தமிழ் සිංහල English
Breaking News

ஜிந்தொட்ட கலவரம்: இன்னுமொரு அத்தியாயம் !

ஏ.எல்.நிப்றாஸ்

கிணற்றுக்குள் விழுந்த பூனையை வெளியில் எடுக்காமல், நூற்றுக்கணக்கான வாளி தண்ணீரை வெளியில் இறைத்தாலும் நாற்றம் போகாது என்று ஒரு முறை வீரகேசரி கட்டுரையில்  எழுதி யிரு ந்தேன். அதுதான் இன்று நிதர்சனமாகிக் கொண்டி ருக்கின்றது.

இனவாத மனநிலையையும், நச்சுக் கருத்துக்களை விதைப்போiரையும் களத்தில் இருந்து அகற்றி, சட்டப்படி தக்கபாடம் படிப்பிக்காமல் மக்களுக்குள்ளேயே நடமாடவிட்டுக் கொண்டு, எல்லாம் நடந்து விட்ட பிறகு பாதுகாப்பை பலப்படுத்துவதாலும் ஊரடங்கு பிறப்பிப்பதாலும் அறிக்கை தயாரித்து அதை அப்படியே பைல்களுக்குள் போட்டுவிடுவதாலும், இந்த நாற்றத்தை – இனவாத அழிவுகளை போக்கிவிட முடியாது என்பதையே ஜின்தோட்ட சம்பவம் மீள உணர்த்தியிருக்கின்றது.

மழை விட்ட பிறகும் தூவானம் விடவில்லை என்பதைப் போல பரந்துபட்ட இனவாத செயற்பாடுகள் நிறுத்தப்பட்ட பின்னரும், அவ்வப்போது கட்டவிழ்த்து விடப்படுகின்ற காட்டு மிராண்டித்தனங்கள் மீண்டும் ஒரு பெரும் இனச் சம்ஹார மழையை கொண்டு வந்து விடுமோ என்ற கவலையை சமூகநல செயற்பாட்டாளர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.

அடிவாங்குவதற்கும் அடக்கி ஒடுக்கப்படுவதற்கும் என்று நிர்ணயிக்கப்பட்ட ஒரு சமூகம் போல முஸ்லிம்கள் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அபலைப் பெண்கள் அடைக்கலம் தேடி ஓடிச் சென்ற இடத்தில் அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகமும் அநியாயமும் இழைக்கப்படுவதைப் போல, மஹிந்த ஆட்சியிடமிருந்து பாதுகாப்புத் தேடி முஸ்லிம்கள் வந்து சேர்ந்த நல்லாட்சியும் கூட நல்லபடி நடந்து கொள்ளவில்லை. தலையிடிக்கு தலையணையை மட்டும் மாற்றி விட்டோமோ என்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.

‘ஏர் உழுகின்றவன் இளப்பமானால் எரிது மச்சான் முறை கொண்டாடும்’ என்பதைப் போல, முஸ்லிம்களின் மத உணர்வின் மீதும், வக்கற்ற அரசியல்வாதிகளின் இயலாமையின் மீதும் பேரினவாதமும் சிற்றினவாதமும் பெருந்தேசியவாதமும் சர்வதேசமும் தீ வளர்க்கின்றன, முஸ்லிம்களின் மதத்தலங்கள், வீடுகள் சொத்துக்கள் பற்றியெரிகின்ற போது அதிலிருந்து தமக்கு தேவையான ‘கொள்ளிகளை’ பிடுங்கிக் கொள்கின்றன. 92 சதவீதம் எழுத்தறிவுள்ள ஒரு நாட்டில் ஒரு சாதாரண பொது மகனே இதற்குப் பின்னாலிருக்கின்ற ஆட்டுவிப்போர் யார் என்பதை புரிந்து கொள்வார்கள்.

ஆட்சிமாற்ற பின்புலம்

இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கான முதலாவது காய் நகர்த்தலே தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரம். அதன்பிறகு நாட்டில் ஆட்சிமாற்றம் வேண்டும் என்ற சிந்தனையை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மக்கள் மத்தியில் சந்தைப்படுத்துவதற்காக கொழுத்தப்பட்ட திரிதான், அளுத்கமையிலும் பேருவளையிலும் இனவாத ஒடுக்குமுறையாக கலவரமாக தீப்பிடித்தது. இவை இரண்டு சம்பவங்களும் வெளிச் சக்திகளின் எந்த தலையீடும் உள்நோக்கமும் இல்லாமல் இயல்பாகவே இடம்பெற்றிருக்குமானால், தம்புள்ளைப் பள்ளி விவகாரம் உடனே தீர்க்கப்பட்டிருக்க வேண்டும், அளுத்கமை கலவரத்தின் சூத்திரதாரிகள் சட்டத்தின் பிடிக்குள் இறுக்கப்பட்டிருப்பதுடன் பாதிக்கப்பட்டோருக்கு போதுமான இழப்பீடும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரையும் இது நடக்கவில்லை என்பதே, இதற்கு பின்னாலுள்ள நிகழ்ச்சி நிரல்களை உய்த்தறிந்துகொள்ள போதுமானது.

