வாக்களிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

போரை தமிழ் மக்கள் மீது ஏவி விட்டவர் என்ற அடிப்படையில் மகிந்தவை எதிர்த்த மக்கள் போரை நடத்திய தளபதிக்கு வாக்களித்த போதிலும் அவர் தோல்வியடைந்தார். மகிந்த வெற்றிபெற்றார்.

மகிந்த ராஜபக்கச இரு தடவைகள் ஜனாதிபதியாக ஆட்சிபீடம் ஏறிய போதிலும் ஒரு தடவைகூட தமிழ் மக்கள் மகிந்தவுக்கு வாக்களிக்கவில்லை. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவும் சுதந்திரக் கட்சி சார்பில் மகிந்த ராஜபக்சவும் போட்டியிட்டனர். அப்போதுதான் மகிந்த முதன்முதல் ஜனாதிபதி வேட்பாளர் களத்தில் நின்றார்.

துரோகி கருணாவைப் பிரித்தெடுத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த முயன்றார் என ரணில் மீது கோபத்தில் இருந்த தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிக்காத அதேவேளை, மகிந்தவுக்கும் வாக்களிக்கவில்லை. எனினும் தமிழரின் வாக்குகள் இன்றி, பேரினவாதிகளின் வாக்குப் பலத்தால் ஆட்சிக்கு வந்த மகிந்த, தமிழ் மக்களையும் போராட்டத்தையும் அழித்தொழித்தார்.

111

தொடர்ந்து வந்த பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சை நம்பி தமிழ் மக்கள் வாக்களித்தனர். மைத்திரியும் தமிழ் மக்களை ஏமாற்றியதைத் தவிர எதையும் செய்யவில்லை.

போர்க்குற்ற விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டன. தமிழருக்கான தீர்வு விடயம் எந்தவிதத்திலும் ஆராயப்படவில்லை. ஒற்றையாட்சியையும் பெளத்தத்தையும் முன்னிலைப்படுத்திய புதிய அரசமைப்பு கொண்டுவர முயற்சிக்கப்பட்டது. அதைக்கூட மைத்திரியால் கொண்டுவர முடியவில்லை.அவரது ஆட்சி முடிவுக்கு வருகின்றது.

தற்போது, வேட்பாளர் தெரிவுக்காக தென்னிலங்கை அரசியல் சூடு பிடித்திருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக யாரைக் களமிறக்குவது என்ற கருத்துக்கள் அடிபடுகின்ற அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிறேமதாசா மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க ஒருவராகக் காணப்படுகின்றார்.

எனினும், கட்சிக்குள் திறமை, அனுபவம் அன்றி சாதிய ரீதியில் சஜித் ஒதுக்கப்படுகின்றார் எனக் கூறப்படுகின்றது. சிங்கள மக்களின் எதிர்பார்பிற்கு மாறாக தற்போதைய சபாநாயகர் கரு ஜெயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு ரணில் தரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஆனால், அடுத்த ஜனாதிபதி தானே என்ற தோரணையில் சஜித் பிறேமதாசா நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றார். சஜித் ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் இருப்பதாக நம்பப்படுகின்றது. அப்படி ஒரு நிலை வரும்போது சஜித் பிறேமதாசா பொது வேட்பாளராகக் களமிறங்கக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

எதிர்த்தரப்பில், மகிந்த அணி ஜனாதிபதித் தேர்தலுக்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி தானே என அண்மைக் காலமாகக் கூறி வருகின்றார்.

இரட்டைக் குடியுரிமை உடைய நபர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் தனது அமெரிக்கக் குடியுரிமையைக்கூட அவர் இரத்துச் செய்திருக்கின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அவர் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டார் எனவும் தெரியவருகின்றது.

