தமிழ் සිංහල English
Breaking News

தொழில் சட்டத்தை மீறி வேலை வாங்குகின்ற நிறுவனங்கள் எராளம்..!

தொழிலாளர் வர்க்கத்தினது அரசியல் உரிமை எனக் கருதப்படுகின்ற மே தினத்தை இலங்கையின் பிரதான இரு அரசியல் கட்சிகளும் பலவந்தமாகவே சொந்தம் கொண்டாடி வருகின்றன. இது ஒரு துரதிஸ்டவசமானதும், அயோக்கியத்தனமான காரியமாகவும் கொள்ளப்பட வேண்டியது. இலங்கையின் இடதுசாரிக் கட்சிகளைப் பலஹீனப்படுத்தும் அரசியல் செயற்பாட்டின் ஒரு அம்சமாக இதனைக் கொள்ள முடியும்.

மே தினத்தின் நிறம் சிவப்பாகும். எனினும், இலங்கையில் சிவப்பு நிறம் பின்தள்ளப்பட்டு, நீல நிறமும், பச்சை நிறமுமே மேலோங்கியிருப்பது அதிருப்பதியான நிலைப்பாடாகும். பாரியளவிலான நிதியை செலவு செய்து இந்த இரு பிரதான கட்சிகளும் மே தினத்தை தங்களது அரசியல் பலத்தை உரசிப் பார்க்கின்ற கண்காட்சியாக மாற்றிக் கொண்டுள்ளன. இந்த நடவடிக்கைகளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். மே தினப் போர்வையில் அரச அதிகாரத்தை பயன்படுத்தி இரு பிரதான கட்சிகளும் மாறி மாறி காட்டிவருகின்ற மக்கள் பலமானது உண்மையாகவே செயற்கையானதாகும்.

அரச அதிகாரமுள்ள கட்சியானது மே தினத்தின்போது தமக்குரிய அதிகாரத்தை மிகவும் பலமான முறையில் வெளிப்படுத்துகின்றது. ஊடகங்களையும் இதற்கெனப் பயன்படுத்துகின்றது. இடதுசாரிக் கட்சிகள், கட்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ள தலைவர்களையும், அந்த தலைவர்களுடன் ஒன்றிணைந்த மக்களையும் ஒன்றுதிரட்டியே காலகாலமாக மே தினங்களை அனுஷ;டித்து வருகின்றன. இந்த மே தினங்களின் போது கட்சி உறுப்பினர்கள் தங்களது விருப்பின் பேரிலேயே கலந்து கொள்கின்றனர். எப்போதுமே இடதுசாரிகளின் மே தினக் கூட்டங்களில் பொய்மையல்லாத மக்களைக் காணக்கூடியதாக இருக்கும். இதனை பலஹீனப்படுத்துகின்ற நோக்கில் பயண வசதிகளுக்கு மேலதிகமாக சாப்பாட்டு பார்சல்கள், மதுபானம் போன்றவற்றை வழங்குவதற்கான எற்பாடுகளை இந்த இரு பிரதான கட்சிகளே மேற்கொண்டன. இந்த நிலையில் கொழும்பிலோ அன்றி மே தினக் கூட்டங்கள் நடைபெறுகின்ற எந்த பகுதிக்கேனும் மக்கள் ஏதோ உல்லாசப் பிரயாணம் செல்வதைப் போன்ற உணர்வுடன் செல்லவே முற்படுகின்ற நிலை உருவாக்கப்பட்டது.