ஆகவே, தமது இனம், மதம் தொடர்பாக முஸ்லிம்களுக்கு இருக்கின்ற உணர்வெழுச்சியை மூலதனமாகக் கொண்டே மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சியைப் பிடித்தது என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது. அப்படியிருந்தும் சட்டமும் அரசாங்கமும் வாக்குறுதியளித்தது போல னவாதிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை முடியவில்லை என்பதே யதார்த்தமாகும். அதைச் சரியாக செய்திருந்தால் இன்று ஜின்தோட்டை கலவரம் ஏற்பட்டிருக்க வாய்பில்லாது போயிருக்கும்.

இரண்டு அசம்பாவிதங்கள்

கடந்தவாரம் தெற்கிலும் வடக்கிலும் முஸ்லிம்களுக்கு எதிரான இரண்டு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. பிரதமரை பிணைமுறி ஆணைக்குழுவுக்கு முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையில் சிங்களவர்கள் செறிந்து வாழும் ஜின்தோட்டையில் பெரும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

அதேநேரம், ‘முஸ்லிம்களில் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள், மத்திய கிழக்கில் இருந்து வந்து குடியேறியவர்கள் என இரு பிரிவினர் இருக்கின்றனர். இதில் மத்திய கிழக்கில் இருந்து வந்தவர்களே வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்’ என்றும், ‘இவர்கள் தமது மதத்தை முன்னிலைப்படுத்துவதோடு தம்மை ஒரு தனி இனமாகவும் காட்ட முற்படுகின்றனர்’ என்று வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கடும் விமர்சனத்திற்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்தார் (அது பற்றி தனியே எழுத வேண்டும்). இதனால் முஸ்லிம்கள் மனமுடைந்திருந்த நிலையில் வவுனியா பள்ளிவாசல் வளாகக் கடைகள் தீயில் கருகின. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை என்றாலும், முஸ்லிம்கள் இவற்றை மிகவும் கூர்ந்து கவனித்திருக்கின்றனர்.

காலி, ஜின்தோட்டை கலவரம் உண்மையிலேயே தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது. ஒரு சிறிய தீப்பொறியை ஒரு நாசகாரன் கையில் எடுத்தால் ஊரையும் கொளுத்தலாம் என்பதற்கு இது மிகப் பிந்திய உதாரணமாகும். அதாவது, ஜிந்தோட்டையில் இடம்பெற்ற ஒரு விபத்தும் அதன்போது சிங்களவர்களும் முஸ்லிம்களும் நடந்துகொண்ட விதமும் இன்று கணிசமான அழிவுக்கு வித்திட்டுள்ளது மட்டுமன்றி பிரதேசத்தில் இனங்களுக்கு இடையிலான நல்லெண்ணத்திலும் கீறல் விழுந்திருக்கின்றது.

இப் பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் தாய் மற்றும் அவரது பிள்ளை மீது ஒரு சிங்கள மோட்டார் சைக்கிளோட்டி மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடியுள்ளார். அவர் விட்டுச் சென்ற சைக்கிளை எடுப்பதற்காக வந்த அவரது நண்பர் அடாவடித்தனமாக பேசியதால் வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த முஸ்லிம் ஒருவர் அவ்விளைளுனை ஒரு தடவை தாக்கியதாக சொல்லப்படுகின்றது. பின்பு பொலிஸ் மத்தியஸ்தத்துடன் இவ்விடயம் ஓரளவுக்கு சமரசப்படுத்தப்பட்டாலும் பின்னர் சில சிங்கள காடையர்கள் விதானகே வீதியில் வைத்து முஸ்லிம்கள் சிலரை தாக்கியுள்ளார். அதற்கு பதில்தாக்குதல் நடத்த முஸ்லிம் இளைஞர்கள் முயன்றிருக்கின்றனர். இதுதான் கலவரத்தின் ஆரம்பப் புள்ளி.

