தமிழ் සිංහල English
Breaking News

சமூகங்களிடையே பிளவு ஏற்பட்டால் ஆட்சியாளர்களுக்கு நிருவாகம் நடத்துவது சுலபம்..!

வல்பொல ராகுல நிறுவனத்துக்கு பொறுப்பான துறவியும் மற்றும் களனிய பல்கலைக்கழக விரிவுரையாளருமான வண.கல்கந்தே தம்மானந்த தேர, டெய்லி மிரருடனான ஒரு நேர்காணலில் சொல்லியிருப்பது, மதத் தலைவர்கள் முதலில் பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று. புத்த மதத் தலைவர்கள்  முழு சமூகத்தினதும்  நலனை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன் மற்றும் மக்கள் சரியானதை சிந்திப்பதற்குரிய திறனை ஊக்கப்படுத்த வேண்டும் என்று தம்மானந்த தேரர் உறுதிப்படுத்தினார்.

“தற்போதைய அரசியலமைப்பை மாற்றி அதற்குப் பதிலாக புதியதை மாற்றீடு செய்யும் முயற்சி முந்தைய தவறுகளைத் திருத்துவது, ஒரு சமாதானம் மற்றும் நல்லிணக்கமுள்ள சமூகத்தை நிறுவுவதை நோக்கிய நடவடிக்கைகளில் ஒன்று” என்று அவர் சொன்னார். அவரது நேர்காணலில் இருந்து சில பகுதிகள் இங்கே தரப்பட்டுள்ளன.

  • கேள்வி: பௌத்த பீடங்கள் மூன்றினதும் பிரதம மத குருக்கள் புதிய அரசியலமைப்பை நிறுவுவது, நாட்டில் மேலும் மோதல்களை உருவாக்கும் என்று ஊகித்து அதனை எதிர்க்கிறார்கள். அதற்குப் பதிலளிக்கும் விதமாக முன்னணி பௌத்த பிக்குகளைக் கொண்ட மற்றொரு குழுவினர், குடிமக்களால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு புதிய அரசியலமைப்பின் வரைவை மேற்கொள்வதை அரசாங்கம் தொடரவேண்டும் என்று சொல்கிறார்கள். இதுபற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: இந்த வாதத்தில் மிக முக்கியமான ஒரு கருத்தை நாங்கள் தவறவிட்டுள்ளோம். அது குடிமக்கள் விவேகமான தர்க்கரீதியான தெரிவை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு வலுவூட்டவும் மற்றும் எழுச்சியூட்டவும் வேண்டும் என்பது.

கடந்த காலங்களில் அநேக கொள்கைகள் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அடிமட்டத்தில் உள்ள மக்கள் அவற்றின் கருத்தினை பற்றி அறிந்து கொள்வதற்கு ஏற்ற முதிர்ச்சியினை பெற்றிராத காரணத்தால், அவை குறைவான பயனையே தந்தன. பெரும்பான்மையான மக்கள் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற ஒரு நீண்ட போரினால் அடிபட்டு சீரழிந்துள்ள ஒரு சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்பதை கட்டாயம் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பிரச்சினைகளுக்கான தீர்வு யுத்தம் என்பதை பௌத்தம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. தம்மபதத்தின் ஒரு வசனம் சொல்வது, “ஜெயம் வேரம் பசவதி, துக்கம் செத்தி பராஜித்தோ, உபசந்தோ சுகம் செத்தி, ஹிதவா ஜெய பராஜயம்”. அதன் அர்த்தம் “வெற்றி பகைமையை விளைவிக்கிறது, வெற்றி கொள்ளப்பட்டவர் துயரத்தில் வாழ்கிறார் மற்றும் வெற்றி மற்றும் தோல்வி இரண்டையும் துறந்ததே சமாதானமான வாழ்வு” என்பதாகும்.

ஆகவே யுத்தம் என்பது முடிவில் துயரமடைந்து புலம்பும் ஒரு மக்கள் குழுவை ஒரு புறம் உருவாக்குவதுடன் மறுபுறத்தில் வெறுப்புணர்ச்சியை வளர்க்கும் மற்றொரு மக்கள் குழுவை உருவாக்குகிறது. இந்த போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தினை நாங்கள் குணப்படுத்தி வலுவூட்டுவதுடன் அவர்களின் மனங்களில்; அமைதியை உருவாக்க வேண்டும். இது மக்கள் தங்கள் எதிர்காலம் தொடர்பாக சரியான முடிவை எடுப்பதற்கு உதவி செய்யும்.

