தமிழ் සිංහල English
Breaking News

சரித்திரங்களை மூடி மறைத்து மக்களை ஏமாற்ற முடியாது.!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை ”B” தரத்திலிருந்து  அண்மையில் “A” தரத்துக்கு தரம்   உயர்த்தப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம். கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சில வைத்தியசாலைகள் அண்மையில் “ஏ” தரத்துக்கு தரமுயர்த்தப்பட்ட போது, அதில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என்பது யாவரும் அறிந்ததே.
இதனை அறிந்த சம்மாந்துறை மக்கள் சம்மாந்துறை அரசியல் வாதிகளின் இயலாமையை தூற்றினர். இதனால் சம்மாந்துறை அரசியல் வாதிகள் அனைவரும் சம்மாந்துறை வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.
மிகவும் பழமை வாய்ந்ததும் பல வரலாறுகளையும் கொண்ட சம்மாந்துறை வைத்தியசாலை 1982ஆம் ஆண்டு மாவட்ட வைத்தியசாலையாகவும், 2007ஆம் ஆண்டு ஆதார வைத்தியசாலையாகவும் தரமுயர்த்தப்பட்டது. குறிப்பாக இவ்வைத்தியசாலையானது சம்மாந்துறை, நாவிதன்வெளி, காரைதீவு போன்ற பிரதேசங்களை சேர்ந்த சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவையினை வழங்கிவருகிறன்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிழக்கு மாகாண சபையின் நிருவாகத்தின் கீழ் இயங்கிவரும் இவ்வைத்தியசாலை பல்வேறு வளப்பற்றாக்குறையுடனும், ஆளணிப் பற்றாக்குறையுடனும் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கிழக்கு மாகாண சபையிலே சில வருடம் சுகாதார அமைச்சராக இருந்த தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ மன்சூர் அப்போது இந்த வைத்தியசாலையினை தரமுயர்த்த எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அப்போது அவரிடம் அரசியல் அதிகாரம் இருந்தும் அது கைகூடாமல் போனமை அவரது இயலாமையாகும்.
விசேடமாக சம்மாந்துறை வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டவர் ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் ஹசன் அலி என்பது ஊரறிந்த உண்மையாகும். கடந்த 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையை தரமுயர்த்தி அபிவிருத்தி செய்வதற்கான பணிகளில் அவர் மிகத்தீவிரமாக ஈடுபட்டார்.
அதற்கமைவாக கடந்த 2015ஆம் ஆண்டு நல்லாட்சியின் 100நாள் வேலைத்திட்டத்தில் அவ்வைத்தியசாலை அபிவிருத்தி சம்மந்தமாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை முன்னாள் தலைவர் எம்.வை.எம்.முஸ்தபா, சம்மாந்துறை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஏ.அஸீஸ், கல்முனை பிராந்திய சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன், வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எஸ்.எம்.றஷீட் உள்ளிட்ட குழுவினருடன் ஹசன் அலி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தித்தார்.
அப்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையை தரமுயர்த்தி அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார். அப்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன சம்மாந்துறை வைத்தியசாலையை தரமுயர்த்தி அபிவிருத்தி செய்வதற்கு இனக்கம் தெரிவித்திருந்தார். இந்த வைத்தியசாலை தரமுயர்த்துவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளர் ஹசனலி தனக்கு இயலுமான முயற்சிகளை முன்னெடுத்தார் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
எது எவ்வாறாயினும் சம்மாந்துறை வைத்தியசாலை உட்பட மூதூர், கிண்ணியா வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவராக இருந்த உதுமாலெப்பை தனிநபர் பிரேரணைகளையும், பல கேள்விகளையும் கிழக்கு மாகாண சபையிலே சமர்ப்பித்து உரையாற்றியும் உள்ளார். அப்போது மாகாண சபை உறுப்பினர்களான அமீர் மற்றும் மாஹிர் போன்றோர் உதுமாலெப்பையின் பிரேரணைக்கு ஆதரவாகவும் பேசியுள்ளனர்.
சம்மாந்துறை ஐ.தே.கவின் அமைப்பாளர் ஹசன் அலியின் அழைப்பின் பேரில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அண்மையில் சம்மாந்துறைக்கு வருகை தந்த போது, சம்மாந்துறை வைத்தியசாலையினை தரமுயர்த்துவதற்கு உதவுமாறு அவரிடம் ஹசன் அலி வேண்டுகோள் விடுத்தார். அப்போது சம்மாந்துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சுகாதார அமைச்சர் ராஜிதவுடன் பேசி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தெரிவித்தார்.
