தமிழ் සිංහල English
Breaking News

பேருந்தில் வெடித்த குண்டு யாழில் இருந்து கொண்டுவரப்பட்டதா?

தியத்தலாவ – கஹகொல்ல பகுதியில் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திற்கு குண்டு வெடிப்பே காரணம் என இராணுவத் தளபதி தனக்கு அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவ நோக்கிச் சென்ற பேருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பண்டாரவளைக்குச் சென்றுள்ளது. அதன்பின்னர் அதில் இருந்த பயணிகள் வேறு ஒரு பேருந்துக்கு மாற்றப்பட்ட பின்னர் குறித்த பேருந்து யாழ்ப்பாணத்திற்கு திரும்பியுள்ளது.

இவ்வாறு பயணிகள் மாற்றப்பட்ட பேருந்து கஹகொல்ல நோக்கி சென்ற போது இன்று அதிகாலை 5.30 மணியளவில் பேருந்தில் திடீரென வெடிப்பு சம்பவம் இடம்பெற்று தீப்பரவி விபத்துக்குள்ளானதாக எமது ஆதவன் செய்திப்பிரிவிற்கு தியத்தலாவ பொலிஸார் உறுதிப்படுத்தினர். எனினும், சம்பவம் தொடர்பான உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லையெனக் குறிப்பிட்டனர்.

குறித்த வெடிப்பு சம்பவத்தில் 12 இராணுவ வீரர்கள் உட்பட மொத்தமாக 19 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையிலும் குறித்த வெடிப்பு தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட காரணங்கள் எதுவும் வெளிப்படுத்தாத நிலையில் இந்த வெடிப்பு சம்பவத்திற்கும், பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கும் தொடர்பு இல்லை என இராணுவ ஊடகப்பேச்சாளர் இன்று காலை அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், பேருந்தில் குண்டு வெடித்த காரணத்தினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, குறித்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவரின் பையில் இருந்த கைகுண்டு வெடித்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேருந்தில் ஏற்பட்ட இந்த வெடிப்பு சம்பவத்தில் இராணுவத்தினரும் படுகாயமடைந்துள்ள நிலையில் விசாரணைகள் பல்வேறு மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com