  • கேள்வி: தற்சமயம் நாட்டுக்கு ஒரு புதிய அரசியலமைப்பு அவசியமா?

பதில்: அரசியலமைப்பில் ஒரு மாற்றம் என்பது கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக எதிர்பார்த்த ஒன்று. தேர்தல் சமயங்களில் பெரும்பான்மையான அரசியல் கட்சிகளின் ஒரு முக்கிய வாக்குறுதியாக இது எப்போதும் இருந்து வந்துள்ளது. அநேகமான சமயங்களில் மக்கள் இந்த கருத்தை ஆதரித்துள்ளார்கள்.

ஒரு அரசியலமைப்பு மக்களுக்குச் சொந்தமானது. தற்போதைய முயற்சியை கருத்தில் கொள்ளும்போது,  மக்களுக்கு தங்கள் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் பிரதிநிதிகள் தெரிவுக்குழுவுக்கு நாடு முழுவதிலும் இருந்து 4,000 க்கு மேற்பட்ட தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் வாய்மொழியாகவும் மற்றும் எழுத்துமூல பிரதிநிதித்துவம் மூலமாக முன்வைத்துள்ளார்கள்.

இதை அவர்கள் தெரிவுக் குழுவுக்கு முன்பாக முன்னிலையாகியும், மின்னஞ்சல்,தொலைநகல் மற்றும் கடிதங்கள் மூலமாகவும் தெரிவித்திருந்தார்கள். மகாநாயக்க தேரர்களுக்கும் அவர்கள் விரும்பியிருந்தால் அரசியலமைப்பு எவ்வாறு அமையவேண்டும் என்கிற தங்கள் பரிந்துரைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

ஒரு விசேஷ சமூகப் பிரிவினைச் சேர்ந்தவர்கள், புதிய அரசியலமைப்புக்கான உருவாக்கத்தை மேற்கொள்ள வேண்டாம் என  அரசாங்கத்தை வலியுறுத்துகிறார்கள் என்றால், பொதுமக்கள் முன்வைத்த சமர்ப்பிப்புகளை அது புறக்கணிக்கிறது என்று அர்த்தமாகிறது. அது ஆரோக்கியமான ஒரு சமூகத்துக்கான அடையாளம் அல்ல. இது ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள அவமானம். பொதுமக்களின் கருத்தை விரிவாகப் பெற்று கவனமாக வரைவு செய்யப்பட்ட கூட்டான ஒரு ஆவணத்தை நிராகரிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை.

ஒரு அரசியலமைப்பு சமத்துவம், நீதி மற்றும் ஜனநாயகம் எனபனவற்றை மேம்படுத்துகிறது, அது குடிமக்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்பது முக்கியம். எண்ணற்ற உட்கட்டமைப்பு முன்னேற்றங்கள் மட்டும் சிதைவடைந்துள்ள மக்களின் மனங்களைக் குணப்படுத்திவிட முடியாது.

தற்போதைய அரசியலமப்புக்குப் பதிலாக, முந்தைய தவறுகள் அனைத்துக்கும் தீர்வு காணும் சாத்தியமுள்ள புதிய ஒன்றை நிறுவுவதுதான் சமாதானமும் நல்லிணக்கமும் உள்ள ஒரு சமூகத்தை நிறுவுவதை நோக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

  • கேள்வி: புதிய அரசியலமைப்பின் கீழ் பௌத்த மதத்துக்கு அனுசரணை வழங்கப்படாது என்று சமூகத்தில் உள்ள ஒரு குழுவினரால் ஊகிக்கப்பட்டு வாதிக்கப்பட்டதினால், இந்த விடயம் முக்கியத்துவம் பெற்றது, புதிய அரசியலமைப்பு என்பது இன்னமும் ஒரு முற்றுப்பெறாத ஆவணமாகவே உள்ளது, பொது மக்களுக்காக அது இன்னமும் வெளியிடப் படவில்லை. இந்த தாக்கத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்.