இதேவேளை சம்மாந்துறையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. மன்சூர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல். மாஹிர் ஆகியோர் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீமினூடாகவும் சம்மாந்துறை வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கு முயற்சிகளை செய்தனர். சில நாட்கள் கழித்து சம்மாந்துறை வைத்தியசாலை “ஏ” தரத்துக்கு தரமுயத்தப்பட்ட செய்தி வெளிவந்தது. பலருடைய கூட்டு முயற்சிக்கு கிடைத்த குழந்தைதான் சம்மாந்துறை வைத்தியசாலையின் தர முயர்த்தலே தவிர தனி ஒரு கட்சியினுடையதோ அல்லது தனி நபரினுடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றியல்ல. இது ஒரு கூட்டு முயற்சி என்பதே வெளிப்படையான உண்மையாகும்.
வரலாறுகள் இவ்வாறு இருக்க சம்மாந்துறையை சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் தன்னுடைய வேண்டுகோளின் பெயரிலேயே சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை தர முயர்த்தப்பட்டதென மக்கள் முன் காட்டுவதற்கு முற்படுகிறார். அதே நேரம் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் மாஹிரை புறக்கணித்து அது தனது சேவை எனவும் மக்கள் மத்தியில் காட்டி அரசியல் செய்ய முனைவதாகவும் பரவலாக பேசப்படுகிறது.
இந்த செயற்பாடானது இவர்களுக்கே இதனை யார் செய்தது என்பதில் தெளிவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. இவர்கள், தானே செய்தேன் என நினைப்பதைப் போன்றுதான், பலருடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெயர் சூட்டிக் கொள்ள முயற்சி செய்கிறது. இது ஊரா கோழியை அறுத்து உம்மா பேரில் கத்தம் ஓதும் செயற்பாட்டைப் போன்றதாகும்.
எனவே சம்மாந்துறை வைத்தியசாலை வரலாற்றை நன்கறிந்த பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் மற்றும் மாஹிர் போன்றோர் தற்போது கூட்டு முயற்சியை தங்களது முயற்சி என காட்ட முனைவது வேடிக்கையாகும். ஆனால் ஹசன் அலி என்கின்ற அதிகாரமில்லாத ஒரவர் இதனை தனது முயற்சி என்றோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் முயற்சி என்றோ காட்டுவதற்கு ஒருபோதும் முற்படவில்லை. இது அவரது பெருந்தன்மையை வெளிப்படுதியுள்ளது.
சம்மாந்துறை வைத்தியசாலை தரமுயர்வு தொடர்பான கடிதத்தினை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு எனவும், இந்த விடயம் பூரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் சாதித்த சாதனை போன்று சித்தரிப்பதற்கு அண்மையில் பெரும் விழாவொன்றும் நடாத்தப்பட்டது. குறித்த வைத்தியசாலை தரமுயர்த்தல் கடிதத்தை பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரிடம் பிரதி அமைச்சர் பைசல் காசீம் கையளிப்பது போன்று ஒரு புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது. இது தேர்தலுக்கான ஒரு நாடகமே தவிர வேறொன்றுமில்லை.
சம்மாந்துறை வைத்தியசாலையை தரமுயர்த்தும் கடிதம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு  அனுப்பப்பட வேண்டுமே தவிர, அது பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரிடமோ அல்லது வேறு யாரிடமோ வழங்க வேண்டிய அவசியமில்லை. இது அவர்கள் ஊடக மாயையை ஏற்படுத்த செய்த ஒரு விடயமாகவே இன்று பார்க்கப்படுகிறது.
இருந்த போதிலும் சம்மாந்துறை வைத்தியசாலை தரமுயர்வு தொடர்பான வரலாறுகளை மறந்துவிட்டு தான் மாத்திரம் தான் செய்தது என ஒரே கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், மாகாண சபை உறுப்பினரும் முட்டிமோதிக்கொள்வது. அதனை அவர்கள் யாரும் செய்யவில்லை என்பதனை எடுத்துக்காட்டுகிறது. இந்த விடயம் சமூக வலயத்தலங்களில் நையாண்டிற்குட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தரமுயர்த்தல் பேச்சுக்கள் வருவதற்கு சில நாட்கள் முன்பே இது தொடர்பில் அமைச்சர் கிரியல்லையை கூட்டி வந்து, சம்மாந்துறையிலேயே மக்கள் முன் பேச வைத்த ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் ஹசன் அலி, சம்மாந்துறை வைத்தியசாலை தரமுயர்த்தப்படவில்லை என அறிந்ததும் சும்மா இருந்திருப்பாரா? என்பதும் ஒரு கேள்வியாகும்.
ஊரா கோழியை அறுத்து யார்தான் உம்மா பேரில் கத்தம் ஓத முற்பட்டாலும் சரித்திரங்களை மூடி மறைத்து மக்களை ஏமாற்ற முடியாது என்பதுதான் உண்மையாகும்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com