விபத்து இடம்பெறுவதும் அதன் பின்னர் விபத்தை ஏற்படுத்தியவரை பொதுமக்கள் தாக்குவதும் வழக்கமாக நடப்பதுதான். ஆனால், ஒரு சிங்கள இளைஞனை முஸ்லிம் இளைஞன் தாக்குகின்ற போது, அது ஒரு தனிப்பட்ட விடயமாக கருதப்படலாம் அல்லது ஒரு இனம் இன்னுமொரு இனத்தை தாக்குவதாகவும் பெரிதுபடுத்தப்படலாம் என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இந்த அடிப்படையில் நோக்கினால் முஸ்லிம் ஒருவர் அந்த வாயாடி இளைஞனை தாக்கியது தவறு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால், முஸ்லிம் இளைஞன் சிங்களவரை தாக்கியது எப்படி தனிப்பட்ட விவகாரமோ, அதுபோல அவ்விளைஞனும் பதிலுக்கு தாக்கியிருந்தால் அதுவும் தனிப்பட்ட பிரச்சினையாகவே இருந்திருக்கும். தவிர ஒரு குழு மோதலாக ஆகியிருக்காது. ஆனால், சிங்கள இளைஞர் குழுவினர், சம்பந்தமேயில்லாத முஸ்லிம்;களை தாக்கியதும் இன மேலாதிக்க சிந்தனை என்பதுடன், அதற்கு பதில் தாக்குதல் நடத்த முஸ்லிம் இளைஞர்கள் முயற்சி செய்தார்கள் என்பது உண்மையென்றால் அது ஒரு பொறுப்பற்ற செயற்பாடு என்றே கருத வேண்டியுள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில் அங்குள்ள ஒரு பௌத்த தலத்தில் 17ஆம் திகதி மாலையில் ஒரு முக்கிய கூட்டம் இடம்பெற்றதாகவும் அங்கு சில திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்றும் முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்கள் சந்தேகிக்கின்றனர். அதன்பின்னர், பாதுகாப்பு தளர்த்தப்பட்ட சில மணிநேரத்தில் அதாவது இரவு 9 மணியளவில் ஒரு சில உள்ளுர் சிங்கள இளைஞர்களும் பெருமளவிலான வெளியூர் காடையர்களும் பல அணிகளாக பிரிந்து ஜின்தோட்டையின் முக்கிய வீதிகளின் ஊடாக ஊருக்குள் ஊடுருவி முஸ்லிம் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.

ஆரம்பத்தில், முஸ்லிம் இளைஞன் அறைந்தது சந்தர்ப்ப சூழ்நிலை என்றால், பிறகு சிங்கள இளைஞர் குழு சில முஸ்லிம்களை தாக்கியது சண்டித்தனம் அல்லது இன மேலாதிக்கம் என்று சொன்னாலும், இவ்வாறு ஆட்களை திரட்டிக் கொண்டு வந்து மேற்படி விபத்துடனோ முறுகலுடனோ சம்பந்தப்படாத அப்பாவி பொதுமக்கள் மீதும் அவர்களது சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடாத்தியது சந்தேகத்திற்கு இடமின்றி இனவாத வன்முறையாகும்.
இதற்குப் பின்னால் அரசியல்வாதிகள் இருந்தார்களா, கடும்போக்கு துறவிகள் இருந்தார்களா என்பது நமக்கு தெரியாது, ஆனால் சாதாரண சிங்கள மக்கள் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் முஸ்லிம்களின் வீடுபுகுந்து தாக்கவோ சேதப்படுத்தவோ மாட்டார்கள் என்பதை வைத்துப் பார்க்கின்ற போது, இதற்காக ஆட்கள் திரட்டுவது முதற்கொண்டு பெருமளவிலான நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவே கருத முடிகின்றது. மறுபுறத்தில் பதில் தாக்குதலாக முஸ்லிம்களால் சிங்களவர் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல்கள் திட்டமிட்டவை அல்ல என்றாலும் அவை சாதாரணமானவை என எடுத்துக் கொள்ளவும் இயலாது.

ஒரு வீதிவிபத்தில் ஆரம்பித்த இவ்விவகாரம், நீண்டதொரு பட்டியலிலான அழிவுகளை தந்துவிட்டே அடங்கியிருக்கின்றது. இவ்வன்முறைகளில் ஆகக்குறைந்தது 5 பேர் காயமடைந்துள்ளனர் 81 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, 04 பள்ளிவாசல்கள், 18 வர்த்தக நிலையங்கள், 16 வாகனங்கள் எரித்தும் நொருக்கியும் நாசமாக்கப்பட்டிருக்கின்றன. 8 திருட்டுச் சம்பங்களையும் பொலிஸார் பதிவு செய்திருக்கின்றனர்.