பதில்: முக்கியமாக முதலில் குறிப்பிடப்படும் இந்த புதிய அரசியலமைப்பு இன்னமும் ஒரு முற்றுப்பெறாத ஆவணமாகவே உள்ளது. இன்னமும் இறுதி செய்யப்படாத ஒரு அறிக்கை தொடர்பாக கணிப்புகள் செய்யவேண்டிய அவசியமில்லை. மற்றும் இந்த புதிய அரசியலமைப்பின் வரைவு நகல் அது நாட்டின் அரசியலமைப்பாக நிறுவப்படுவதற்கு முன்னர் ஒரு பொதுசன வாக்கெடுப்பிற்கு உட்பட்டது. இந்த பய மனோபாவம் இன்னும் முழுமையாக உருவாக்கப்படாத ஒரு திட்டத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு ஒரு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. எந்தவித கருத்தையும் வெளியிடுவதற்கு முன்னர் அரசியலமைப்பில் முக்கிய இடம் வழங்கப்பட்டதின் விளைவாக அதற்கு என்ன ஆதாயம் கிடைத்துள்ளது என்பதைப் பற்றி நாம் ஆராய வேண்டும்.இந்த முக்கியத்துவம் அகற்றப்பட்டால் பௌத்தம் எதை இழக்கும்?

ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்காக பௌத்த தத்துவங்களில் இருந்து தம்ம மற்றும் வினய சித்தாந்தங்களைப் பிரித்தெடுப்பதில் தவறொன்றுமில்லை. பௌத்தத்துக்கு முதன்மை ஸ்தானம் வழங்கி அரசின் அனுசரணையை பெறுவதில் அர்த்தம் என்ன உள்ளது என்பதை நாமும் தெளிவாக அடையாளம் காணவேண்டியது அவசியம்.

ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பௌத்த தத்துவத்தை கவனத்தில் எடுத்தால் அதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். ஆனால் பௌத்த மதத்துக்கு முக்கிய இடம் வழங்குவதன் அர்த்தம் என்ன எனபதை நாம் தெளிவாக வரையறை செய்யவேண்டும்.

நாம் மதத் தலைவர்கள் என்றால் நம் வரலாற்றின் தோல்வி ஒரு இரத்தக்களரியை உருவாக்கியதைப் பற்றி உணர்வுடன் இருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் இழந்த வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்பட வேண்டுமே தவிர, மாறாக வெறுமே அவர்களின் துக்கங்களை கவனத்தில் எடுப்பதுடன்  நிதிவழங்கி; ஒரு மத ஸ்தலத்துக்கு உதவி செய்வது அல்ல.

எல்.ரீ.ரீ.ஈ தாக்கதலின் போதும், அதேபோல 1980 களின் போதும்; கொல்லப்பட்ட பிக்குமார்களின் எண்ணிக்கையையும் மற்றும் இழந்த அவர்களின் உயிர்களையும் கருத்தில் கொள்ளுங்கள். மதத் தலைவர்கள் என்கிற வகையில் வரலாற்றுத் துயரத்தக்கு வழிவகுக்கக் கூடிய தற்போதைய சமூக அரசியல் சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள தவறுகளை திருத்துவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் மக்களை அறிவாளிகளாக பலப்படுத்த வேண்டும், அதனால் அவர்களால் சரியானவற்றை சிந்திக்க முடியும். மதத் தலைவர்கள் என்கிற வகையில் எங்கள் அக்கறை யாவும்  பொதுமக்கள் நலன்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும்.

  • கேள்வி:; பௌத்த மத குருமார் அரசியலில் ஈடுபடுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: 1940 இலேயே இது விவாதத்துக்கு வந்தது. பிக்குகளின் அரசியல் மற்றும் ஒரு அரசியல் பிக்கு ஆகிய இரண்டும், இரண்டு வேறுபட்ட சித்தாந்தங்கள். எனது ஆசிரியரான வல்பொல ராகுல தேரர், 1940ல் இந்த விவாதத்தைக் கொண்டு வருவதில் முன்னிலை வகித்தார். அதேநேரத்தில் துறவறத்தின் எளிய வாழ்க்கை மற்றும் சோசலிசத்தின் கொள்கைகள் என்பன ஒற்றுமையை பகிர்கின்றன என்கிற ஒரு கருத்து உள்ளது.