இந்த இரு கட்சிகளாலும் இன்று மே தினத்தைக் கைவிட இயலாத நிலையே எற்பட்டுள்ளது. இது உண்மையாகும். அதிகாரத்திற்காக வேண்டி தெரிந்தே செய்யக் கூடாதவற்றை இந்த இரு கட்சிகளும் செய்ய வேண்டி இருப்பதே இதற்குக் காரணமாகும். இரு பிரதான கட்சிகளில் ஒரு கட்சி மாத்திரம் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திய ஒரு நிலையைவிட மாறுபட்டதொரு நிலை இன்று காணக்கூடியதாக இருக்கிறது. அரச அதிகாரத்தினை இன்று இரு கட்சிகளுக்கும் எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடியதொரு நிலை இருக்கின்றது. இதனால், அரச நிதி மற்றும் அரச சொத்துக்கள் உத்தியோகப்பூர்வமான வகையில் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்ற நிலையே உருவாக்கம் பெற்றள்ளது. இந்த நிலையை குறைத்த மதிப்பிட முடியாது. இது பாரியதொரு குற்றமாகும். அரச நிதியையோ அரச சொத்துக்களையோ எந்தவொரு நடவடிக்கைக்காகவும் முறைகேடாகப் பயன்படுத்தப் போவதில்லை என இரு பிரதான கட்சிகளின் தலைவர்களும் கூறியிருந்தாலும் அதில் உண்மை கிடையாது. மே தினக் கூட்டங்களுக்கென எவரேனும் செலவு செய்தாக வேண்டும். பஸ்களுக்கு கட்டணங்கள் வழங்க வேண்டும். உணவு, குடிநீர், மதுபானங்கள் வழங்கப்பட வேண்டும். டீ சேர்ட், தொப்பிகள் வழங்கப்பட வேண்டும். இவை அனைத்தும் வானத்திலிருந்து வந்து விழுந்துவிடப் போவதில்லை. இதற்கென வர்த்தகர்களிடமிருந்து, கட்சிகளின் முக்கிய ஆதரவாளர்களிடமிருந்து பணம் பெற வேண்டும். அதன் பிறகு என்ன நடக்கும்? அவர்கள் கட்சிக்காக மே தினத்திற்கு செலவு செய்த பணத்தை மீள சம்பாதித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அரச மட்டத்திலான ஊழல், மோசடிகள் இந்த வகையிலேலே ஆரம்பிக்கின்றன. இன்று இந்த நாட்டையே ஆட்டிப்படைத்துள்ள மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குறித்து பகிரங்கமாக ஆராய்ந்து பார்க்கின்றபோது, அதற்குரிய உண்மை நிலையானது இவ்வாறான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே இருப்பதைக் கண்டு கொள்ளலாம்.

பொது மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்கக்கூடிய வகையில் கொள்கை ஒன்றினைத் தயாரித்து, அதனை செயற்படுத்துமாறே உழைக்கின்ற தொழிலாள வர்க்கத்தினர் தொடர்ந்து தங்களது கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். தங்களது உழைப்பினை வழங்குகின்ற மக்களில் பெரும்பாலானவர்களுக்கு இன்றுகூட போதுமான ஊதியங்கள் கிடைக்காத நிலையே காணப்படுகின்றது. இவர்களுக்கு சேமலாப நிதியோ, ஊழியர் நம்பிக்கை நிதியோ கிடையாது. ஒரே இடத்தில் தொழில் செய்தாலும் தொழில் உரிமைகள் குறித்து குரல் எழுப்புவதற்கும் இயலாது. தொழில் சட்டத்தை மீறி வேலை வாங்குகின்ற நிறுவனங்கள் எராளம் செயற்பட்டு வருகின்றன. இந்த மக்களுக்காக இவர்களது தலைவர்கள் வாழ்க்கைச் செலவினைக் குறைக்குமாறே எப்போதும் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நாட்டின் வாழ்க்கைச் செலவு குறைப்பு என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவுக்குரிய தேவையல்ல. இது முழு நாட்டு மக்களுக்குரிய தேவையாகும். ஊதிய அதிகரிப்பு என்பது உழைக்கும் குறிப்பிட்டதொரு மக்கள் சமூகத்திற்கு மாத்திரமே உரியதாகும். எனவே, வாழ்க்கைச் செலவினைக் குறைப்பதற்கான ஒரு கொள்கைத் திட்டத்தையே இரு பிரதான கட்சிகளும் வகுக்க முன்வர வேண்டும். அதனை வகுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். மக்களது வாழ்க்கைச் செலவினைக் குறைப்பதற்கு அர்ப்பணம் கொள்ளாத ஒரு அரசு மே தினத்தை கொண்டாடுவதானது மிகவும் சிரிப்புக்குரிய விடயமாகும். பொது மக்களுக்காக முன்னிற்பதென்பதும் நகைச்சுவையான விடயமாகும். அதே நேரம், மே தினத்தக்கென ஏழை மக்களை தவறான வழிகளின் ஊடாக ஒன்றுதிரட்டி காட்டப்படுகின்ற செயற்கையான மக்கள் பலத்தினுள் காணப்படுகின்ற மாயை குறித்தும் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசியல் மறுசீரமைப்பு குறித்த கல்வியை மக்களுக்கு வழங்குவதே இன்றைய இரு பிரதான கட்சிகள் மீதும் இருக்கக்கூடிய முக்கிய பொறுப்பாகும். அரசியல் ரீதியிலான மறுசீரமைப்பினை மேற்கொள்வதாக வாக்குறுதி வழங்கப்பட்டே 2015ம் ஆண்டு 08ம் திகதி புதியதொரு மாற்றத்திற்காக மக்களது ஆணை பெறப்பட்டது. இதன் பிரகாரம் புதியதொரு அரசிலாப்பு வகுக்கப்பட்டு, அதை நிறைவேற்றப் போவதாக இன்றும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் தொடர்ந்து வழங்கப்படுகின்ற வாக்குறுதிகளும் குறைந்தபாடில்லை. எனினும், இது தொடர்பில் காணக்கூடிய வகையில் எந்தவொரு ஏற்பாடுகளும் இல்லை.

மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பிற்கு முகங்கொடுத்தே புதியதொரு அரசிலாப்பினை நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பில் இரு பிரதான கட்சிகளும் இதுவரை என்னென்ன பணிகளைச் செய்துள்ளன? செய்யவுள்ள விடயங்கள் என்னென்ன? எதிர்பார்க்கப்படுகின்ற விடயங்கள் என்னென்ன? இது தொடர்பில் இரு பிரதான கட்சிகளுக்கும் கைவிட முடியாத பாரிய பொறுப்புகள் உள்ளன.

புதிய அரசிலாப்பிற்கு எதிரான சக்திகள் இனவாதத்தினைக் கக்கியவாறு நிலையானதொரு நோக்கத்தைக் கொண்டு அமைப்பு ரீதியாக செயற்பட்டு வருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அதே நேரம், அரசும் எதையுமே செய்யாது அந்த இனவாத சக்திகளின் செயற்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற ஒரு நிலையையும் காணக்கூடியதாக உள்ளது. இதனது முடிவு என்ன?

புதியதொரு அரசிலாப்பினை வகுப்பதும், அதனை நிறைவேற்றிக் கொள்வதும் இலகுவான விடயங்களல்ல. எவ்வளவுதான் முற்போக்கான அல்லது வரவேற்கக் கூடிய வகையில் புதியதொரு அரசியலாப்பு வகுக்கப்பட்டாலும் அதனை மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பிற்கு முன்வைத்து அதற்குத் தேவையான மக்களது ஆணையைப் பெறுவதென்பதும் இலகுவான விடயமல்ல. எனவே, இந்த விடயம் தொடர்பில் இரு பிரதான கட்சிகளும் ஒரே அர்ப்பணிப்புடன் முன்னின்று மக்களுக்கு உரிய அறிவையும், புரிந்துணர்வையும் வழங்க வேண்டும். எனினும், இது தொடர்பில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து இதுவரையில் உரிய பட்டியலொன்றினை தயாரித்ததாக இல்லை.

எனவே, மே தினத்தை அடிப்படையாகக் கொண்டு பாரியளவிலான மக்களை ஒன்றுதிரட்டி, செயற்கையான மககள் பலத்தைக் காட்டி பொய்யான மகிழ்ச்சியை அனுபவிப்பதைவிட, அதனூடாக தமது அரசியல் கட்சிகளை கட்டியெழுப்புகின்ற விடயத்தைவிட, நாட்டைக் கட்டியெழுப்புகின்ற விடயத்திற்கு முன்னுரிமை கொடுத்து அதன் பொறுப்பினை ஏற்று இரு பிரதான கட்சிகளும் அர்ப்பணிப்புடனும், நேர்மையாகவும் செயற்பட வேண்டும்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com