வேடிக்கை பார்த்த சட்டம்

இலங்கையைப் பொறுத்தமட்டில் இனக்கலவரங்கள், இனப் பிரச்சினை பற்றிய நிறைய அனுபவங்களைப் பெற்றிருக்கின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டே சட்டம் ஒழுங்கு விதிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், ஜின்தொட்டவில் வன்முறைகள் தாண்டவமாடிய வேளையில் பாதுகாப்பு தரப்பினர் கடமையில் இருந்தாகவும் அவர்கள் கண்டும் காணாது போலவும் சில இடங்களில் நடுநிலையற்ற விதத்திலும் நடந்து கொண்டதாக பிரதேசவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆரம்பத்தில் இது ஒரு வழக்கமான குற்றச்சாட்டு என்றே சிங்கள ஆட்சிச்சூழல் கருதியது. ஆனால் பாதுகாப்பு தரப்பினர் கடமையை சரியாகச் செய்யவில்லை என்பது இன்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி, பொலிஸ் தரப்பே அதனை ஒத்துக் கொண்டுள்ளது.

‘இவ் வன்முறையின் போது பொலிஸாரும் மதத் தலைவர்களும் தமது பொறுப்பில் இருந்து தவறியிருக்கின்றனர்’ என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார். ‘இந்த அசம்பாவிதத்தை கட்டுப்படுத்தும் விடயத்தில் பொலிஸ் உள்ளிட்ட பல தரப்பினர் தோல்வியடைந்து விட்டதை நான் பொறுப்புடன் ஏற்றுக் கொள்கின்றேன்’ என்று நாட்டின் பொலிஸ் மா அதிபரே பகிரங்கமாக சொல்லியிருக்கின்றார்.

பொலிஸ் தரப்பு தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை பெற்றுள்ளமை மிகவும் நல்லதே. ஆனால், ‘தடுக்கவில்லை’ என்றும் ‘தடுக்க முடியாமல் போய்விட்டது’ என்றும் நாட்டின் பாதுகாப்பு தரப்பினர் கூறுகின்றமை பல்வேறு கேள்விகளையும் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வையும் குறிப்பாக சிறுபான்மையினருக்கு ஏற்படுத்தியிருக்கின்றது என்றால் மிகையில்லை.

அளுத்கம கலவரத்தை சந்தைப்படுத்தி வெற்றிபெற்ற நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்றது. ‘இனவாதிகளை பிடித்துக் கூட்டில் அடைப்போம்’ என்றவர்கள் இப்போது உயர் அதிகாரத்தில் இருக்கின்றார்கள். இதற்கிடையில் ஜின்தொட்டயில் இரு நாட்களாக கலவரசூழல் நிலவுகின்றது. முஸ்லிம்கள் மீதும் சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகின்றது. ஆனால், உலகில் மிகவும் பலமான போராட்ட இயக்கமான விடுதலைப் புலிகளை அடக்கிய பாதுகாப்பு படையினரால், சில விஷமிகளை, காடையர்களை உடன் கட்டுப்படுத்த முடியாமல் போகின்றது… என்பது மிகப் பெரிய முரண் நகை இல்லையா?

அரசாங்கத்தின் கடமை

இவ்வாறான இனமுறுகல்களை கடந்த அரசாங்கத்தை விட சற்று ஆறுதலளிக்கும் விதத்தில் இந்த அரசாங்கம் கையாள்கின்றது என்று ஒரு தோற்றப்பாடு இருந்தாலும், அளுத்கமையில் இடம்பெற்றதும் ஜின்தொட்டவில் இடம்பெற்றதும் ஒரே வகையான இன ஒடுக்குமுறைதான். அளவுகள், பரிமாணங்கள் வேறுபட்டிருந்தாலும் கூட அளுத்கமையில் தூக்கப்பட்ட ஆயுதமே, காலியிலும் தூக்கப்பட்டிருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.

இப்போது வழக்கம்போல பல பொலிஸ் குழுக்கள் அமைத்து விசாரணை நடைபெறுகின்றது. 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு இழப்பு வழங்கப்படும் என்று அரசாங்கம் சொல்லியுள்ளது. ஆனால், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் உள்ளடங்கலாக விதிவிலக்கின்றி எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் இதற்கெதிராக அறிக்கை விடுகின்றார்களே தவிர ஆட்சியாளர்களின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பதற்கு திராணியற்றிருப்பதையே காண முடிகின்றது.