சுதந்திரத்தை பெற்றுக்கொள்ளும் விளிம்பில் வண.யக்கடுவ பிரகனாராம மகாதீர, வல்பொல ராகுல தேர, கலல்ல ஆனந்த சாகர தலைமையிலான பிக்குகள் குழு மற்றும் பலரும் சேர்ந்து பௌத்த தத்தவத்துவம் மற்றும் இடதுசாரி அரசியல் சிந்தனைகள் என்பனவற்றின் அடிப்படையில் ஒரு கருத்தியலை முன்வைத்தார்கள். கிராமப்புற ஸ்ரீலங்காவாசிகளின் குரலுக்கு அவர்கள் முக்கியத்துவம் வழங்கினார்கள். பொதுமக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பிக்குகள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதே அவர்களது எண்ணமாக இருந்தது.

பிக்குகள் தங்கள் உரிமைகளைக் கோரக்கூடாது ஆனால் மக்களுக்கு சிறப்பாக சேவை செய்வதற்காக அதிக இடமும் மற்றும் அதிகாரமும் கோரமுடியும் என வல்பொல ராகுல தேரர் எப்போதும் வலியுறுத்தி வந்தார்.

இது பிக்குகளின் கடமைகள் என அவர் வலியுறுத்தினார். அதே நேரத்தில் இந்தக் குழு இலவசக் கல்வி நிறுவப்படுவதை  ஊக்குவித்து உறுதிப்படுத்தியதை அதன் சாதனை என்றே சொல்ல வேண்டும். 1950 களில் இந்தக் கரு முற்றாகத் தோல்வியடைந்திருந்தது. அதிகாரத்தை அடைவதற்காக பௌத்த பிக்குகளை அரசியலில் பயன்படுத்தும் ஒரு சகாப்தம் தோன்ற ஆரம்பித்தது. அதன்பின் ஒரு பௌத்த பிக்குவின் வாழ்க்கை 1940களில் இருந்த பழைய நிலைக்கு ஒருபோதும் திரும்பவில்லை.

தற்போதைய சூழலில், சமூகத்திலுள்ள ஒரு பிரிவினர் பௌத்த மதத்துக்கு ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள், அந்தக் கூற்றில் ஒரு அரசியல் நோக்கம் உள்ளது. அந்தக் கருத்து பௌத்த பிக்குகள் ஊடாக திட்டமிடப்படுகிறது. இது பௌத்த பிக்குகளைப் பயன்படுத்தி பொதுமக்கள் மத்தியில் ஒரு பயந்த மனோபாவத்தை வளர்ப்பதற்காகப் செயற்படுத்தப் படுகிறது.

தேர்தல் போன்ற முக்கிய தருணம் வரும்போது, அரசியல் நோக்குடன் பின்னால் நின்று செயற்படுபவர்கள் முன்னால் வந்து தாங்களே இரட்சகர்கள் எனக் கூறுவார்கள். பொதுமக்களிடையே பிளவினை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சி நீண்ட கால திட்டத்தின் ஒரு படியாகும். ஆனால் பௌத்த பிக்குகளாகிய எங்களது கவலை அவர்கள்  எந்தப் பிளவு அல்லது அரசியல் பார்வை என்பனவற்றை கருத்தில் கொள்ளாது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே.

  • கேள்வி: புதிய அரசியலமைப்பை உருவாக்குவதை நோக்கி எதிர்;ப்புகள் கிளம்பியுள்ள அதேவேளை, சமூகத்தின் மற்றொரு குழுவினர் புதிய அரசியலமைப்பை பயன்படுத்தி மாற்றங்களுக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்காவிட்டால்,1956ல் சிங்களம் மட்டம் சட்டத்தை நிறுவிய பின்னர் தொடர்ந்த சம்பவங்களைப் போல ஸ்ரீலங்கா மற்றொரு வழி தெரியாத பாதை முடிவினை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று வலியுறுத்துகிறார்கள். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: கடந்த காலத்தில் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான பாடங்கள் உள்ளன. வரலாறு மீண்டும் திரும்புவதை நாங்கள் அனுமதிக்கக் கூடாது. சிங்களம் மட்டும் சட்டம் மற்றும் கறுப்பு ஜூலை என்பன துயரங்கள், அவை ஒருபோதும் திரும்பவும் வரக்கூடாது. ஆகவே அரசாங்கம் பொதுமக்களின் அபிப்ராயத்தை தேடியதன் பின்னர் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முயற்சித்தால் அதற்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம்.

