தமிழ் සිංහල English
Breaking News

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரிக்கு திடீர் விஜயம்..!

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரிக்கு நேற்று (2) திங்கட்கிழமை திடீர் விஜயம் செய்து அக்கல்லூரியின் குறைபாடுகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி யளித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் இத்திடீர் விஜயத்தின்போது குறித்த கல்லூரி அதிபர் எஸ்.எம். இஸ்மாயிலிடம் கல்லூரியின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

இப்பாடசாலையின் கேட்போர் கூடம் புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டுமென அதிபர் தெரிவித்ததோடு மஹிந்தோதய திட்டத்திற்கமைவாக அமைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான ரசாயனப் பொருட்கள் கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவித்தார். அத்தோடு பாடசாலை நுழைவாயிற் கோபுரத்தையும் அமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

அதற்கமைவாக பாடசாலை நுழை வாயிற் கோபுரத்தை அமைப்பதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து தருவதாகவும் பாடசாலை கேட்போர் கூடம் புனர்நிர்மாணம் செய்வதற்கும், ஆய்வு கூடத்திற்கான ரசாயனப் பொருட்களை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் இதன்போது உறுதியளித்தார்.

மேலும் பிரதி அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் இப்பாடசாலையின் மைதானத்தில் மேற்கொள்ளப்படும் பார்வையாளர் இருக்கை அமைக்கும் வேலைத்திட்டத்தை பார்வையிட்டு அவ்வேலைத்திட்டம் பூரணப்படுத்தப்பட வேண்டிய விதம் தொடர்பில் அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார். அத்தோடு நவீன வகையிலான விஷேட பார்வையாளர் அரங்கினை நிர்மாணித்துத் தருவதாகவும் வாக்குறுதியளித்தார்.

இதன்போது இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம் நசீர், இறக்காமம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மௌலவி யு.கே. ஜபீர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹமீட், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.எல்.எம். முஸ்தபா, எம்.எஸ். உமர் அலி, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com