தமிழ் සිංහල English
Breaking News

யார் திருடர்கள் என்பது மக்களுக்குத் தெரியும்..!

பிணைமுறி விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பெரிதாகி அடிதடியில் முடியும் அளவிற்குச் சென்றிருக்கின்றது. மக்களாட்சியைக் (ஜனநாயகத்தை) கேலிக்கூத்தாக்கியிருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலரும் தமது பாடசாலைக் காலத்தைத் தாண்டி வளரவேயில்லை என்பதைப் புதிய ஆண்டிலும் நிரூபித்திருக்கிறார்கள்.

வாக்களித்த மக்கள் தம்மை அவதானிக்கிறார்கள் என்கிற சிந்தனையே இல்லாமல், அடி வாங்கியவர் அதைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டதைக் காண்கையில் அவர்களை நினைத்து அழுவதா இல்லை அவர்களுக்கு வாக்களித்து அவர்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளப் பெருமக்களைப் பார்த்து அழுவதா என்பது புரியவேயில்லை.

மத்திய வங்கியின் பிணைமுறிகளை விற்பனை செய்தமையில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக ஜனாதிபதி நியமித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக விவாதிப்பதற்காகவே நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நேற்று முன்தினம் கூட்டப்பட்டது.

மகிந்த அணியினரும் சுதந்திரக் கட்சியினரும் ஜே.வி.பியினரும் தான் நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு வலியுறுத்தியவர்கள். ஐக்கிய தேசியக் கட்சியை இலக்கு வைப்பது அவர்களின் நோக்கம்.

உள்ளுராட்சித் தேர்தல் காலம் என்பதால் இந்த விவகாரத்தை மூலதனமாக்கிக் கொள்ளலாம் என்ற நப்பாசையில் ஏனைய கட்சிகள் இந்த விவகாரத்தைத் தூக்கிப் பிடித்தன.

ஆனால், விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை உடனடியாக நாடாளுமன்றத்துக்குக் கிடைக்காதமையால் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது ஐக்கிய தேசியக் கட்சி.

விசாரணையின் முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு முன்பாகவே ஐக்கிய தேசியக் கட்சி தனது பதிலைப் பதிவு செய்து ஆதாயத்தைத் தேடிக்கொண்டது.

தவறுகள் நடந்திருக்கலாம், அதனையும் நேர்மையாக ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்தி அதன் மீது விவாதமும் நடத்தியதே தமது நேர்மை தான் என்று ஐக்கிய தேசியக் கட்சி தன்னை மக்கள் முன் நியாயப்படுத்திக் கொண்டது.

பதிலுக்குத் தம்மைத் திருடன் என்று விழிக்கும் மகிந்த அணியினருக்குப் பதிலடியாக மகிந்த தான் திருடன் என்றும் கூவியாயிற்று.

சுதந்திரக் கட்சியோ, இரு திருட்டுக் கும்பல்களுக்கு இடையிலான சச்சரவு இது என்பதைப் போன்று நாடாளுமன்றத்தில் ஒதுங்கியிருந்தது.

பொது நிகழ்வு ஒன்றில் பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதே கருத்தை வெளிப்படையாகவே தெரிவித்தார்.

இரு தரப்பினரும் தாம் திருடர்கள் இல்லை என்பது போன்று நடந்து கொண்டாலும் யார் திருடர்கள் என்பது மக்களுக்குத் தெரியும் என்கிற தொனி அவரது பேச்சில் தெரிந்தது.

அதன் ஊடாகத் தானும் தன்னைச் சார்ந்த சுதந்திரக் கட்சியினருமே புனிதமானவர்கள் என்பதையும் அவர் சொல்லாமல் சொல்ல முயன்றார்.

ஆரம்பத்தில் மகிந்த அணியினர் பக்கம் இருந்தவர்களும் ஊழல் மோசடிக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுமான பலர் தன்னுடன் இன்னும் இருக்கிறார்கள் என்பதை அவர் மறந்திருக்கக்கூடும்.

என்றாலும் தூய்மையான அரசியல், நேர்மையான அரசியல் என்கிற முழக்கங்களுடன் அவர் இந்தத் தேர்தலை எதிர்கொள்ளப் பார்க்கிறார். அதனாலேயே மகிந்த அணியினரையும் ஐக்கிய தேசியக் கட்சியினரையும் மோத விட்டு விட்டு அவர் புனிதனாக ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்கிறார்.

இந்த மோதலை நாடாளுமன்றத்தில் நடந்த அடிதடி என்று தமிழர்கள் வெறுமனே ஒதுக்கி விட்டுப் போய்விட முடியாது.

புதிய அரசமைப்பு ஒன்று நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வரப்படுமாக இருந்தால் அப்போது என்ன நடக்கும் என்பதற்கான முன்னோட்டமாகவே இதனைக் கொள்ள வேண்டும்.

புதிய அரசமைப்பு ஒன்று கொண்டு வரப்பட்டு அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போதும் மகிந்த தரப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் இவ்வாறே மோதிக் கொள்ளும் அடித்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

அப்போதும் ஜனாதிபதியும் அவரைச் சார்ந்த சுதந்திரக் கட்சியினரும் இந்தப் பிரச்சினைக்கும் தமக்கும் சம்பந்தம் ஏதும் இல்லாததைப் போன்று வேடிக்கை மட்டும் பார்த்து நிற்பார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம்.

கூட்டு அரசு, வரலாற்றில் கிடைத்த மிக முக்கிய வாய்ப்பு என்பனவெல்லாம் தமிழர்களின் பிரச்சினை விடயத்தில் சிங்களக் கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் ஒரு பொருட்டேயல்ல என்பதையே தற்போதைய சச்சரவுகளும் முரண்பாடுகளும் தெளிவாகச் சொல்கின்றன.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com