பொதுமக்களின் கருத்தை தேடுவதில் தோல்வி ஏற்பட்டால் அது பிரதானப்படுத்தப்பட வேண்டும்.  குடிமக்களின் பரிந்துரை ஊடாக வழங்கப்படும் ஒரு தீர்வை புறக்கணிப்பதற்கான உரிமை யாருக்கும் இல்லை. மறுபுறத்தில் அரசியலமைப்பு போன்ற ஒரு சிறப்பான விஷயத்தில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு எங்கள் மதத் தலைவர்கள் அவ்வளவு தகுதி படைத்தவர்களா? அந்த துறையில் உள்ள நிபுணர்களால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும்.

  • கேள்வி: சிறுபான்மை மதங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அவற்றில் பௌத்த பிக்குகளின் ஈடுபாடு என்பன பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: பொது மக்களிடையே பயத்தை உருவாக்குவது மிகவும் எளிது. இந்தப் பிரச்சினையில் இரண்டு காரணிகளை பிரதானப்படுத்த வேண்டும், மற்றைய மதங்களுக்கு சொந்தமான நபர்களால் காணிகள் அபகரிக்கப் படுவது மற்றும் அதன் விளைவாக பௌத்த தொல்பொருள் இடங்கள் அழிக்கப் படுகின்றன. இந்தக் காரணம் உண்மையானது.

ஆனால் இது முஸ்லிம் மக்கள் அல்லது சிறுபான்மை மதங்களுக்கு சொந்தக்காரர்களாக உள்ளவர்களினால் மட்டும்தான் நடத்தப்படுகிறதா? அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவ பகுதிகளில் அநேக பௌத்தர்கள், பௌத்த தொல்பொருளியல் இடங்களில் குடியிருக்கிறார்கள். இதற்கான முக்கிய காரணம் சனத்தொகை பெருகி வருவதால் மக்கள் வாழ்வதற்கு எற்ற காணிகள் குறைவாக இருப்பதுதான். சமூகங்களிடையே பிளவு ஏற்பட்டால் ஆட்சியாளர்களுக்கு நிருவாகம் நடத்துவது சுலபம்.

  • கேள்வி: ஒரு சமூகத்தில் மதங்களும் மற்றும் மதத் தலைவர்களும் பெரிதும் அரசியல்மயப் படுத்தப்பட்டிருந்தால், நீங்கள் விரும்பும் மாற்றம் உண்மையாக இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: அது ஒரு சவால். இருப்பினும் அது எத்தனை கடினமானதாக இருந்தாலும், மக்கள் புத்திசாலித்தனமாக சிந்தப்பதற்கு நாங்கள் அதிகாரமளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதேவேளை வருடக்கணக்காக வெவ்வேறு சமூகங்களுடன் தொடர்பு கொண்டதின் மூலம் படிப்படியாக ஏற்படும் மாற்றத்தை நான் அவதானித்துள்ளேன்.

சாதிய, இன அல்லது சமூக பிளவுகள் இல்லாத சமாதானமும் நல்லிணக்கமும் உள்ள சமுதாயத்தில் வாழ விரும்பும் பல இளம் பௌத்த பிக்குகளை நான் சந்தித்துள்ளேன். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இளம் பௌத்த பிக்குகளினால் முன்வைக்கப் பட்ட ஒரு கருத்து என் மனதில் இடித்துரைத்தது. நவீன சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிக் கலந்துரையாடியபோது அவர்களில் பலரும் வலியுறுத்தியது சங்க சமூகத்தில் வழிகாட்டியாகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகருமான  ஒருவரைத் தங்களால் காண முடியவில்லை என்று.

மதத் தலைவர்களான நாம் எங்கள் இளம் பிக்குகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பதில் தோல்வி கண்டுள்ளோம். அது என்மனதில் தீவிரமான கவலையை ஏற்படுத்தியது. எங்கள் மதத் தலைவர்கள் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

எஸ்.குமார்

Share this post:

Recent Posts