சிங்கள வாக்குகளை நம்பியிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தம்மை இனவாதியாக சிங்கள மக்கள் பார்த்து விடுவார்கள் என்ற பயம், வேறு சிலருக்கு பைல்கள் பற்றிய பயம், இன்னும் சிலருக்கு நமது நமக்கேன் வீண்வம்பு என்ற எண்ணம்! இவ்வாறு முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்திற்காக எதையும் துறக்க தைரியம் அற்றவர்களாக இருப்பதாலேயே இன்னும் இவ்வாறான இழப்புக்களை முஸ்லிம்கள் சந்திக்க வேண்டியது விதியென்றாகி இருக்கின்றது.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் பொதுபலசேனாவை முன்னிறுத்திய இனவாத செயற்பாடுகள் உச்ச நிலையை அடைந்த சந்தர்ப்பத்தில் சமரசமே செய்ய முடியாத அளவுக்கு கடும்போக்குள்ள ஞானசார தேரருடன் முஸ்லிம் தரப்பு இணக்கப் பேச்சில் ஈடுபட்டது. அல்லது அவ்வாறான ஒரு வியூகம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது எந்தளவுக்குச் சென்றதென்றால், முஸ்லிம்களிற்கு எதிரான அநியாயங்களை சட்டரீதியாக எதிர்கொண்ட ஆர்.ஆர்.ரி. அமைப்பை பிழைகாணும் அளவுக்கு நிலைமைகள் சென்றன. ஆனால், அதன் பயன் பூச்சியம் என்றே, ஞானசார தேரர் கடந்தவாரம் தெரிவித்துள்ள கருத்துக்கள் பட்டவர்த்தனமாக உணர்த்துகின்றன.

இதேவேளை, தெற்கில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளால் நாடெங்கும் முஸ்லிம்கள் துணுக்குற்றிருந்த வேளையில் வவுனியா பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள கடைகள் தீப்பிடித்து எரிந்திருக்கின்றன அல்லது எரிய விடப்பட்டிருக்கின்றன. இது விபத்தாக இருக்கலாம் என்றே ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால் கடை தீப்பிடிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் சம்பவ இடத்திலிருந்து ஒருவர் ஓடிச்சென்றதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. அத்துடன் அதற்கு முன்னர் இப்பகுதியில் ஒரு ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக இன்னும் முழுமையான விசாரணைகளை முடிவடையவில்லை என்பதுடன் ஜின்தொட்ட வன்முறை மாதிரி ஒரு இனத்தை இலக்காக வைத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக கூறவும் முடியாது. வடக்கில் பெருமளவிலான தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கு சார்பாகவும் சகோதர மனப்பாங்குடனும் நடந்து கொள்கின்ற போதும், ஓரிருவர் அதற்கு மாற்றமாக நடந்து கொள்வதாக சொல்லப்படுகின்றது. எனவே இவ்விடயங்களை கோர்வையாக நோக்குகின்ற வடபுல முஸ்லிம்கள் இது ஒரு இன ரீதியான பாகுபாட்டின் வெளிப்பாடாக இருக்குமோ என்று சந்தேகிக்கின்றனர். எனவே, விரைந்து நடவடிக்கை எடுத்து இனஉறவை பாதுகாக்க வேண்டும்.

முன்னைய ஆட்சியில் இனவாதம் தலைவிரித்தாடிய போது மஹிந்ததான் இதன் பின்னணியில் நிற்கின்றார் என்று ஐ.தே.கட்சி கூறியது. இன்று அக்கட்சியே ஆட்சியில் உள்ளது. ஆனால், முன்னைய வன்முறைகளுக்கு முழுமையான பரிகாரமோ இழப்பீடோ வழங்கப்படவில்லை என்பதுடன், பழைய கதையின் அடுத்தடுத்த அத்தியாயங்கள் ஒரு தொடர்கதைபோல அரங்கேறிக் கொண்டிருப்பதையும் காண முடிகின்றது. எனவே, இன்றைய ஆட்சியாளர்களே இதற்குப் பின்னால் இருக்கின்றார்கள் என்று கூட்டு எதிரணி சுட்டு விரல் நீட்டுகின்றது.

எவ்வாறிருப்பினும், தெற்கிலும் வடக்கிலும் நடக்கின்ற சம்பவங்கள் நல்லதற்கல்ல. அதற்காக முஸ்லிம்கள் செய்வது எல்லாம் சரி என்றும் சிங்களவர்களும் தமிழர்களும் செய்வது மட்டுமே பிழையென்றும் யாராலும் கூற முடியாது. முஸ்லிம்களும் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், முன்னைய அரசாங்கம் போன்று, ஒரு முட்டுச் சந்திற்குள் சென்று மாட்டிக் கொள்ள நேரிடும்.

இதுவிடயத்தில், பொறுப்புவாய்ந்தவர்கள் ஒளித்து மறைத்து விளையாட முடியாது!

– ஏ.எல்.நிப்றாஸ்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com