தமிழ் සිංහල English
Breaking News

சினிமா உலகின் போலித்தனங்களிலிருந்து நடிகர் மம்முட்டி எப்போதும் தனித்துத் தெரிபவர்..!

சினிமா உலகின் போலித்தனங்களிலிருந்து நடிகர் மம்முட்டி எப்போதும் தனித்துத் தெரிபவர். அவரது ஆர்ப்பாட்டமில்லாத, அலட்டலில்லாத, அமைதியான நடிப்பில் எப்போதும் எனக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அவரது தோற்றத்திலேயே ஒரு கண்ணியம் இருக்கும்.

அவருடைய தன்வரலாற்று நூலான ‘மூன்றாம் பிறை வாழ்பனுபவங்கள்’ நண்பர் Naushard Mahrooff மூலம் எதேச்சையாக நேற்றிரவு என் கரம் கிட்டியது. இது ஆசுகவி அன்புடீனின் புத்தகம் ( Nafla KL). இப்போது இதைத்தான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் கே.வி.ஷைலஜா மொழிபெயர்த்திருக்கிறார். அருமையான மொழிபெயர்ப்பு.

தமிழ் சினிமா நடிகர்கள் வெட்கப்படுமளவுக்கு மம்முட்டி என்ற மனிதரை, மிக இயல்பாக இதில் சந்திக்க முடிகிறது. தனது பலவீனங்களை அவர் சொல்லிக் கொண்டு செல்லும் விதம் அற்புதமாக இருக்கிறது

முதல் அத்தியாயத்தின் தலைப்பு: ‘பிடிக்காமலிருந்த என் பெயர்.’ அதிலிருந்து சில வரிகள்:

“கல்லூரியில் எல்லோரும் மம்முட்டி என்று கூப்பிடும்போது இந்தப் பெயர் சரியில்லையே என்ற எண்ணம் என்னுள் ஓடிக் கொண்டே இருக்கும். என்னுடைய அப்பாவின் அப்பா பெயர் முகம்மது குட்டி. அப்படி பரம்பரை வழியாகத்தான் எனக்கு இந்தப் பெயர் வந்திருந்தது. ஆனாலும் மம்முட்டி எனும் பெயரின் யதார்த்த வேர் தீர்க்கதரிசியான முகம்மதிலிருந்தே வந்திருந்தது.
….

“முதல்முதலாக என்னைத் தேடி வந்த சினிமா வாய்ப்பு இந்தப் பெயரில்தான் வந்தது. மஞ்ஞேரியில் அட்வகேட் பி.எ. முகம்மது குட்டி என்ற பெயர்ப்பலகை வைத்திருந்த நாட்களில் ஒரு மத்தியான வெயிலில் போஸ்ட்மேன் விசாரித்தபடியே வந்தார். அவருடைய கையில் அட்வகேட் மம்முட்டிக்கொரு கடிதம் இருந்தது. இப்படி ஒரு வக்கீலை அந்த ஏரியாவில் போஸ்ட்மேன் அறிந்தவரில்லை.

“ஜனசக்தி ஃபிலிம்சிலிருந்து எம்.டி. வாசுதேவன் நாயர் அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார்.இது எனக்காகத்தானிருக்கும் என்ற நம்பிக்கையில் நான் வாங்கினேன். கல்லூரியில் அதன் பழமை தன்மையை யோசித்து விட்டொழித்து விட வேண்டும் என்று நான் நினைத்த பெயர், இங்கே மீண்டும் என்னை சினிமாவிற்குக் கொண்டு செல்ல, தேடியலைந்து கண்டெடுத்தது.
….

“மனதால் வெறுக்கவும், எதிர்க்கவும், வேதனைப்படவும் வைத்த பெயர்தான் பிறகு என்னை எல்லோருக்கும் அறியப்பட வைத்தது. வெளிநாடுகளில் ‘மாம்டி, மம்உட்டி, மாமுட்டி’ என்றெல்லாம் பலரும் அழைத்தபோது அதன் அடிப்படையில் வடகேரளத்தில் மலபாரில் வயதான தேய்ந்துபோன உருவமும் பெயரும்தான் நினைவிற்கு வரும். அந்தப் பெயர் என்னைப் பல நேரங்களில் ஆள்கூட்டத்தில் தனியனாய் அடையாளப்படுத்திடவும், நெருங்கவும், கரைந்து உருகவும் உதவியது என்னவோ உண்மைதான்.
…..

“அப்பாவும் அம்மாவும் ‘மம்மது குஞ்ஞே’ என்று கூப்பிடும்போது அவ்வார்த்தையில் அதிக வாஞ்சை இருப்பதாய்த் தோன்றும். பெயர்களை நாம்தான் ப்ரியமானதாய் மாற்றிக் கொள்கிறோம். ஆனால், என் பெயர் எல்லோராலும் உச்சரிக்கப்பட்டு, உச்சரிக்கப்பட்டு எல்லோருக்கும் பிடித்தமானதாய் மாறியிருக்கிறது. அழைத்தலின் பின்னுள்ள அன்பும் வாத்சல்யமும்தான் பெயரைச் சந்தோஷமாக்குகிறது.”

பெயருக்குப் பின்னாலுள்ள இந்த சமூக-அரசியல் எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது பாருங்கள். மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரை ( Sajeeth Amsajeeth) எனக்கு மிகவும் பிடிக்கும். மம்முட்டியில் பஷீரின் சாயலைக் காண்கிறேன். இந்த நூலைப் படித்தவுடன் மம்முட்டி மனசில் உயர்ந்து தெரிகிறார்.

“மம்மது குஞ்ஞே” எண்ட மம்முட்டியே!

பிற்குறிப்பு:

01.கேரளாவில் முஸ்லிம் பெயர்களை அழைக்கும் பாணிக்கும், நமது பிரதேசத்தில் அதே பெயர்களை அழைக்கும் பழைய பாணிக்கும் இடையில் ஒரு நெருக்கம் இருக்கிறது. (உ-ம்) மம்மது, மம்மஸ்மாயில். Slm Hanifa.

02. இந்த நூலை வம்சி புக்ஸிடமிருந்து தருவித்து இங்கு பரவலாக்கினால் என்ன என்று படுகிறது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com