எனினும், கோத்தபாயவைக் களமிறக்கும் விடயத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரும்பியோ விரும்பாமலோ கோத்தபாயவை தற்போது களமிறக்கி தோற்கடிக்கும் எண்ணமும் மகிந்தவிடம் இருக்கின்றது என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில், இந்த தடவை மகிந்த பரம்பரையில் ஒருவர், கோத்தபாய ஆட்சிக்கு வந்தால் அடுத்த தடவை அது சில வேளை கிடைக்காமல் போகலாம் என மகிந்த அஞ்சுவதாகக் கூறப்படுகின்றது. அடுத்த தடவை தனது மகன் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் எண்ணம் மகிந்தவுக்கு இருப்பதாலேயே அவர் இவ்வாறு கருதுகின்றார் எனவும் தெரியவருகின்றது.

மகிந்த ராஜபக்ச வாழ்நாள் ஜனாதிபதியாக இருக்க ஆசைப்பட்டவர். அதற்காக சட்டங்களையே தமக்குச் சாதமாக மாற்றியமைத்து மூன்றாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வியடைந்தவர். எனினும், தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் இராணுவ ஆட்சிக்கு முயன்ற அவரை மேற்கு நாடுகள் பலவந்தமாக வீட்டுக்கு அனுப்பியிருந்தன.

தனக்கு பின்னர் தனது மகன் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற கனவோடு அவர் செயற்பட்டார். எனினும் நாமலில் வயது மற்றும் வெளிவிவகாரக் கொள்கைகளில் அவருக்கு உள்ள அனுபவம் போதாமை போன்றவற்றின் அடிப்படையில் அவரை தற்போது விடுத்து அடுத்த தடவை ஜனாதிபதி வேட்பாளராக்கும் திட்டம் மகிந்த ராஜபக்சவிடம் இருக்கின்றது.

இதனால் தற்போது கோத்தபாயவை களமிறக்கி அவரைத் தோற்கடிக்க மகிந்த முற்படுகின்றார் என மகிந்தவுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.

எது எப்படியோ, தென்னிலங்கைச் சிங்களவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கப்போவதில்லை. இதனால் இந்தத் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் அலட்டிக்
கொள்ளத் தேவையில்லை என பலரும் கருத்து வெளியிடுகின்றனர்.

அது ஒருபுறம் இருக்க, தமிழர் தரப்பில் இருந்து பொது  வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி, தமிழ் மக்கள் தமது ஒட்டுமொத்த வாக்குகளையும் அவருக்கு வழங்கி சர்வதேச நாடுகளுக்கு தமிழர்களின் அபிலாசைகளை எடுத்துச் சொல்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

எந்தச் சிங்களக் கட்சிகளிலோ எந்தச் சிங்களத் தலைவர்களிலோ எங்களுக்கு நம்பிக்கை இல்லை, அவர்கள் அனைவரும் தமிழினத் துரோகங்களிலேயே ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் தமிழருக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தாருங்கள் என சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக தமிழ் மக்கள் இதனைப் பயன்படுத்த முடியும்.

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமான ஒரு பலப்பரீட்சையாக இதை வெளிக்காட்டலாம். போர்க்குற்ற விசாரணை, பெளத்த மயமாக்கலை இல்லாதொழித்தல், ஆக்கிரமிப்பு இடங்களில் இருந்து படை வெளியேற்றம், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல்போக வைக்கப்பட்டவர்களைக் கண்டறிதல், தமிழர்களுக்கான தீர்வை வழங்குதல் போன்ற பல விடயங்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கி, சர்வதேசத்திற்கான அறைகூவலாக இந்தத் தேர்தல் களத்தைப் பயன்படுத்தலாம்.

தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு பொதுநோக்கின் அடிப்படையில் இணைந்து, இணங்கிச் செயற்பட்டால் இதைச் சாத்தியப்படுத்த முடியும். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னர் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானமாக அமையும். வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீது அப்போது வாக்களித்த தமிழ் மக்கள் தமிழீழத்திற்கு ஆதரவாக வாக்களித்ததைப் போல இந்தத் தேர்தலை தமிழ்த் தலைமை பயன்படுத்தலாம். இதுவே தற்போதைய தேவையாகும்.

 காந்தரூபன்-

Share this post:

Recent Posts