தமிழ் සිංහල English
Breaking News

கோட்டாபய ராஜபக்சவை கைது செய்தால் பொங்கியெழுவோம்..!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் எழுந்து குரல் கொடுப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது.

நாட்டில் எந்த பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்ப அங்கத்தவர்களை பலிகொடுக்கும் பழக்கம் ராஜபக்ச குடும்பத்தினருக்கு இல்லை என்றும் அந்தக் கட்சி தெரிவிக்கின்றது.

ஒன்றிணைந்த எதிரணியின் பங்காளிக் கட்சிகளில் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு – இராஜகிரியவிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்றது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு அவரது குடும்ப அங்கத்தவர்களே சூழ்ச்சி செய்வதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்தமை தொடர்பான தென்னிலங்கை அரசியல் களத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார்.

“கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான சூழ்ச்சிக்குப் பின்னால் அவரது குடும்ப அங்கத்தவர்களே இருப்பதாக முதலமைச்சர் ஒருவர் கூறியிருக்கின்றார். சிலவேளை அதிர்ஷ்ட இலாபச் சீட்டு போல அவருக்கு இந்த முதலமைச்சுப் பதவியும் அப்படியே கிடைத்திருக்கிறது.
இரண்டாவது, ராஜபக்ச குடும்ப அங்கத்தவர்கள் பதவிகள், வரப்பிரசாதங்களுக்கும், நாட்டை விற்பனை செய்கின்ற இலாபங்களுக்காக சகோதரத்துவத்தை பலிகொடுக்கும் குடும்பத்தினர் அல்லர். சகோதரத்துவத்தை அழித்துக் கொள்கின்ற குடும்பத்தினர் அல்லர்.

எது எவ்வாறாயினும் ராஜபக்ச குடும்பம் என்பது சகோதரத்துவத்தை விட்டுக்கொடுக்காத குடும்பமாகும். அதனால்தான் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்சவும், பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்சவும் இணைந்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்கள். எனினும் அந்தப் பொறுப்புக்களை இருவரும் சரிவர நிறைவேற்றினார்கள்.

இன்று ஏதாவது ஒரு துரும்பை விட்டு கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய முயற்சிக்கிறார்கள். கோட்டாய ராஜபக்சவை கைது செய்தால் அதற்கெதிராக இந்த நாட்டிலுள்ள பிரஜைகளும் அதேபோல ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள ஓர் உறுப்பினராகிலும் எழுந்து குரல் கொடுப்பார்கள்” என்றார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com